பிரபஞ்சன் என்னும் இலக்கிய விசும்பன்

ஆதிக்கம் சுமந்த
அதிகார எழுத்துகளின்
கழுத்துக்குச் சுளுக்கெடுத்த
எழுத்தாளனே !

நீ புதுவையில் தோன்றினாலும்
மதுவகை அல்ல !

மாறாக மதுக்குடுவை மத்தியில் தோன்றி மயக்கம் தெளிவித்த
மைக்குடுவை நீ !

எதை எதையோ
கருக்கொண்டு
கதை எழுதியவர்கள் மத்தியில்

மனிதநேய
விதை கொண்டு
கதை எழுதிய
கருத்தாளன் நீ !

நீண்டு கிடந்த
இலக்கியத்தில்
நீட்டிக்கொண்டிருந்த
முட்களெல்லாம்

உன் பேனா முள்ளின்
கூர்மை கண்ட வெட்கத்திலேயே

கூனிக்குறுகி
முனை மழுங்கி
முறிந்து போயின !

உன் விமர்சனக் கணைகளுக்கு
விதிவிலக்கு இல்லை

அவற்றில்
வேஷம் போட்ட
விதிகளும் எரிந்துபோயின

வெளிச்சம் தராத
விளக்குகளும் எரிந்து போயின !

மானுடம் வெல்ல
இலக்கிய
வானத்தை வசப்படுத்திய
ஞானத்தின்
வல்லூறு நீ !

மூடத்தனம் மூடிக்கிடந்த பொதுப்புத்தியை
உடைத்த
புதுப் புத்தி உனது !

பெண்ணுக்கு உரிமையைப்
பெண்ணை விடப்
பெரிதாய்க் கேட்டவன் நீ

மானுடத்தின்
இருப்பைப் பேசிய
மானுடன்

இப்போது
காலத்தின் இருப்புக்குள்
கரைந்து விட்டாய் !

இலக்கியம் இருக்கும் வரை
ஒரு மகா நதியாய்
எங்கள்
மனங்களில் பயணிப்பாய் !

உன் நினைவை
எங்கள் கண்ணீரால்
காப்போம் !

உன் கனவை
எங்கள் கருத்தினால்
காப்போம் !

வருத்தங்களுடன்..

_ நவீன் இளையா

***🙏🏻😓***

எழுதியவர் : நவீன் இளையா (24-Dec-18, 4:29 pm)
சேர்த்தது : நவீன் இளையா
பார்வை : 66

மேலே