கற்பு என்பது…---------------------------கலாச்சாரம்,------- கேள்வி பதில், -----------சமூகம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பெயர் கண்ணன். ஓரளவுக்கு உங்கள் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ‘கற்பு’ என்னும் வார்த்தையைக் குறித்துத் தற்செயலாக யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க அது ரொம்ப மர்மமான வார்த்தையாகப் படுகிறது.

கொஞ்சம் மேலோட்டமாகப் பொருள் கூறினால், ஒழுக்கமாக இருந்து வரும் ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசியோ அல்லது வேறேதும் செய்து மயக்கியோ ஒருவன் அவளை அடைவானாயின் அது கற்பழிப்பாகலாம். உடனடியாக நினைவுக்கு வருவது ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் வரும் சித்தாள். கணவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தாலும், வேறொருவன் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பியும் அவள் படி தாண்டுகிறாள். கதையை முடிக்கும்போது ஜெயகாந்தன் நம்முன் வைக்கும் கேள்வி அவள் இன்னமும் கற்புள்ளவள்தானா என்பது. விவரம் தெரியாத வெகுளி ஒருத்தி ஆழம் தெரியாமல் காலை விட்டதற்குத் தண்டனை கொடுப்பது நியாயம் என்று எனக்குத் தோன்றவில்லை.

தல்ஸ்தோயின் அன்னா கேரனீனாவும் படி தாண்டுகிறவள்தான். ஆனால் அவள் அனைத்தையும் அறிந்தே படி தாண்டுகிறாள். Anything is better than lying and deceit என்று மனமார நம்புவதால் படி தாண்டுகிறாள். தன் மனத்துக்கு உண்மையாக வாழும் துணிச்சலுள்ள ஒருவருக்கு, தன் வாழ்க்கையைத் தன் உள்ளம் அறிந்தபடி வாழத் துணிந்து விட்ட ஒருவருக்கு, ‘திருமண பந்தத்திலிருந்து வெளியேறுவது இழுக்கு’ என்று அறிவுரை கூறுவது எந்த விதத்திலும் பொருத்தமானதாகவே தோன்றவில்லை.

அப்படியென்றால் கற்பு என்பதுதான் என்ன? வேறு ஏதோ ஒரு நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கருத்துருவத்தை இப்போது நாம் அதன் முழு அர்த்தம் புரியாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? எதற்காக அப்படி ஒரு வார்த்தை தேவைப்பட்டது? இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும். இது குறித்து நீங்கள் ஏற்கெனவே எழுதியிருந்தால் அதற்கான இணைப்பையோ அல்லது புத்தகத்தின் பெயரையோ கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
கண்ணன்.

அன்புள்ள கண்ணன்,

அறம், ஒழுக்கம், கற்பு போன்ற சொற்கள் விழுமியங்களைக் குறிப்பவை. விழுமியங்கள் ஒருசமூகத்தின் கூட்டான புரிதல்கள். சமூகத்தின் நோக்கிலும் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும்தோறும் விழுமியங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

ஆகவே அச்சொற்கள் எப்போதும் ஒரே விதிகளை அல்லது நம்பிக்கைகளைச் சுட்டுவதில்லை. அவை சுட்டும் பொருள் என்பது அதை புழங்கிய சமூகச்சூழலுடன் சம்பந்தப்பட்டது. அதாவது ஒரு சொல்லின் பொருளை எடுக்கவேண்டுமென்றால் முதலில் அச்சொல் பயன்படுத்தப்பட்ட காலச்சூழலைக் கருத்தில்கொள்ளவேண்டும்.

உதாரணமாக சங்ககாலத்தில் அறம் என்பது குலஅறத்தையே பெரும்பாலும் சுட்டியது. மரபாக வந்த நம்பிக்கைகள் மற்றும் ஆசாரங்களின்படி வாழ்வதே அறம். இல்லறம் துறவறம் போன்ற சொற்களில் உள்ள அறம் என்பது வாழ்க்கைநெறி என்ற பொருளிலேயே கையாளப்பட்டது

பின்னர் புத்தமதத்தின் வருகைக்குப்பின் அது மாறியது. தர்மம் என்ற கருத்தைப் பிரபஞ்சம்தழுவியதாக மாற்றிக்கொண்டது பௌத்தம். பிரபஞ்ச சாரமான பெருநியதியைச் சுட்டும் சொல்லாக தர்மம் மாறியது. அதற்கேற்ப இங்கே அறம் என்னும் சொல் வளர்ச்சியடைந்தது

பின்னர் கம்பனின் காலகட்டத்தில் மனிதர்களை எல்லாம் கட்டுப்படுத்தும் காலாதீதமான விழுமியங்களைச் சுட்டும் சொல்லாக அது மாறியது.

