பாட்டியின் பெங்களூர் அனுபவம்
" என்ன பாட்டி பேரனை பார்க்க பெங்களூர் போறேன்னு சொன்னீங்களே!
பார்த்துட்டு வந்திட்டீங்களா? ", என்று பாப்பம்மா பாட்டியிடம் விசாரித்தாள் எதுத்த விட்டு சுப்பம்மா.
" அந்த கொடுமையை ஏன்டி கேட்குற! ஊரா அது! அங்கிட்டு இங்குட்டு விலகக் கூட இடமில்லை. அந்த ரோடுகள கடந்து மறுபக்கம் போக நான் பட்ட பாடு இருக்கே!
சொல்லி மாளாது மவளே! ",என்று பாப்பம்மா பாட்டி சொன்னாள்.
" அது பெங்களூர், அப்படி தான் இருக்கும் பாட்டி! நம்ம கிராமத்தைப் போலவா இருக்கும்!? ",என்றவாறு வந்தாள் முத்துலட்சுமி.
" ஆமாண்டியம்மா! அங்க பொம்பளைங்களுக்கும் ஆம்பளைங்களுக்கும் வித்தியாசமே தெரியலடி! பொம்பளைங்க கூட ஜீன்ஸ் கால்சட்டையும் டி சர்ட்டையும் போட்டுகிட்டு வலம் வராளுக. நான் கூட பஸ் நிறுத்துற இடத்தில் ஒரு பொம்பளைய பையனு நினைச்சு, " எப்பா தம்பி! சாந்திநகர் போற பஸ் எப்போ வரும் ",என்று கேட்டேன். அதுக்கு அந்த பொம்பளை, " கண்ட்ரி புரூட் ",என்று திட்டுபுடுச்சு. அதற்கு பக்கத்துல நின்ற புண்ணியவான், " தமிழா பாட்டி? சாந்திநகர் பஸ் இன்னும் 5 நிமிஷத்துல வந்துரும். வந்ததும் சொல்றேன். ",என்றான்.
சொன்னது போலவே பஸ்ல வந்ததும் சரியா பஸ்ல ஏற சொல்லி பத்திரமா பொய்ட்டுவாங்க பாட்டினு சொன்னான்.
இந்தக் காலத்துல பெரியவங்கள மதிக்கிற ஆம்பள புள்ளைங்க இருக்காங்க.
பொம்பளைங்கதான் குறைஞ்சிட்டே வாராளுக. ",என்று ஆதங்கம் தெரிவித்தார் பாப்பம்மா பாட்டி.
" பாவம்! அந்த பொண்ணு என்ன டென்ஷன்ல, சூழல்ல இருந்ததோ? ",என்றாங்க சுப்பம்மா.
" அட போடியம்மா!
நம்ம ஊரில் பஸ்ல வயசானவங்க ஏறினால் எழுந்து நின்று வயசுப் பொண்ணுங்க கூட இடம் கொடுப்பாங்க.
ஆனால் அங்க அப்படி இல்லடியம்மா.
வயசானவங்க நின்னுட்டு இருந்தாலும் சிட்டுல உட்கார்ந்து இருக்கிற இளசுங்க நிமிர்ந்து கூட பார்ப்பத்தில்ல.
கைப்படப்பொட்டியை பார்த்துட்டே இருக்குதுங்க.
இரக்க குணம் கொஞ்சம் கூட இல்லாம பொயிறுச்சுடி! ",என்று பெருமூச்சு விட்டாங்க பாட்டி.
" அட பாட்டி! அந்த பொண்ணுங்களெல்லாம் வேலையை முடிச்சுட்டு களைப்பா வருவாங்க,
அவங்களே களைத்திருக்கும் போது உங்களுக்கு இடம் எப்படி கொடுப்பாங்க. ",என்று வக்காளத்து வாங்கினாள் முத்துலட்சுமி.
" ஆமாடி அவளுக வாய்க்கால் வரப்பு வெட்டி களைச்சு வராளுக.
எல்லாம் கொழுப்பு தான்டியம்மா.
பொழுதன்னிக்கும் படப்பொட்டியைப் பார்ப்பது, இணையத்தில்(டூவிட்டரில்) கருத்துச் செல்லுறேன்னு கண்ணா பிண்ணானு புறப்போக்காக எழுதுவது இவற்றை விட்டால் என்ன வேலை தெரியும் அவளூகளுக்கு?
ஒரு பக்கா அரசியை கல்லின்றி பிடைத்து சுத்தமாகக் தெரியுமா?
