பிஞ்சில் விதைக்கப்படும் நஞ்சு

கிள்ளி எறியப்பட வேண்டியவை நீருற்றி வளர்ப்பதும், வளர்க்க வேண்டியவற்றை வேரோடு கிள்ளி எறிவதும் மக்களிடையே பழக்கங்களாகி வேரூன்றச் செய்கிறார்கள் தங்கள் சந்ததிகளின் மனங்களிலே.
அம்மா அம்மா பக்கத்துவீட்டு சிவா மாமா சாக்லேட் கொடுத்தாங்க,
ரெம்ப பெரிய சாக்லேட் மா, நல்லா இருந்தது என்று தன் அம்மாவிடம் அந்த பையன் உளறிவிட்டான் உண்மையை.
யார் என்ன கொடுத்தாலும் வாங்காதே என்று சொல்லிருக்கேன்லா,
எதுக்கு வாங்குன என்று அந்த அம்மா பையனின் தலையில் கணீர் கணீரென இரண்டு குட்டுகளை குட்ட அழத்தொடங்கினான் விம்மி விம்மி.
நான் கவனித்துக் கொண்டே இருந்தேன்,
பக்கத்துவீட்டில் நடப்பதை.
அன்றிலிருந்து அவனுக்கு சாக்லேட் தருவதை நிறுத்திக் கொண்டேன் நம்மால் அவன் தண்டனை பெறக்கூடாதென.
பக்கத்து பக்கத்து வீடுகள் தான்.
கிட்டத் தட்ட உறவினர்கள் தான்.
முன்பின் தெரியாதவர்கள் அல்ல.
இருந்தாலும் ஏனிந்த வெறுப்புணர்வு?
எங்கிருந்து வந்தது?
என்று தான் தெரியவில்லை.
இந்த உலகமே என் குடும்பமென்று நற்சிந்தனை வழி எழுதிய எனக்கு ஏற்பட்டு வருகின்ற அனுபவங்களெல்லாம் நான் வீண் கனவு காண்கிறேன் என்றே வலியுறுத்துகின்றன.
தனிமை மேல் என்று எண்ணம் நிலைக்கிறது எப்போதும்.