அதேபோல ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல்லுக்கு ஒரு சமூகம் அளிக்கும் அர்த்தம் தலைமுறைக்குத்தலைமுறை மாறக்கூடியது. சென்ற தலைமுறையில் சாதிவிட்டுச் சென்று திருமணம் செய்துகொள்ளுதல் பெரும் ஒழுக்கமீறலாக நினைக்கப்பட்டது. சில சாதிகளில் விதவை மறுமணம் ஒழுக்கமீறலாக எண்ணப்பட்டது. அதற்கும் முன்பு பெண்கள் கல்வி கற்கச்செல்வதே ஒழுக்கமீறல் என கருதப்பட்டது.இன்றுகூடப் பல சாதிகளில் பெண் விவாகரத்து பெறுதல் பெரும் ஒழுக்கமீறல் என்ற எண்ணம் உள்ளது.

ஒரு வசதிக்காக விழுமியங்களை இப்படிப்பிரித்துக்கொள்ளலாம். அடிப்படை விழுமியம்,நடைமுறை விழுமியம்.அறம், நீதி போன்றவை அடிப்படை விழுமியங்கள். ஒரு சமூகத்தின் அடிப்படையான மனக்கட்டமைப்பிலேயே அவை இருக்கின்றன. அவற்றில் வரக்கூடிய மாற்றம் என்பது அச்சமூகத்தின் வாழ்க்கைமுறை ஒட்டுமொத்தமாக மாறி அவர்களின் அகக்கட்டமைப்பில் பெரும் மாற்றம் வந்தால்மட்டுமே மாறும்

’நாட்டாமை’ என்ற திரைப்படம் வெளிவந்தபோது ஒரு விவாதத்தில் ஒரு நண்பர் சொன்னார். ’இவ்வளவு நீதியுணர்ச்சி கொண்ட இந்த நாட்டாமை ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்கு நீதிவழங்குபவராக இருப்பாரா?’. மாட்டார் என்பது தெளிவு. மதுரைப்பகுதிகளில்தான் நாட்டார்பஞ்சாயத்துக்கள் அதிகம். அங்கே குலநீதியின் அடிப்படையில் தீர்ப்புசொல்லும் பெரும் நீதிமான்கள் இருந்திருக்கிறர்கள். ஆனால் அவர்கள் கண்ணில் ஒரு தலித்துக்கு இழைக்கப்படும் அப்பட்டமான அநீதி தெரியவேதெரியாது

அவர்களின் மனக்கட்டமைப்பு அப்படி. நீதி என்ற வரையறை சென்ற தலைமுறையில் அப்படித்தான் சாதியக்கட்டமைப்புக்கு உட்பட்டு நடைமுறையிலிருந்தது. சமநீதியை வாக்குறுதி அளித்த பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் வந்து இருநூறாண்டுகள் தாண்டியும் நீதி பற்றிய நம் பார்வை இன்னும் முழுமையான மாற்றம் அடையவில்லை

ஒழுக்கம் போன்ற விழுமியங்கள் நடைமுறை விழுமியங்கள். அறம் நீதி போன்றவை நடைமுறைவிதிகளாக மாறுவதையே நாம் ஒழுக்கம் ஊர்க்கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்கிறோம். இது நடைமுறை வாழ்க்கை சார்ந்ததாகையால் உடனடித்தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கே பெண்களுக்கான கல்விநிலையங்கள் வந்த இருபத்தைந்தாண்டுகளுக்குள் பெண்கள் கல்விகற்க வந்துவிட்டார்கள்.

