இறை என்பது

மதுரையின் மத்தியான வெயிலில் தப்பித்த சுகம் அங்கு எல்லோருக்கும் இருந்தது. குற்றாலம் மலையின் குளிரில் மனதை கரைத்து, நாங்கள் எல்லோரும் மலையில் நடந்து கொண்டிருந்தோம்..

நான், ரவி, முருகன் மூவரும் மதுரையில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஒரே பிரிவில் பணியாற்றுபவர்கள். வார இறுதியில் எங்காவது ஊர் சுற்ற கிளம்புவது எங்கள் விருப்பம். இந்த முறை கூடுதலாக திங்கள்கிழமை அரசு விடுமுறை என்பதால், எங்கள் நிறுவனம் அன்று விடுமுறை விட்டிருந்தது. எனவே, நாங்கள் கூடி பேசி குற்றாலம் போவது என்று முடிவு செய்திருந்தோம். முடிவு செய்து இதோ குற்றாலத்தில் நனைய நனைய, குளிர குளிர, குளித்து மேலே என்ன செய்வது என்று பேசி, மலைக்கு மேலே போவது என்று முடிவு செய்து நடந்துக் கொண்டிருக்கிறோம்.

மலையில் அருவிகள் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தன. இதுவரை பார்த்திராத, பெயர் தெரியாத பல பறவைகள், சிறு சிறு விலங்குகள் கண்ணில் தோன்றி மறைந்தன..

பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் களைப்பு தெரியாமல் நடக்கவைத்தன.

மலையில் கொஞ்சம் வெகு தூரம் வந்ததும் ஓரிடத்தில் அருவி போல விழுந்துகொண்டிருக்க, நாங்கள் அங்கே குளிப்பது என்று முடிவு செய்து ஆடைகளை களைந்து துண்டு மாற்றிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தோம். சிறுஅருவி தலையில் விழுந்து தலையில் இருந்து கால்வரை ஒரு கிளுகிளுப்பை தந்தது. அருவியில் ஆனந்தமாக குளித்தபடியே ஒருவொருக்கொருவர் பேசியபடியே குளிக்க ஆரமித்தோம்.

“ டேய் ரவி சொர்க்கம்னு சொல்வோமே அது இதுதானே" என்றான் முருகன்.

"கடவுள் போல" என்றான் ரவி கவிதையாக.

"ஆமா கடவுள் போல" என்றேன் கேலியாக.

"கடவுளை இதுல ஏன்டா இழுக்குறிங்க, இல்லாதவர பத்தி எதுக்கு பேசிட்டு.."

"அப்போ நீ கடவுள் இல்லன்னு சொல்றியா.?"

"இல்லன்னு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.!"

"அதெல்லாம் இருக்கார்டா, நாம தான் அதை உணர்றதில்ல" என்றான் முருகன்.

"அட போடா இருந்தா இங்க ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? இவ்வளவு வறுமைகள்? சோறும், குடிக்க தண்ணியும் இல்லாம தினசரி எத்தனை பேர் சாவுறாங்கனு தெரியுமா.? அங்க யாரும் கடவுளைக் கும்பிடுறதில்லையா.? ஏன் இதனை சாவுகள் அதுக்கு பதில் என்ன?" என்றேன் கோபத்துடன்..

'ஹா ஹா ஹா' என்றொரு சிரிப்பு சத்தம். எல்லோரும் கரையை நோக்கி திரும்பி பார்த்தோம். காவி உடை, வெற்று மார்பு தலை முகம் என எல்லா இடங்களிலும் முடிகள் என ஒரு சாமியார் நின்று என்னை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தார்..

'ஓ.. காவிச்சாமியாராக்கும்..'

"என்ன தம்பி என்னை பார்த்தவுடன் காவிச்சாமி போலிச்சாமினு நினைக்கிறிங்க போல இருக்கே...?"

எனக்குள் ஆச்சரியம் நாம் மனதில் தானே நினைத்தோம் எப்படி இவருக்கு தெரிந்தது.?

"அப்புறம் நீங்க என்ன கடவுள் இல்லங்குற ரகமா.?"

"ஆமா... இருந்தா தான் இருக்குனு சொல்ல முடியும்..."

"அப்போ கண்ணால பார்த்தாதான் நம்புவிங்க இல்லையா.?"

"ஆமா" என்றேன்..

"அப்போ கடவுள்னா யாரு உங்கவரைல...?"

"கடவுள் மனுஷங்க உருவாக்கிக்கிட்ட ஒரு கற்பனை பாத்திரம். ஒரு மனுஷன் செதுக்குன சிலை தான் அது.."

"அப்படினா கடவுள் இருக்குறதா எப்படி சொன்னா நம்புவீங்க..?"

"கடவுள் என் கண் எதிர்க்க தோன்றி நான் தான் கடவுள்னு சொன்னா தான் நம்புவேன்.."

