தன்னம்பிக்கை

வணக்கம்,
இயற்றும் செயலையும் தன்னியற்கை இயல்பையும்;
இடைவிடா ஊக்கத்தால் இச்சைக்கனியை சுவைத்திடலாமென்றும்;
இன்மகள் அகத்திலே நிலைத்து துஞ்சிடுவாளென்றும்;
நம்பமறுப்போரே!

மறுதலிப்பீர்,
பிறர்தன் நாவால் உமிழும் பரிகாசத்தையும்;
பிணிகள் பற்பல அருளிடும் மனச்சோர்வையும்;
பின்னிழுத் திடும்அற்ப எதிர்மறைச் சிந்தனைகளையும்;
மனமனையிலே!

துறப்பீர்,
வலியினால் செயல்கள் செய்திட இயலாதென்னும்;
வாகைமான் கள்முன் தாம்நிகர் இல்லையென்னும்;
வாழ்க்கை களத்திலே வெற்றி சூடிடமுடியாதென்னும்;
ஐயப்பாடுகளை!

அணிவீர்,
மனவெண்ணங்களை செய்கைகளாய் வடித்திடும் ஊக்கமென்னும்;
மடைகொண்டு தோல்விதனை மறிக்கும் சோம்பலின்மையென்னும்;
மனமலரின் மங்கா மணமாகிய நம்பிக்கையென்னும்;
பண்புகளை!

பறைவீர்,
ஆசை கொண்டுதுணி ந்தகடுங் கருமத்தினை
மனமெய் நோவிட பிரயாசித்து பெருக்கினை
உவகைகொண்டும் இழப்பினை முகநகைகொண்டும் குலாவிடுவோமென்று
மனமுரசாலே!

சொற்பொருள் விளக்கம்:
ஊக்கம் – விடாமுயற்சி
இச்சை – ஆசை
இன்மகள் – இனிமை + மகள்
துஞ்சுதல் – தங்குதல்
மனை – வீடு
வலி – முயற்சி
வாகைமான்கள் – வெற்றியை பெற்றவர்கள்
ஐயப்பாடுகள் – சந்தேகங்கள்
வடித்தல் – மாற்றுதல்
மடை – தடுப்பணை
பறைதல் – முரசு கொட்டுதல்
கருமம் – காரியம்
பிரயாசம் – உழைப்பு
பெருக்கு – வெற்றி
இழப்பு – தோல்வி
குலாவுதல் – கொண்டாடுதல்

பொருள் விளக்கம் :
தான் புரியும் செயல்கள் மீதும் தன்னுடைய இயல்பான குணங்கள் மீதும் தந்நம்பிக்கை இல்லாதோர்க்கும், ,விடா முயற்சியால்கூட ஆசைபட்ட வெற்றிக் கனியை சுவைத்து விடமுடியாதென்று தந்நம்பிக்கை இல்லாதோர்க்கும், இனிமை கடவுள் தம் உள்ளத்திலே நிரந்தரமாக தங்கிடுவாளென்று தந்நம்பிக்கை இல்லாதோர்க்கும் எனது வணக்கங்கள்.
மற்றவர்களின் ஏளனமான பேச்சுகளை மனம் என்ற வீட்டிலிருந்து விரட்டிடுவீர்.நோய்கள் பல தந்திடும் மனதில் ஏற்படும் சோர்வை மனம் என்ற வீட்டிலிருந்து விரட்டிடுவீர். நம்மை பின்னுக்குத் தள்ளிடும் எதர்மறை சிந்தனைகளை மனம் என்ற வீட்டிலிருந்து விரட்டிடுவீர்.

முயற்சியினால் செயல்களை செய்திட முடியாது என்ற சந்தேகத்தை துறந்திடுவீர். வெற்றி பெற்றவர்களுக்கு நாம் சமம் இல்லை என்ற சந்தேகத்தை துறந்திடுவீர். வாழ்க்கை போராட்டத்திலே வெற்றி பெற முடியாது என்ற சந்தேகத்தை துறந்திடுவீர்.
மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்களாய் மாற்றிடும் விடாமுயற்சி என்னும் பண்பினை உடையாய் அணிந்திடுங்கள்.தோல்வி எனும் நதியை அணையாக நின்று தடுக்கும் சோம்பலின்மை என்னும் பண்பினை உடையாய் அணிந்திடுங்கள். மனமென்னும் மலரின் என்றும் மங்கா மணமாகிய நம்பிக்கை என்னும் பண்பினை உடையாய் அணிந்திடுங்கள்.
நாம் விரும்பிய செயல் கடினமாக இருப்பினும் மனமும் உடலும் வருந்தும் அளவிற்கு உழைத்து அதில் வரும் வெற்றியை மகிழ்ச்சி கொண்டும் தோல்வியை புன்னகை கொண்டு கொண்டாடுவோம் என்று நம் மனமாகிய முரசில் பறைந்திடுங்கள்.

எழுதியவர் : KURAL POZHILAN (5-Dec-18, 11:08 am)
சேர்த்தது : குறள் பொழிலன்
பார்வை : 79

மேலே