கற்பு என்பது ஒரு நடைமுறை விழுமியம். அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தப்படும் ஒரு வாழ்க்கைநோக்கு அது. ஒழுக்கம் என்ற ஒட்டுமொத்த வரையறைக்குள் வரக்கூடியது அது எனலாம்.

ஆகவே அதன் இலக்கணம் தலைமுறைக்குத்தலைமுறை, சாதிக்குச்சாதி, இடத்துக்கு இடம் மாறிக்கொண்டேதான் இருக்கும். நாம் நமது பள்ளிக்கூடக் கல்வியின் அடிப்படையில் கற்பு என்பது தமிழ்ச்சமூகத்தில் எங்கும் அமலில் உள்ள மாறாத ஒரு விழுமியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் நம்மைச்சுற்றிப்பார்த்தாலே தெரியும் அது எவ்வளவு அபத்தம் என்று.

தமிழ்ச்சாதிகளில் ஒருபிரிவினரிடையே விதவை மறுமணம் செய்துகொள்ளுதலும், விவாகரத்துசெய்த பெண் மறுமணம் செய்துகொள்ளுதலும் கற்புமீறல் என்றுதான் நம்பப்படுகிறது. அவர்களின் அருகே இன்னொரு பிரிவினரிடையே அவை மிகச்சாதாரண வாழ்க்கைமுறையாக இருக்கும். கற்புக்கு அவர்களின் இலக்கணமே வேறாக இருக்கும்.

ஆகவே கற்பு என்பது எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட ஒழுக்கநெறி என்று மட்டுமே பொருள்படுகிறது. குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கி நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நெறி என்று அதைச்சொல்லலாம். குடும்பம் செயல்படுவதற்கு சாதகமாக இருப்பவை எல்லாமே கற்புதான் என்றே நம்முடைய முன்னோர் கண்டிருக்கிறார்கள்

எந்தச் சமூகமும் அத்தனைபேருக்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒழுக்க நெறிகளைப் பேணுவதில்லை.ஒருசாதியில் ஒழுக்கமீறல் என்பது இன்னொருசாதிக்கு அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும். தமிழகத்தின் பல சாதிகளில் ஒரு பெண் கணவன் அல்லாத ஒருவனை விரும்பிக் கணவனைப் பஞ்சாயத்துக்குக் கொண்டுவந்து ‘அறுத்துவிட்டு’ப் பிடித்தவனை மணந்துகொள்வது முற்றிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அது கற்புமீறல் அல்ல.

அப்படியென்றால் தமிழ்ச்சமூகத்திற்கு முழுக்கப் பொருந்தக்கூடிய கற்பு என்ற வரையறை என்ன?

நம்முடையது தந்தைவழிச் சொத்துரிமை உள்ள சமூகமானதனால் தந்தை என்ற அடையாளம் திட்டவட்டமாக, சமூகநோக்கில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாகவேண்டும். ஆகவே அந்த அடிப்படையில்தான் பெண்ணுக்கான ஒழுக்கம் வரையறைசெய்யப்பட்டிருந்தது. சுருக்கமாக அதுதான் கற்பு. ஒரு பெண் தன்குழந்தையின் தந்தை இன்னார் என்று சமூகம் அங்கீகரித்த மரபின்படி சொல்லும்நிலையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஆகவே இந்தப் ‘படிதாண்டுதல்’ போன்ற சொற்களை எல்லாம் பயன்படுத்திக் கற்பு என்பதை விவாதிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.கற்புக்கான வரையறையைக் காலாதீதமாக, எப்போதைக்குமாக உருவாக்கிக் கொள்ளவும் முடியாது. எந்த ஒழுக்கநெறியையும் அப்படி வரையறைசெய்ய முடியாது

அப்படியென்றால் கற்பு என்ற சொல் சுட்டக்கூடிய நிரந்தரமான விழுமியம் என்ற ஏதாவது உண்டா?