இல்ல, ஒழுங்கா சமைக்காவது தெரியுமா? ",என்று கொதித்தவர், வெற்றிலையைக் கசக்கி வாயில் வைத்துக் கொண்டு, " என் பேரன் பொண்டாட்டி கூட அவளுகளப் பார்த்து கெட்டுப் பொயிட்டா.
காலையில் ஏதோ பாக்கெட்டை உடைச்சுப் போட்டு கிளறி இறக்கி வச்சுட்டு நூடூல்ஸ்ன்றா!
அதாவது பரவாயில்லை.
நாமெல்லாம் உளுந்து, அரிசி மாவை ஆட்டி கரைச்சு புளிக்க வைத்து சாப்பிடுவது தானே வழக்கம்.
அங்க என்னடானா தோசை மாவு, இட்லி மாவுனு பாக்கெட்ல வாங்கியாந்து கரைத்து உடனே தோசை சுட்டு கொடுக்குற,
அதெல்லாம் சாப்பிட முடியுதா?
அங்க ஏன்டா வந்தோம்னு தோனிச்சு! ",என்று பாட்டி வருத்தமாகக் கூறினார்.
" பாட்டி, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?
இப்பெல்லாம் நகரங்களில் அந்தமாதிரி பாக்கெட் மாவுதான் பயன்படுத்துறாங்க. அதனால் நேரம் மிச்சமாகுதில்ல! ",என்றாள் முத்துலட்சுமி.
" அடியே! பாலீதின் பைகள், பிளாஷ்டிக் பைகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாதுனு சொல்லுற நாம அந்த பாலீதின் பைகளில், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவை உண்பது எப்படி?
அது நோயை உண்டாக்காதா? ",என்றாங்க பாட்டி.
" நீங்க சொல்லுறது சரிதான் பாட்டி. இப்போது தான் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்கள் பெற்று தலைதூக்கி வெளியே வந்துருக்காங்க. அது முன்னேற்றம் அல்லவா!
நகரீக வளர்ச்சி. பெண்கள் விழித்தெழவே பாரதியார், போன்ற பல கவிஞர்கள் கவிதை எழுதி வைத்துள்ளார்கள். ",என்றாள் முத்துலட்சுமி.
" எதை எழுதி வைத்தாங்க? பொம்பளைங்களும் ஆம்பளைங்கள மாதிரி அடங்காம திரியுங்க என்றா?
அடி போடி இவளே!
முதலில் பொம்பளைய பொம்பளை மதிக்க வேண்டுமடி.
பெங்களூரில் ஒரு பஸ் இருக்கையில் அமர்ந்தேன்.
பக்கத்தில் இருந்த பொம்பளை என்னை ஏதோ நரகலைப் பார்த்தாற்போல முகச்சுளித்து விலகி அமர்ந்து கொண்டாள்.
நானென்ன தீண்டத்தகாதவளா?
ஏன் அவளுக்கு வயது ஆகாதோ?
என் போல் அவள் முகங்களில் சுருக்கங்கள் ஏறாதோ?
அவ்விடத்திலேயே அவளிடம் கேட்டு சண்டை இட்டிருக்க முடியும்.
தன்மான உணர்வு மற்றும் சுய மரியாதையால் எழுந்து நின்று கொண்டேன்.
வேறொருவர் அவ்விடம் அமர்ந்தார். ",என்று பாட்டி தன் பெங்களூர் அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தார்.
" அவர்களைக் கண்டு உனக்கு பொறாமை பாட்டி! அதான் அவர்களின் மேல் வெறுப்பை அள்ளி வீசுகிறாய். ",என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள் முத்துலட்சுமி.
" அட! இவளூக வாழுற லட்சணம் கண்டு எனக்கு பொறாமை வேற வந்திருக்கா?
சரிதான் போங்கடி, நீங்களும் உங்க பிழைப்பும். ",என்றவர் எழுந்து தன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு பாட்டி பேசவே இல்லை முத்துலட்சுமி.
" பாட்டி சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவங்க மட்டுமல்ல, மானம் பெரிதென நினைத்துவாழும் கூட்டத்தில் ஒருத்தி. ",என்பதை ஞாபகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
நாமும் வாழ்கிறோமே பணத்திற்கொரு வாழ்க்கை,
சமயத்திற்கொரு வாழ்க்கை,
பச்சோந்திகளாய் வாழ்ந்து என்ன சாதித்தோம்.
அடையாளம் தொலைத்தோம்.
அநாதைகளாய் வாழ்கிறோம்.
ஆண், பெண் வெறுப்புணர்வே மேலோங்க விரோதப்போக்கை வளர்த்துக் கொள்கிறோம்.
என்று தான் திருந்தி வாழப்போகிறோம்?!...