"ஆக உங்க கண்ணுமுன்னாடி இருந்தா தான் அது கடவுள்னா, உங்க கண்ணு முன்னாடி இல்லாத, கண்ணுக்கு தெரியாத ஒன்ன எப்படி உங்களால சுவாசிச்சு வாழ முடியுது.?"

"என்ன சொல்றிங்க?" என்றேன் குழப்பத்துடன்..

"அதாவது காற்று, காற்றை உங்களால எப்படி காற்றுனு சொல்ல முடியுது.? அது உங்க கண்ணுக்கு தெரியால அப்படிங்கிறதால அதை இல்லனு சொல்ல முடியுமா.?"

"அது எப்படி முடியும்..?"

"அது தான் உங்க கண்ணுக்கு தெரியலையே அப்புறம் எப்படி அதை இருக்குனு சொல்றிங்க..?"

"ப்ச்.. இது வீண் விவாதம்.."

"இல்ல சரியான விவாதம் தான் பதில் சொல்லுங்க தம்பி.."

"அப்போ எதை கடவுள்னு சொல்றிங்க.?"

"இயற்கை தான் கடவுள்..."

"இயற்கையா..?"

"நீங்க படிச்சவர்தானே... இந்த பூமிக்கு வெளியே என்ன இருக்குனு தெரியும் தானே.. இந்த பூமிக்கு வெளியே எத்தனையோ கோள்கள் பல கோடி கிரகங்கள் அண்டவீதிகள்னு இப்படி எத்தனையோ இருக்கே...? அதுல ஏன் குறிப்பா இந்த பூமில மட்டும் உயிர்கள் தோன்றணும்.? தன்னைத் தானே சுத்திட்டு ஒரு கோள், அதுக்கு தலைமை போல ஒரு சூரியன், அந்த சூரியன் மூலமா இந்த உலகத்தின் இயக்கம் நடக்குது. கடல்கள், கரையில் மரம் செடி அது கொடுக்குற “உயிர்க் காற்று” அந்த காற்று மூலமா சுவாசிச்சு வாழ்ந்திட்டு இருக்குற நீங்க, நான், உங்க நண்பர்கள், உலகத்துல வாழுற பிற மக்கள், பிற ஜீவராசிகள் எப்படி இவ்வளவு சரியா அமைஞ்சது.? அல்லது எது சரியா அமைச்சது.?"

"அது தான் கடவுள் என்ற இயற்கை.."

"அப்போ கோவில்ல இருக்குறது..? என்றான் ரவி"

"உருவமில்லாத இயற்கையை மக்கள் ஒரு உருவத்துக்குள்ள கொண்டு வர விரும்பி உருவாக்கிக்கொண்டதால வந்தது தான் அது.."

"இந்த உலகம் அழியுதுனா அதுக்கு காரணம் நாம தான்,

நீங்க சொன்னிங்களே பஞ்சம், தண்ணி இல்லாம சாவுராங்கனு. ஏன்னு தெரியுமா காரணம் நாம தான். என்னைக்கு இயற்கையை மீற ஆரமிச்சமோ அன்னைக்கே அதனோட பலனை நாம அனுபவிச்சு தான் ஆகணும்.. பஸ், கார், பைக் பிளாஸ்டிக் இப்படி மனுஷன் தங்களோட தேவைக்கு உருவாக்கி கொண்டதால உருவான காற்று மாசுபாடு, நிலமாசு, குப்பையை கண்டபடி கொட்டி இயல்பா மண்ணுக்கு போக வேண்டிய மழை தண்ணியை போக விடாம செஞ்சு தண்ணிக்கு தட்டுபாடு வரவைச்சதே மனுஷன் தானே அது தானே தண்ணி பிரச்சனைக்கே காரணம்."

இயற்கையை நாம நல்லா வச்சிக்கிட்டாதானே அது நம்மள நல்லா வச்சுருக்கும்.."

"அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு சாமி..? என்றான் முருகன்"

"போங்க... இயற்கையை வணங்குங்க, நேசியுங்க, இயற்கை தான் கடவுள், கோவில்ல போய் தான் கடவுளை கும்பிடனும்னு அவசியம் இல்ல... உங்களை சுத்தி இருக்குற இயற்கையை அதன் போக்குல விடுறதும் அதை துன்புறுத்தாம இருக்குறதும் போதும், நாம நல்லா வாழ்வோம், இந்த உலகமும் நல்லா வாழும். அதுவும் கடவுள் போல தான்..." என்றவாறு அவர் காட்டை நோக்கி நடந்து மறைந்தார்..

நானும் ரவியும் முருகனும் விக்கித்து போனோம்..

-முற்றும்

எழுதியவர் : அருள்.ஜெ (3-Dec-18, 9:00 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : irai enbathu
பார்வை : 129

மேலே