கற்பு என்ற சொல் பழங்கால நூல்களில் ‘பாலியல் ஒழுக்கம்’ என்ற பொருளிலோ ‘பெண்ணுக்கான குலக் கட்டுப்பாடு’ என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

கற்பு என்ற சொல் கல்வி என்பதுடன் சம்பந்தப்பட்டது. பலநூல்களில் கற்பு என்பது கல்வி என்றே சொல்லப்பட்டுள்ளது. ‘எழுதாக் கற்பு’ கொண்டது வேதம் என்று சங்கப்பாடல் சொல்லும்போது அங்கே குறிப்பிடப்படுவது கல்வியையே. ‘அமண் சமணர் கற்பழிக்க திருவுளமே’ என சம்பந்தர் பாடுவது சமணர்களின் நூல்கல்வியை வெல்வதுபற்றித்தான்

‘நூல்வழியும் சமூக மரபுப்படியும் கற்கப்பட்டது’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது. சங்க காலகட்டத்தில் களவு- கற்பு என்னும் இரண்டு வகை பாலுறவைப்பற்றிப் பேசப்படுகிறது. களவு என்பது தங்கள் இச்சைப்படி ஆணும்பெண்ணும் உறவுகொள்வது. கற்பு என்பது நூல்களும் சமூகமரபும் கற்பித்த வழியின்படி குடும்ப உறவு கொள்வது.

திருமணத்திற்குமுன்னர் களவுறவு கொள்வது கற்புநெறிக்கு வெளியே உள்ள வழக்கம். ஆனால் அப்படி உறவுகொண்ட பெண் கற்பிழந்தவள் அல்ல. அப்படிப்பார்த்தால் சங்ககாலத்தில் கற்புள்ள பெண்ணே இருந்திருக்கமுடியாது. சங்ககாலத்தில் பெண்ணின் கன்னித்தன்மையையும் கற்பையும் இணைத்துப்பார்க்கும் வழக்கம் இருந்ததாகவே தெரியவில்லை. நூல்முறைப்படி குலமுறைப்படி திருமணம்செய்துகொள்பவள் கற்புடையவள் அவ்வளவுதான்.

பின்னர் தமிழகத்தில் குழந்தைமணம் அறிமுகமாகியது. அங்கிருந்துதான் கன்னித்தன்மையும் கற்பும் அப்படிக் கலந்தன என்று ஊகிக்கலாம். சிலப்பதிகாரக் கண்ணகி குழந்தைமணம் புரிந்தவள். ஆனால் கண்ணகியின் கற்பு குறித்து இளங்கோ சொல்வது வெறும்பாலியல் நெறியை மட்டுமல்ல. கண்ணகியின் கற்பு என்பது மரபான நெறிகளைக் கற்று அதன்படி உறுதியாக வாழ்வது என்றே சிலப்பதிகாரம் சொல்கிறது. கண்ணகியின் குணச்சித்திரம் எப்போதும் உறுதியான அறநெறிச்சார்பு கொண்டதாக, தவறானதைப் ‘பீடு அன்று’ என்று திட்டவட்டமாக ஒதுக்கிவிடுவதாகவே உள்ளது. அதுவே கற்பு.

சிலப்பதிகாரத்தின் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பேரரசுகளும் உறுதியான நிலப்பிரபுத்துவ அமைப்பும் உருவாகிவிட்டன. அத்தகைய உறுதியான சமூக அமைப்புக்கு உறுதியான குடும்ப அமைப்பின் அடித்தளம் தேவை. அப்படி உறுதியான குடும்ப அமைப்பை உருவாக்கத்தக்க விழுமியமாகவே சிலப்பதிகாரம் கற்பைப்பற்றிச் சொல்கிறது. அந்த விழுமியங்களைக் கொள்கைகளாக வகுத்துரைத்தது குறள் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ போன்ற கருத்தெல்லாம் அப்போது நிறுவப்பட்டவையே.

கம்பன் காலகட்டத்தில் அச்சமூக அமைப்பு மேலும் வலுவாகியது. ஆகவே கம்பனின் வரையறை இன்னும் திட்டவட்டமாக உள்ளது.ஆனாலும்கூடக் கம்பன் சொல்லக்கூடிய கற்பின் வரையறை வெறும் பாலியல்பழக்கநெறி மட்டுமல்ல. நூலும் மரபும் வகுத்த நெறிகளைக் கற்று அதன்படி நிற்றல்தான் அது.

