சித்த பரிசுத்தமே அந்தமிலான் எய்த அணி – அணியறுபது 49

நேரிசை வெண்பா

உடலுக்(கு) அணிநீர்; உயிர்க்கணி நீர்மை;
அடலுக்(கு) அணிஐம் பொறியே; - மிடலுக்குச்
சிந்தை அடக்கலணி; சித்தபரி சுத்தமே
அந்தமிலான் எய்த அணி. 49

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

குளிர்ந்த நீரே உடலுக்கு அழகு; சிறந்த நீர்மையே. உயிருக்கு அழகு; ஐம்பொறிகளை வெல்லுதலே அடலாண்மைக்கு அழகு; சிந்தையை அடக்குதலே வீரத் திறலுக்கு அழகு; சித்த சுத்தியே ஈசனையடைய வுரிய வித்தக அழகு எனப்படுகிறது.

நீரால் உடம்பு தூய்மையாம்: தண்ணளியால் உயிர் ஒளிமிகப் பெறும்; புலன் அடக்கத்தால் அதிசய ஆற்றல் உண்டாம்; உள்ளம் அடங்கின் உலகம் அவன்பால் அடங்கும்; இதயத் துய்மை. இறைவனுக்கு இனிய நிலையமாம்; மனிதனது மனம் புனிதமானால் அவன் பரமனது இனம் ஆகின்றான்.

ஆண்டவனை நேரே அடைய மூண்டு முயன்ற மகான்கள் எல்லரரும் புலன்களை அடக்கி உள்ளத்தை ஒடுக்கி உயிரை உரிமையோடு ஒர்ந்து நோக்கியே உறுதி பூண்டு உய்தி பெற்றுள்ளனர்.

சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம்இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே!

படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்
துடிப்பற்றார்க்(கு) அன்றோ சுகம்காண் பராபரமே! - தாயுமானவர்

கட்டளைக் கலித்துறை

பூதங் களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக்
காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேன்இறைவா கச்சியே கம்பனே. 31 திருவேகம்பமாலை - பட்டினத்தார்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ(து) எக்காலம்? - பத்திரகிரியார்

எண்சீர் விருத்தம்
(காய் 3 புளிமா அரையடிக்கு)

படிப்படக்கிக் கேள்வியெலாம் பற்றறவிட் டடக்கிப்
..பார்த்திடலும் அடக்கியுறும் பரிசமெலாம் அடக்கித்
தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தமெலாம் அடக்கிச்
..சாதிமதம் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி
மடிப்படக்கி நின்றாலும் நில்லேனான் எனவே
..வனக்குரங்கும் வியப்பயென்றன் மனக்குரங்கு குதித்த
துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
..சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே! - இராமலிங்கர்

உலகப் புலைகளில் உழலாமல் புலன்களை அடக்கி உள்ளம் தூயராய மேலோரே பரமானந்த வெள்ளத்தில் தோய நேர்ந்துள்ளனர். அந்த உண்மையை இங்கே ஓர்ந்து உணர்ந்து கொள்கிறோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-18, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே