பாப்பம்மா பாட்டி

" கிளி ஜோசியம் பார்க்கலையோ கிளி ஜோசியம்!
கிளி ஜோசியம் பார்க்கலையோ கிளி ஜோசியம்!
பட்சி சாஸ்திரம், கிளி ஜோசியம் "

" ஏய் நில்லப்பா!
ஒரு ஆளுக்கு கிளி ஜோசியம் பார்க்க எவ்வளவு? "

" பத்து ரூபாய் தான் மா. என்ன பெயருக்கு பார்க்கானும்? "

" இந்தியா. "

" வாம்மா பஞ்சவர்ணம்! வந்து இந்தியாங்கிற பெயருக்கொரு சீட்டு எடு. "

கிளி வந்து சீட்டெடுக்கிறது.

சீட்டை திறந்து பார்த்தால் பாரத மாதா வந்திருக்காங்க.

" ஓம் சக்தி தாயே! பாரத மாதா! இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் உருவாகுது.
கொள்ளையடித்தவர்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள்.
ஊழல் செய்தவர்களெல்லாம் உணவின்றி ஊனமாய் முடங்குவார்கள்.
இந்தியா எல்லையின்றி வளரும்.
நற்காரியங்கள் பலவற்றை செய்து உலக நாடுகளின் முன்னோடியாகத் திகழும் நாட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் அறிகுறியாக அதிகார வர்க்கங்கள் மாயும்.
அனல் காற்று வீசும்.
சண்டாளர்கள் ஒழிக்கப்படுவார்கள்.
இயற்கையிடம் அன்பு கொண்ட நல்லோர்கள் காக்கப்படுவார்கள்.
மதங்கள் ஒன்றுபடும்.
சாதிகள் ஒழிக்கப்படும்.
பெண்கள் சுதந்திரமாக எதையும் சாதிக்கும் சூழல் உருவாகும்.
இயற்கை பேரிடர்கள் பல வந்து போகும்.
இணையப் பயன்பாடுகள் முறைப்படுத்தப்படும்.
ஏழைகளின் பணத்தை சுரண்டியவர்களெல்லாம் மாண்டு போக நல்லவர்கள் அடங்கிய புதிய உலகம் இந்தியாவிலிருந்தே உருவாகத் தொடங்கும்.
இவை நிச்சயம் நடக்கும்.
இன்னும் பல நல்ல செயல்கள் நடைபெற ஞானிலமே திரும்பிப்பார்க்க புதிய பாரதம் விரைவில் உருவாகும்.
அதைப்பார்க்க நாம் இல்லாவிடிலும் நம் சந்ததியினர் வாழ்வார். ",என்று கூறியவர் பத்துரூபாயை வாங்கி பையில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டு பாப்பம்மா கிழவி வந்து, " ஏடி முத்தம்மா! கிளி ஜோசியம் பார்த்தியே! என்ன சொன்னான்? ",என்றிட, " இந்தியா கூடிய விரைவில் உலகிற்கே முன்னோடியாக திகழப் போகிறதாம் பாட்டி. ",என்றாள் முத்துலட்சுமி.

" அது என்னடி இந்தியானு புதுசா சொல்லுற? நம்ம நாடு தமிழ்நாடு தான! ",என்றாள் பாப்பம்மா பாட்டி.

" பாட்டி, இந்தியாங்கிறது நம்ம நாடு. தமிழ்நாடுங்கிறது நம்ம மாநிலம். ",என்றாள் முத்துலட்சுமி.

" அது என்ன எழவோடியம்மா? மாநில அரசுங்கிறாங்க. மத்திய அரசுங்கிறாங்க.
இந்த படப்பொட்டியை(டிவி) பார்க்க முடியலடி அம்மா. ",என்ற பாப்பாம்மா பாட்டி தொடர்ந்து, " எம்.ஜி.யார் முதலமைச்சரா இருந்த போது இந்த படப்பொட்டியெல்லாம் கிடையாது. இருந்தாலும் எங்கள் மனசெல்லாம் நிறைஞ்சிருந்தாரு.
இப்போது படப்பொட்டியில வாராங்களே சுடுகாட்டில் வேகாது பாதியில் எழுந்து வந்த புணம் மாதிரி. ",என்றவாறு வெற்றிலைப்பைத் திறந்து வெற்றிலையை போடத் தொடங்கினார்.

" பாட்டி அந்தக் காலத்தை மாதிரியெல்லாம் இப்போ இல்ல.
இந்தா பார்த்தீங்களா பாட்டி? இந்த போன்லயே நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிடுறேன்.
உலக நடப்புகளை உடனுக்குடனே தெரிஞ்சுக்கிடுறேன். ",என்று பாப்பம்மா பாட்டியிடம் தன் தொடு கைபேசியைக் காட்டினாள் முத்துலட்சுமி.

" அட போடியம்மா! இந்த படப்பொட்டியை பார்த்தால் தான் உலக நடப்பைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
நம்ம ஊருல எப்படி நடக்கிறதோ அதனடி உலகத்து நடக்கப் போகிறது!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான்டி பதம்.
பெரிசா சொல்ல வந்துட்ட! ",என்று பாப்பம்மா பாட்டி வெற்றிலை எச்சிலைக் குதப்பி தூறத் துப்பினார்.

" அதெல்லாம் சரிதான் பாட்டி. வெளிநாட்டுல எல்லாம் இப்படி கண்ட இடங்களில் துப்ப முடியாது. மலம், ஜலம் கழிக்க முடியாது. ",என்று வாதத்தை துவக்கினாள் முத்துலட்சுமி.

" அதற்காக எச்சில், மலம், ஜலத்தை சர்வை(பாலீதீன் பை)யில் அடைத்து விற்கவா முடியும்.
இயற்கை உபாதையை இயற்கையில் திறந்த வெளியில் கழிப்பது தான்டி ஆரோக்கியம்.
அதை விட்டு கழிவறையை என்று கட்டி வைத்துக் கொண்டு கழிவுகளை எல்லாம் தேக்கி வைத்தால் நோய் தாண்டி வரும். ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.

" பாட்டி திறந்தவெளியில் மலம், ஜலம் கழிப்பதும், எச்சில் துப்புதலும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துதலாகும்.
அதற்காகத் தான் வீட்டோட கழிவறை அமைக்க அரசாங்கம் வலியுறுத்துகிறது. ", என்றாள் முத்துலட்சுமி.

" என்னடி சொல்லுற? எங்க அப்பா, பாட்டன் எல்லாம் கழிவறையை கட்டிக் கொண்டா போனாங்க?
அவங்க அதிக நாட்கள் வாழவில்லையா?
என்னை பாருடி! இப்பங்கூட நீ பார்க்கிற வேலை மாதிரி மூன்று மடங்கு வேலைகளைப் பார்க்க முடியும்.
உன்ன மாதிரி பிள்ளைங்கள மாதிரி சோம்பேறியா சொகுசா வாழ்ந்தால் வரக்கூடாத நோயெல்லாம் வரத்தான் செய்யும். ", என்று நியாயத்தை சொன்னாங்க பாப்பம்மா பாட்டி.

" பாட்டி திறந்த வெளியில் மலம், ஜலம் கழித்து, எச்சில் துப்பினால் அதில் அமர்கின்ற ஈக்கள் நம் வீட்டில் உணவில் அமர்வதால் நோய் பரவும். ", என்றாள் முத்துலட்சுமி.

" அட எவடி இவ! சோற்றை தட்டில் வைத்து விட்டு படப்பொட்டியையே பார்த்துட்டு இருந்தால் ஈ உட்காரத்தான் செய்யும். உணவை பாதுகாப்பாக வைக்க வேண்டுமடி. ஈயண்டிய பண்டத்தை உண்ணலாகாது.
அதே நேரம் ஈ, சிறு பூச்சிகளுக்கு உணவு வேண்டாமோ?
நாம் கழிக்கும் மலத்தையே அவை உண்ணும். ", என்றாள் பாப்பம்மா.

" உன்னை ஜெயிக்க முடியுமா பாட்டி?
நீ தான் உலகத்தையே வித்துப்புடுவியே! ",என்று பாட்டியைக் கொஞ்சினாள் முத்துலட்சுமி.

" இயற்கையில் எல்லாமே மறுசுழற்சிக்கு உட்பட்டது.
புசித்தால் கழித்தே ஆக வேண்டும்.
இதில் மனிதன் விதிவிலக்கல்ல.
நவீன கழிப்பிடங்கள் என்று பல கட்டி வைத்தாலும், வீட்டோடு கழிவறை இருந்தாலும் நோய்களின் எண்ணிக்கை குறையவில்லை.
காரணம் மனிதன் நவீனத்தில் அகப்பட்டு தன் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துக் கொண்டான்.
வேதிப்பொருட்களை மருந்தாக உட்கொண்டு விரைவாகவே பேயோடு சேர்ந்துவிடுகிறான். Nothing Without a Cause. ", என்று பாப்பம்மா பாட்டிக்கு ஆதரவு தந்தார் திருவு தாத்தா.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Dec-18, 12:06 am)
பார்வை : 342

மேலே