மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 25
#மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௨௫
காதல் உருகி கண்ணால் பருகி நேரம் அறுகி உதடுகளின் இடைவெளி குறுகி முன்னிதழ்கள் இணையும் நேரம் பார்த்து,புறமுதுகில் அடித்தது யாரென்று திரும்பி பார்த்தான்,.
டேய் எருமை மாடு எந்திரிடா இராத்திரி எட்டு மணி கூட ஆகல அதுக்குள்ள என்ன தூக்கம்,சாப்பிடாம கொள்ளாம என சொல்லியவாறு சுபா விளக்குமாறை கையில் வைத்து கொண்டு நின்றாள்..கார்த்திக்கின் கண்கள் தூக்கம் கலைந்து கண் எரிந்தது.கண்கள் மட்டுமா எரிகிறது ...ச்சே இது கனவுதானா..கனவுல கூட விடமாட்டாங்க போல என முனங்கி கொண்டு எழுந்து சென்று முகம் கழுவினான் கார்த்திக்..
வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த சுபா கூச்சலிட்டாள்..கார்த்திக் ஓடி வந்து என்ன ஆச்சு என்று வினவிய போதுதான் தெரிந்தது காரணம் தான்தானென்று..கட்டிலுக்கு அருகே கிடந்த டெடி பியரின் உதடுகள் பயத்தில் வெளிறி இருந்தது..
மணி ஒன்பது என்பதை ஒன்பது முறை மணியோசை எழுப்பியதை கேட்டதும் வெளியே கிளம்ப தயாரானான் கார்த்திக்..சாப்பிட்டு போடா என்ற சுபாவின் குரலை சட்டை செய்யாமல் கிளம்பினான்..
டியூசன் முடிந்து எல்லோரும் வெளியே வந்து கொட்டிருந்தனர்..பர்ஹானாவும் ஜெனிபரும் முன்னால் நடந்து கொண்டிருந்தனர்..திடீரென பின்னால் திரும்பி பார்த்து சலீமிற்க்கு கைகாட்டினாள் பர்ஹானா..அப்போது கார்த்திக்கை பார்த்தவள் சலீமிடம் ஏதோ சைகை செய்து விட்டு புன்சிரிப்புடன் நடக்க ஆரம்பித்தாள்..
டேய் மச்சி சாரிடா இன்னைக்கு டியூசன் வரமுடியலை.கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் என்றபடி சலீமிடம் வந்தான் கார்த்திக்..
வாடா மச்சான் உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்லியவாறு பர்ஹானா கொடுத்த கடிதத்தை கார்த்திக்கிடம் கொடுத்தான் சலீம்..ம்ம் பிரிச்சு பாரு யாரு எழுதுனது என்று...
விரல்கள் பத்தும் ஒன்றையொன்று முந்தி கொண்டு கடிதத்தை பிரித்து கொண்டிருந்தது.விழிகள் எழுத்தை மேய தொடங்கியது.கடிதத்தை மனசுக்குள் வாசிக்க தொடங்கியதும்,அந்த மனம் முழுவதும் ஜிவ்வென்று சந்தோஷம் பரவ தொடங்கியது..மாலதிதான் எழுதி இருக்கிறாள்.அவளை போன்றே அவளின் கையெழுத்தும் அவ்வளவு அழகு..கடிதத்தில் அவள் எழுதிய காதல் வார்த்தைகளுக்கே மனசு இப்படி கிடந்து திளைக்குதே,நேரில் அவள் இதை சொன்னால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி செத்துருவேன் போலிருக்கு என்று நினைக்கவும் விழியோரம் விழுக்கென ஒரு ஜோடி நீர்திவலைகள் தெறித்து விழுந்தது..
மச்சி ரொம்ப தேங்க்ஸ்டா என சலீமை கட்டி அணைத்து கொண்டான் கார்த்திக்..
மச்சான் கண்டிப்பா உன் காதல் சக்ஸஸ் ஆகும்டா கவலை படாதே.உன்னோட வெற்றில மட்டுமல்ல உன்னோட கடைசி மூச்சுவரை துணையா நான் வருவேண்டா என்றபடி கார்த்திக்கின் தோளை தட்டி கொடுத்தான் சலீம்.
காலை கதிரவன் சோம்பல் முறித்தவாறு கண் விழித்தான்.கூடவே கார்த்திக்கும் சேர்ந்து கொண்டான்..இன்று என்றை விடவும் மனம் நிம்மதியாக இருந்தது..காதலின் ஒளி அவனுக்குள் ஒளிர துவங்கியிருந்ததுதான் காரணமாயிருக்கும் போல..
சாப்பிட அமர்ந்தான் ஆனால் எப்போதும் சாப்பிடும் நாலு இட்லி,இன்று இரண்டுக்கு மேல ஒரு அடி கூட உள்ளிறங்கவில்லை..ஆம் அவன் காதலை நேற்றிரவே உண்டுவிட்டான்..அதனால் பசியும் பாதியாய் குறைந்து விட்டது..
பேருந்து நிலையத்தின் அருகாமையில் நின்று கொண்டிருந்தான்..அவள் என்னை விரும்புகிறாள் என அறிந்த முதல் நாள் அவளை பார்க்க போகிறேன். அவளை எப்படி எதிர் கொள்வது..இத்தனை நாள் இல்லாத நாணம் ஒன்று அவனுக்கும் புதித்தாய் உதித்திருந்தது..காதலில் ஊறி போயிருந்த அவன் இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகி தடாகம் போல் வியாபித்து கிடந்தது..
நாளைக்கு தீபாவளி .
அதற்க்குள் அவனுக்குள் பட்டாசின் ஆராவாரம் அமளி துமளியாகி கொண்டிருந்தது.
நேற்று காலையில்தான் காதலின் சின்னமான தாஜ்மஹாலை முகப்பில் கொண்ட ஒரு வாழ்த்து அட்டையை வாங்கி அதில் தான் கொண்ட காதலையெல்லாம் பேனாவில் கரைத்து ஊற்றி,கவிதை ஊற்றில் பெருக்கெடுத்த வார்த்தைகளையெல்லாம் ததும்ப ததும்ப நிரப்பி அதை உறையிட்டு அஞ்சல்தலையை அமிழ்த்தி அஞ்சலறை பெட்டியில் அமர்த்தி சென்றிருந்தான்..ஆனால் நேற்றிரவுதான் அவளும் தன்னை விரும்புகிறாள் என்ற கடிதம் அவனை வந்தடைந்திருந்தது.ஒரு நாள் முன்பே தெரிந்திருந்தால் அந்த வாழ்த்து மடலை நேரிலேயே கொடுத்து காதலை தெரிவித்து இருக்கலாமே என்று நினைத்து கொண்டிருந்த வேளையில்,
பேருந்து வேகமாய் ஓடி வந்து கொண்டிருந்தது..
இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒரு பிரளயமே நடக்க போவது தெரியாமல் பேருந்தை பிடிக்க கார்த்திக்கும் ஓடினான்.
காதல் ஓட்டம் அதிகரிக்குமா இல்லை அடங்குமா நாளை தெரியும்..