அதன்பின் இந்நூல்கள் சொல்லக்கூடிய செவ்வியல் வரையறையை நாம் நூல்கல்விமூலம் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்திக் கொண்டிருந்தோம். அதாவது நூல்கல்வி கற்ற மேல்மட்டத்தில் .அடித்தளத்தில் நம் சமூகத்தில் பொதுவான சாதிய ஆசாரங்களே நிலவின.

பத்தொன்பதாம்நூற்றாண்டில் அனைவருக்கும் பொதுக்கல்வி அளிக்கப்பட்டபோது இந்தச் செவ்வியல்நூல்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டன. அப்போது இந்தச் செவ்வியல் வரையறைகளும் கற்பிக்கப்பட்டன. தமிழ்ச்சமூகம் கற்பு போன்றவற்றுக்குரிய பொதுவரையறையைக் கேள்விப்படுவதே அப்போதுதான்

அந்நிலையில் மிகப்பெரிய சங்கடங்கள் எழுந்தன. தமிழாசிரியர் கற்பு பற்றி இளங்கோவும் வள்ளுவரும் கம்பனும் சொல்லும் வரையறையைச் சொல்கிறார்.அவரது வகுப்பில் உள்ள பிள்ளைகளில் கால்வாசிப்பேர் கூட
அந்த வரையறை செல்லுபடியாகும் சூழலில் இருந்து வந்திருக்கமாட்டார்கள் என்பதே தமிழக யதார்த்தம். இரண்டு மூன்றுமுறை அறுத்துக்கட்டிய பெண்ணின் பிள்ளைகள் அங்கே இருப்பார்கள். அவர்கள் தங்கள் தாய்மார்கள் கற்பில்லாதவர்கள் என்று ஒத்துக்கொள்ளமுடியுமா என்ன?

நான் பள்ளியில்படிக்கும்போது இந்தச்சிக்கல் எப்போதுமிருந்தது. என்னுடன் படித்த சில ஆசாரி, மூசாரி சாதியினரில் ஒருபெண் இருவரை ஒரே சமயம் மணந்துகொள்ளும் வழக்கம் இருந்தது. நாயர் சாதியில் தந்தை என்ற அடையாளமே பெரிதாக இருக்கவில்லை. புலையர் சாம்பவர் சாதிகளில் பலமுறை அறுத்துக்கட்டும் முறை இருந்தது. கற்பு என்பதை விளக்கிய தமிழாசிரியர் ‘இதெல்லாம் அந்தக்காலத்திலே சொல்லி வச்சிருக்காங்க…அவ்வளவுதான்’ என்று சொல்லிக் கடந்து சென்றார். அவரது அம்மாவுக்கே இரு கணவர்கள்.

நாம் கற்பு பற்றிப் பேசும்போது மேலே சொன்ன செவ்வியல் வரையறைகளைக்கொண்டு பேசுவது அபத்தம். நம்மைச்சுற்றியிருக்கும் வாழ்க்கையை முன்வைத்துப் பேசுவோம். இங்கே கற்பு என்றால் ‘புறவயமான தந்தை அடையாளம் கொண்ட பிள்ளைகளுக்கு அம்மாவாக இருத்தல்’ என்று மட்டுமே அர்த்தம். அந்த அடையாளம் தேவையில்லாத தாய்வழிச்சமூகங்களில் அந்த வரையறைகூட இல்லை.

தாய்வழிச்சொத்துரிமை கொண்ட சமூகங்களில் கற்பு என்ற சொல்லுக்கே பொருள் இல்லை. அங்கே கௌரவம் என்பது குலஅறங்களைக் கடைப்பிடிப்பதுதான். சென்றநூற்றாண்டில் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஒரு நாயர்பெண்மணி நீதிமன்ற முகப்பிலேயே கழுத்தைவெட்டிக்கொண்டு தற்கொலைசெய்துகொண்டார். அவர் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்கமுடியாத காரணத்தால் சொன்ன சொல்லைக் கடைப்பிடிக்கமுடியாமல் ஆயிற்று. அதன்பின் அவர் உயிர் வாழவிரும்பவில்லை

அந்தப்பெண்ணைப்போன்றவர்களையே அந்தப் பெண்வழிச்சமூகம் பெருங்கற்புள்ளவளாகக் கருதியது.அங்கே பெண்ணுக்கு ஒழுக்கம் என்ற பொருளில் புழக்கத்தில் இருந்த சொல் ‘சாரித்ரியம்’ என்பது. அதன் பொருள் ‘சிறந்த அறச்செயல்பாடு’ என்பதுதான்.

