அவனும் நானும்-அத்தியாயம்-15

....அவனும் நானும்....

அத்தியாயம் : 15

அன்று கல்லூரிக்குள் நுழைந்ததிலிருந்தே அவளது விழிகள் அவனை மட்டுமாகவே தேடிக் கொண்டிருந்தன...ஆனால் அந்தத் தேடலுக்கான காரணம் என்ன என்பதைத்தான் அவளால் இன்னும் சரியாகவே புரிந்து கொள்ளவே முடியவில்லை....

ஆனந்தோடு கதைத்த பின்னர் தன் மனதில் தோன்றியிருந்த ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதில்களைத் தேடியவளுக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்...அவளுக்கு இந்த கண்டவுடன் காதலில் எல்லாம் என்றுமே நம்பிக்கையிருந்ததில்லை...அதனால்தான் என்னவோ அவன் மேல் அவளுக்குள் எழுந்த உணர்வுகளுக்கெல்லாம் பெயர் காதலென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளின் உள்ளம் தவித்தது...

அவனை அவள் இரண்டு தடவைகள்தான் பார்த்திருக்கிறாள்...ஓர்முறை அருகாய் ஓர் முறை தூரமாய் என்று மட்டுமாகவே பார்த்தவளின் மனதிற்கு அவ்வளவு எளிதாக ஒருவனால் நெருக்கமாகிக் கொள்ள முடியுமா என்ற கேள்வியே அவளுள் மீண்டும் மீண்டுமாய் எழுந்ததில் இதுதானென்று ஓர் முடிவிற்கு வரமுடியாமல் குழப்பத்திற்குள் சிக்கிக் கொண்டு முழித்தது அவளின் உள்ளம்...

அன்று ஆனந் சொன்னது போல் கண்ணை மூடி நன்றாக யோசித்தும் பார்த்துவிட்டாள்...ஆனாலும் அவனுரைத்தது போல் அவளால் எந்தவொரு முடிவையும் தெளிவாக எடுத்துவிட முடியவில்லை...இறுதியில் இனி அவனின் நினைவே வேண்டாம் என்ற முடிவோடுதான் இன்று கல்லூரிக்கே வந்திருந்தாள்...ஆனால் அறிவிற்கு ஆணித்தரமாய் அவனின் எண்ணங்கள் வேண்டாமென்று புரிய வைத்திட முடிந்த அவளால் மனதிற்கு புரிய வைத்திட முடியவில்லை...

என்னதான் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும்,அவள் உடலின் அத்தனை அணுக்களும் அவனுக்காய் ஏங்கத்தான் செய்தன...அவனின் அந்த இருவிழிப் பார்வைக்குள் சிறைப்பட்டுக் கொள்வதற்காய் அலைபாயத்தான் செய்தன...அதனால் இயன்றவரையில் தன்னை அடக்கி பார்வையை அவள் வேறுபுறமாய் திருப்ப முயன்ற நேரத்தில் அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளின் விழிகளைத் துளைத்துக் கொண்டு அவளிற்குத் தரிசனம் தந்தான் அவன்...

இருவருக்குமான இடைவெளி என்னவோ அதிகமாய்த்தான் இருந்தது...ஆனாலும் அவனின் பார்வை அந்த இடைவெளியைக் குறைத்து அவனிற்கு நெருக்கமாகவே வைத்துக் கொண்டது அவளை...எப்படி அவனிலிருந்து விழிகளைத் திசைதிருப்பிக் கொள்வதென்று தெரியாது முழித்துக் கொண்டிருந்தவளை இடையில் வந்து காப்பாற்றிக் கொடுத்தாள் அவளின் ஆருயிர்த் தோழி சௌமி...

