அவளும் நானும்

ஓரந்தி மாலையில், அன்றே பருவமெய்திய இளம்பெண்ணாய் கதிரவன் தன் இளம் வெயிலால் உடல் சிலிரிக்கச் செய்து கொண்டிருந்தான் - ஓதக்காற்றின்ஈரத்துடன்...
அந்த காற்றின் வழி வந்த மணம் இழுத்த வாக்கில் சென்றடைந்தான், தாழம்பூ தோட்டத்தின் வேலியருகில்....
என்னைப்போல் பேரழகி எங்கேனும் கண்டதுண்டா என்று கர்வித்து அந்த இளங்காற்றில் தலையாட்டிக் கொண்டிருந்த தாழம்பூக்கள் யாவும் அவனது மனமாடச் செய்தன....
ஆண்டவன் படைத்த அதிசயம் இவையென ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான், அந்தத் தாழம் பூக்களையே....
இது நேரம் வரை அடிநிற்க இடம் தந்த ஆலமரமும், நிழல் தன்னை நீட்டித்துக் கொண்டிருந்தது கீழைத் திசை நோக்கி....
களைப்படைந்த கதிரவனை உசுப்பி விடும்படி ஓதக்காற்று சற்றே வேகமெடுத்தது. அந்த வேகத்தில் கழுத்தொடிந்த மலரொன்று மண் நோக்கி முகம் திருப்ப, சுய நினைவு வந்தவனாய் தலை தூக்கிப் பார்த்தான் - இந்த கற்பனையின் கதாநாயகன்....
கண்ட கணம் காதல் கொள்ள வைக்கும் கவி சிந்தும் இரு விழிகள், இது வரையில் அதிசயித்து சிலாகித்துக் கொண்டிருந்த தாழம்பூக்களின் மணம் தோற்கும் குழல் வாசம், இசைப் பொழியும் கொலுசொலி, தேன் செறிந்த செவ்விதழ்கள், குழல் பொருந்திய செங்காந்தள், மதி மயக்கும் சிரிப்பழகில் வழி நடந்து வந்த அந்த தேவதையின் வருகையை உறுதிப் படுத்தியது - வளி வெளியின் தாழ்வு நிலை நோக்கி நகர்ந்து சென்ற காற்று....!!
அன்றே அவளைக் கண்டவன் போல் உடல் சிலிர்த்துப் பார்த்திருந்தான், அவன் தேவதை வரும் அழகை....!
முன்னோக்கி வந்தவளாய், " வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சா? " என வினவினாள் அவனிடம்.
சிரித்தவனாய் மலர்க்கூட்டத்தை ஓர் ஏளனப் பார்வையில் " இப்போதறிந்தீர்களா? யார் உண்மையில் பேரழகென்று..." எனக்கேட்பது போல் பார்த்தான்.
" உன்னைத்தான் கேக்குறேன்... வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சா...?" எனக்கேட்டால் அந்த தேவதை....இந்தக் கற்பனையின் கதாநாயகி....!!
"இல்ல..இப்ப தன் வந்தேன்.." என்றான் அவளின் கூரிய விழி நோக்கி..
" ஏன் என்ன அப்டி பார்க்கிற..?"
" இன்னைக்கு நீ வழக்கத்தை விடவும் ரொம்ப அழகா இருக்க.."
"பார்டா...அய்யாவுக்கு இளமைத் திரும்புதோ...நாளைக்கு நமக்கு 25 -வது கல்யாண நாள்..ஞாபகம் இருக்குல்ல..." என்றவள் முன் சென்று முட்டியிட்ட படி நீட்டினான் - வழி பறித்த ஒற்றைச் சிறு மஞ்சள் சாமந்திப் பூவை - தன் காதலை உரைத்த படி...!
இப்பொழுது தான் முதல் முறை அந்த வார்த்தைகளைக் கேட்பவளாய், கண்களில் நீர் ததும்ப தன் கணவனின் கரமிருந்த அச்சிறு மலரை ஏற்று கொண்டாள் அந்த தேவதை...
" இன்னும் என்ன சின்ன பையனா நீ..? முதல்ல எழுந்திரு.." என்று அதட்டியவளின் குரலில் ஒரு தழுதழுப்பு..அவ்விருவரின் கண்களிலும் இன்னும் அதே காதல்....வெட்கம் கலந்த அவளின் முகம் - அந்தி நேர மேலை வானமாய் சிவந்திருக்க, அவள் கரம் பிடித்துச் செல்கின்றான் அவன்...
தூரத்தில் எங்கோ ஒலித்தது அந்த பாடல்..." கன்னம்..சுருங்கிட நீயும்...மீசை..நரைத்திட நானும்...!!!"
- சாமானியன்