என் சிறு வயதிலேயே ‘தன்றேடம்’ [தன் இடம், தைரியம்] உள்ள அம்மச்சிகள் சொல்லும் ஒரு சொற்றொடரை அடிக்கடி கேட்டிருக்கிறேன். ‘குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு சொல்லே தெய்வம்’. அதாவது சொன்ன சொல்லில் உறுதியாக நிற்பதுதான் பெண்ணின் மிகச்சிறந்த நிலை. சொல்பிழைபட்டால் வாழக்கூடாது.

அப்படிப் பெருமதிப்புக்குரியவர்களாக நிமிர்ந்து வாழ்ந்த அம்மச்சிகள் பலருக்கும் பதினைந்தும் இருபதும் ‘சம்பந்தங்கள்’ இருந்தன. ஆண் உறவுகள் என்று அவற்றைச்சொல்லலாம், திருமணம் என்றல்ல. அவர்களின் எந்தக்குழந்தைக்கும் தந்தை என்ற அடையாளம் இருக்கவில்லை. தாய் வழியாகவே அவர்கள் குல அடையாளம் பெற்றார்கள்.

அந்த அம்மச்சிகள் தந்தைவழிச் சொத்துரிமைகொண்ட குடும்பத்துப் பெண்களைத்தான் கௌரவமற்றவர்கள் என்று நினைத்தார்கள். ஏனென்றால் அவர்கள் சொன்ன சொல்லைக்காப்பாற்ற முடியாது. அவர்கள் ஒரு ஆணுடன் வாழ்பவர்கள். எதற்கும் ஓர் ஆணின் அங்கீகாரம் தேவை. சொந்தமாக சொத்தோ குலமோ இல்லாதவர்கள் ஆகையால் தந்தைவழிச்சமூகக் குலப்பெண்கள் சுயஅடையாளமற்றவர்கள் . ஆனால் அந்தத் தந்தைவழிச்சமூகம் அவர்களைக் கற்பின் கனலிகள் என்று கொண்டாடும் இல்லையா? என் அம்மச்சி கண்ணகியை ’சாரித்ரியம்’ இல்லாத அடிமைப்பெண் என்றுதான் சொல்லியிருப்பார்.

இந்தக் கற்பு என்ற சொல்லைப்பற்றி இன்று மிக அதிகமாக அலட்டிக்கொள்பவர்கள் ஆண்களே. அவர்களுக்குப் பெண் உடல்மீதான முற்றாதிக்கம் இல்லாதாகிறதோ என்ற பதற்றம் மட்டுமே அதன் காரணம். பெண்கள் கற்பு தவறுகிறார்கள் என்றெல்லாம் இவர்களே ஓலமிடுகிறார்கள். இதுசரியா அதுசரியா என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். கற்பு என்பது பெண்ணின் கால்களுக்கு நடுவே இருக்கிறது என்று நம்பிக்கொள்கிறார்கள். பெண்களுக்கு உண்மையில் அந்தக் கவலைகள் இல்லை. அவர்கள் நாடுவது தன்னுரிமையையும் சுதந்திரத்தையும்தான்.

நம் மரபே நமக்குக் கற்பு என்பதற்கு இரு வரையறையை அளிக்கிறது. ’கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்பது ஒன்று. ‘கற்பென்பது ஒருவனைப்பற்றி ஓர் அகத்திருத்தல்’ என்பது இரண்டாவது. நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது முதல் வரையறையைத்தான். ஓரகத்தில் இருக்கவேண்டுமா ஒருவனைப்பற்றிக்கொள்ளவேண்டுமா என்பதெல்லாம் பெண்கள் அவர்களே முடிவுசெய்யட்டும்.

என் பார்வையில் ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி’ கொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள். கற்பு என்பது அந்த நெறியைக் கற்றுக்கொள்வதுமட்டும்தான்

ஜெ

[

எழுதியவர் : (15-Dec-18, 5:43 am)
பார்வை : 81

மேலே