அவள் இடையில் வந்து அவனை மறைத்தவாறு நின்ற பின்னர்தான் கீர்த்தனாவால் ஒழுங்காக மூச்சுவிட்டுக் கொள்ளவே முடிந்தது...அப்படியே அவளுக்குக் கதை கொடுத்தவாறே அவளுடன் திரும்பி நடந்தவள் ஏதோ ஓர் உள்ளுணர்வு தோன்றவும் தன்னை அறியாமலேயே திரும்பிப் பார்த்தாள்...அங்கே அவன் விழிகளில் அதுவரை நேரமும் இருந்த இதமான வருடல் போய் லேசான சினம் குடி கொண்டிருந்தது..ஆனால் அந்தச் சினம் கூட அவளை நோக்கியதாய் இல்லாமல் சௌமியை நோக்கியதாய் இருந்ததில்,முதலில் குழப்பிப் போனவள்..பின் அதற்கான காரணத்தை ஊகித்துக் கொண்டவளாய் உதட்டோரமாய் சிறு புன்னகையினை உதிரவிட்டுக் கொண்டாள்...

என்னதான் அவள் அப்போது அவனிடத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும்,மீண்டும் அவனின் விழிகளுக்குள் வீழ்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பமும் அவளிற்கு மீண்டும் மீண்டுமாய் அமையத்தான் செய்தது...அன்று மதிய நேர இடைவேளை முடிந்ததுமே அவர்கள் துறையின் செயற்குழுவினால் ஒழுங்கமைப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காய் அனைவருமே கேட்போர் கூடத்தினுள் குழுமியிருந்தார்கள்...அப்போது அங்கேதான் அவனுக்கும் அவளுக்குமான சந்திப்பு மீண்டும் நிகழ்ந்தது...அந்தச் சந்திப்பு அவனைப்பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது அவளிற்கு...

அனைவருமே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அங்கே கூடிவிட்டிருந்தாலும்,அவளின் சீனியர்கள் மீட்டிங்கை ஆரம்பிக்காமல் கே.கே என்ற ஒருவனுக்காய் காத்துக் கொண்டிருந்தார்கள்...அவன்தான் அச் செயற்குழுவின் தலைவனாம்...அவன் வந்ததுமே மீட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தது முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவளின் காதினில் அவள் விரும்பாமலேயே விழுந்து வைத்தது...

இறுதியில் அவர்களால் கே.கே என்று அழைக்கப்பட்டவனும்,ஒரு சிலரால் மட்டும் கிருஷ்ணா என்று அழைக்கப்பட்டவனும் சரியாக மீட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நேரத்திற்கு அவ் அரங்கத்தினுள் உள்நுழைந்தான்...ஆனால் முன்னதாகவே வந்து பத்து நிமிடங்களாய் அவனொருவனின் வருகைக்காக மட்டுமே காத்திருந்ததால் என்னவோ அனைவரின் பார்வையும் வாசலை நோக்கியதாகவே இருந்தது...

ஆனால் அங்கே அவளின் விழிகள் மட்டும் இதயத்துடிப்போடு இணைந்து படபடக்க ஆரம்பிக்க மற்றவர்களைப் போல் அவளது கண்களும் வாசலை நோக்கியதாய் திரும்பின...அவளின் இதயத்துடிப்பு அவளை ஏமாற்றவில்லை...ஆம் அங்கே அவன்தான் கம்பீரமான நடையோடு அவளை மட்டுமாகவே பார்த்தவாறு உள்நுழைந்து கொண்டிருந்தான்...அவனது உதடுகளில் ஓர்விதமான கேலி பூத்திருக்க,அவனது விழிகள் அவளிடத்தில் கேட்டன..."இப்போது மாட்டிக் கொண்டாயா...??..."என்று...அவளும் அந்தக் கள்வனின் கேலியினைப் புரிந்து கொண்டவளாய் மௌனமாய் தனக்குள்ளாகவே புன்னகைத்துக் கொண்டாள்...

அவன் உள்ளே நுழைந்து அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தது வரையில்தான் அவளின் நினைவில் உள்ளது...அதன்பின் அவன் என்ன பேசினான் என்று அவளிடத்தில் கேட்டால் அவள் திருதிருவென்றுதான் முழிக்க வேண்டும்...காரணம் அவள் தன்னையே மறந்தல்லவா அந்த ஒன்றரை மணித்தியாலங்களும் அவனை மட்டுமாகவே பார்த்துக் கொண்டிருந்தாள்...

