பசுமை நிறைந்த நினைவுகள்

நான் பிறந்ததுமுதல்,
இப்பிரபஞ்சத்தில் நேசித்த அத்தனைக்கும்,
ஆகச்சிறந்த உருவகமாய் ஆனவள்.

வர்ணிக்கப்படும் வார்த்தைகள் அத்தனைக்கும்
உயிரோவியமாய்த் திகழ்ந்தவள்.
மென்மைக்கு இலக்கணமாய்ச் சொன்ன யாவையும்,
அவள் விரல்களுக்குள் சங்கமமாயின.

அன்பெனும் பிடியுள் அகப்பட்டுக் கிடந்த
அற்புதத் தருணங்கள் ஆயிரம் உண்டு.

வாளெடுத்து பேசும் வண்ண விழிகளால் ,
நான் வார்த்தை இழந்து சிலையென நின்ற நாட்கள்
எத்தனை எத்தனையோ...!

மௌனத்தின் சாறெடுத்து,
உன் விழிகள் பேசிய மொழிகள்,
இன்றளவேனும் புரியாது போய்விட்டது.

எதார்த்த நிமிடத்தில் நிற்க்கவியலாத சிந்தை,
என்னைக் கற்பனைக் கடிவாளம் பூட்டி,
காவியக் காதலுள் அழைத்துச்சென்றது.
ஒருகணம் சிந்தித்தால் கூட,
மறுகணம் உன்னை நோக்கியே பயணப்பட்ட மனமும்,
விசித்திர வீரியம்கொண்ட விதைகளாய் உருத்தரித்த
உன் நினைவுகளும், மேலும்மேலும் என்னுள்
பிரளயத்தையே பிறக்கவைத்தான.

இன்றோடு தொலையட்டும் என
எத்தனை இரவுகள் ஏமாற்றப்பட்டன.
மீண்டும்மீண்டும் உந்தன் நினைவை நோக்கியே
பயணப்படும் என் சிந்தைக் கால்கள்.

இதழ் மௌனமாய்க் கிடந்தால் கூட,
மனம் மட்டும் அவள் பெயரை முனுமுனுக்கும் தொடர்நிகழ்வு.
விரல்கள்கூட அவளுக்காய் என்றும்
வார்த்தைச் சுமக்கத் துணிகின்றன.

சற்று யோசித்தல்கூட அவள் நினைவுகள்
உயிரின் கடைசித்தளம் வரை சென்று
காயப்படுத்த விழைகின்றன.
மனித ஜீவிதத்தையே வெறுக்கும் நிலை.

நிதர்சனம் உணர்ந்த பின்னும் ,
நினைத்துப் புலம்பும் மனம்தான்
இன்னும் விசித்திரமாய் உள்ளது.

அவள் நினைவின் அலைகள் சற்று கசிந்தால்கூட
மனம் பிரளயத்தை நோக்கிப் பயணப்படுகிறது.
அதனுடன் விழிகளும் வழிமொழிந்து,
நதியோட்டதை வரவழைக்கின்றன.

விடைதெரியாது அவள் வீசிச் சென்ற
எண்ணிலடங்காக் கேள்விகள் ,
இன்னும் என் நினைவுக்குள் அலைந்து திரிகின்றன.
அத்தனைக்கும் தீர்வு தேடியே
இந்த ஆயுள் முடிந்து போகலாம்.

காலம்கடந்து காத்திருந்த தருணம் ;
எண்ணிலடங்கக் கேள்விகள்
இன்னும் எழத்தான் செய்கிறது;
கண்ணிலவளைக் காண்பேன எனக்
காத்துக் கிடந்த நாட்கள், எத்தனை எத்தனையோ;
மண்ணில் அவள் வந்ததெல்லாம்
மாபெரும் தவமென நினைத்த அதீத கற்பனைகள்;

மீண்டும் ஒலித்தது அந்த ஏகாந்தக்குரல்
மயங்கச் செய்யும் அந்த மையிருட்டு விழிகள்
சற்றும் சிந்திவிட்டு அகலவில்லை.
மழலை மாறாத அவள் இதழின் புன்னகை
மீண்டும் கேட்கத்தான் இத்தனைக் காலங்களா...?

பூவீசிய மேடையிலே
தமிழ் பாவீசி நடந்த காலங்கள்.
என் நாவீசிய மொழிகளை
நாழிகை தோறும் நீ ரசித்த காலங்கள்.
எல்லாம் இன்றளவேனும்
பசுமை நிறைந்த நினைவுகளாகவே உள்ளது.

எழுதியவர் : வேத்தகன் (15-Dec-18, 11:03 am)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 319

மேலே