அவனும் அப்போது அவள் விலகிச் சென்றதற்கு பழிவாங்குபவன் போல் விநாடிக்கொரு முறை அவள் மேலேயே பார்வையைப் பதிப்பித்த வண்ணம் பேசிக் கொண்டிருந்தான்...பின்வரிசையில் இருந்திருந்தாலாவது அவன் பார்வை வட்டத்திற்குள் இருந்து மறைந்திருப்பாள்...முன்வரிசையில் இருந்ததால் அதற்கும் வழியின்றி அவனிடத்தில் வசமாக மாட்டிக் கொண்டாள்...ஆனால் அப்போது அவளிற்குமே அவனிடத்திலிருந்து பார்வையை விலக்கத் தோன்றவில்லையென்பதே உண்மை...

அவனிடத்தில் ஏதோவோர் காந்தசக்தி இருப்பதாகவே தோன்றியது அவளிற்கு...இல்லையென்றால் அவள் என்னதான் அவனை விட்டு விலகிச் செல்ல வேண்டுமென்று நினைத்தாலும் மீண்டும் மீண்டுமாய் அவனிடத்தில்தானே அவள் வீழ்ந்து கொண்டிருக்கிறாள்...அவள்தான் ஈர்க்கப்படுகிறாளா...??..இல்லை அவன் அவளை ஈர்த்துவிடுகிறானா என்பதில் அவளுக்கு இன்னுமே குழப்பம்தான்...

இதே யோசனையாகவே இருந்தவளிற்கு இறுதியில் கேட்ட அனைவரினதும் கூக்குரல் சத்தம்தான் அவளை நடப்பிற்கு அழைத்து வந்தது...கூட்டம் நிறைவடைந்ததால் அனைவரும் கலைந்து சென்று கொண்டிருந்தனர்,அவனும் அவனின் நண்பர்களோடு கதைத்தவாறே வெளியேறிக் கொண்டிருந்தான்...ஆனால் வாசல் வரையிலும் சென்றவன்,அவனின் நண்பர்கள் அறியா வண்ணம் அவளிற்கு மட்டும் தெரியும்படியாக தலையை லேசாய் அசைத்து அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்...

அவனின் அந்தச் செய்கை அவளிற்கு மிகவும் பிடித்திருந்தது...ஆனால் என்ன அப்போது கூட அவன் உதட்டினில் புன்னகை வர மறுக்கின்றதே என நினைத்துக் கொண்டவள்,மனதினுள் அவனைக் கடுவன் பூனையென்று சொல்லி சிரிக்கவும் செய்தாள்...அச் சிரிப்பே கொஞ்சம் பெரிதாக தன்னைமீறித் தனியே புன்னகைத்துக் கொண்டிருந்தாள்...

அவள் தனியே சிரித்துக் கொண்டிருந்ததையே விசித்திரமாகப் பார்த்தவாறே அவளருகே வந்து நின்றாள் சௌமி...ஆனால் அவள் வந்து நின்றதையே கவனிக்காதவளாய் அவள் தன் போக்கிலேயே சிரித்துக் கொண்டிருக்கவும்,அவள் எதிரே போய் நின்று கொண்டு அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தாள்...அதில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டவள்,

"ஹேய் ஏன்டி..இப்படிப் பக்கதில வந்து பயமுறுத்துற..??.."

"யாரு நான் உன்னைப் பயமுறுத்துறனா...நீதான்டி இவ்வளவு நேரமாய் தனியாச் சிரிச்சிட்டிருந்து என்னைப் பயமுறுத்திட்ட..."

அப்போதுதான் தான் சுற்றுப்புறம் மறந்து சிரித்துக் கொண்டிருந்ததையே உணர்ந்தவளாய்...

"அது...நான்...நான் இப்போதான் வாட்சப்பில வந்த ஒரு ஜோக்கு வாசிச்சேன்...அதை நினைச்சு சிரிச்சிட்டிருந்தேன்..."

அவள் சொன்னதை பச்சைக் குழந்தை கூட நம்பிடாது...அவளின் தோழி நம்பிவிடுவாளா என்ன...

"வாட்சப்பில வந்த ஜோக்கை வாசிச்சு நீ இவ்வளவு நேரமாய் சிரிச்சிட்டிருந்த...இதை நான் நம்பனும்..ம்ம்..?"

அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே நிற்கவும்,

"இந்த இரண்டு மூனு நாளாவே நீ ஏதோ மார்க்கமாய்தான்டி இருக்க...ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் கதை சந்தைக்கு வராமலா போயிடும்..அன்னைக்கு இருக்குடி உனக்கு..."

அதற்கும் அவள் எந்த பதிலுமின்றி நிற்கவும் மேலே பேசுவதற்காய் வாயினைத் திறந்தவள்,அவர்களை நோக்கி ப்ரீத்தி வருவது தெரியவும் மௌனமாகிக் கொண்டாள்...

"ஹேய் மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறமும் இங்க நின்னு என்ன பண்ணிட்டிருக்கீங்க இரண்டு பேரும்...??..."

"ம்ம்...வாட்சப்பில வந்த ஜோக்கை வாசிச்சு சிரிச்சிட்டிருந்தோம்..."என்று கீர்த்தனாவை ஓர்விதமாய் பார்த்தவாறே கூறினாள் சௌமி...அவளின் பார்வை கீர்த்தனாவிற்குள் ஓர்வித குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த மௌனமாகவே நின்றாள் அவள்..

"சரி..சரி சிரிச்சது போதும் சீக்கிரமா வாங்க...பஸ்சுக்கு டைமாச்சு..."என்று அவர்களை கையோடே அழைத்துச் சென்றாள் ப்ரீத்தி..

பேரூந்தில் மூவருமே அமைதியாகவே சென்று கொண்டிருந்தனர்...ப்ரீத்தி போனில் பிசியாக இருந்ததில் அவர்களிருவரின் முக வாட்டத்தை கவனித்திருக்கவில்லை...ஆனால் கீர்த்தனாவின் உள்ளம்தான் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தது...

ப்ரீத்தியை அவள் கல்லூரியிலிருந்துதான் அறிவாள்...ஆனால் சௌமி அப்படியில்லை...அவர்களிருவருமே பால்ய காலத்திலிருந்தே தோழிகள்...இதுவரையிலும் சௌமி அவளிடத்திலிருந்து எதையுமே மறைத்ததில்லை...ஏன் அவளுமே அவளிடத்தில் அவன் அவளின் வாழ்க்கைக்குள் நுழையும் வரையிலும் அப்படித்தானிருந்தாள்...

இருவருக்குள்ளும் இரகசியம் என்பதே இதுவரையில் இருந்ததில்லை...முதற் தடவையாக அவளிடத்தில் அவளொன்றை மறைத்திருக்கிறாளென்றால் அது அவன் மேல் அவளிற்குத் தற்போது எழுந்திருக்கும் இந்த உணர்வினைத்தான்...அதற்கு காரணமும் இருந்தது...சௌமி இரகசியங்களைப் பாதுகாக்கத் தெரியாதள்...யாராவது கேட்டால் போதும் உடனே அந்த விடயத்தை உளறிவிடுவாள்...அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே அவனைப்பற்றிய எதையும் சௌமியிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்திருந்தாள் கீர்த்தனா...

இனி என்ன சொன்னாலும் அவள் சமாதானமாகப் போவதில்லையென்பதை அவள் உணர்ந்திருந்தாலும்,இப்போதும் அவள் அவனைப்பற்றி அவளிடத்தில் சொல்வதை விரும்பவுமில்லை...அதுவும் அவளே இன்னுமோர் சரியான தெளிவிற்கு வராத இந்த நிலையில் அவள் தன் மனதின் உணர்வுகளை அவளிடத்தில் பகிர்ந்து கொள்ள தயாராகவுமில்லை...

ஒருவேளை அவள் அதை அப்போதே சௌமியிடத்தில் கூறியிருந்தால்,எதிர்காலத்தில் அவள் சந்திக்கவிருக்கும் இக்கட்டான சூழலிருந்து மாட்டிக் கொள்ளாமல் தப்பித்திருப்பாளோ என்னவோ...ஆனால் காலம் இது இப்படித்தானென்று முடிவு செய்தபின் அவளால் மட்டும்தான் என்ன செய்துவிட முடியும்... அதனால் அவளும் வேறு வழியேதுமின்றி அக் காலத்தோடு இணைந்தே பயணிக்க ஆரம்பித்தாள்...

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (24-Oct-18, 1:58 pm)
சேர்த்தது : உதயசகி
பார்வை : 336

மேலே