பனிக்குடம்

பனிக்குடம்

பனிக்குடம்
உடையும் முன்பாகவே
உடைந்து நொறுங்கியது
கருவைச் சுமந்த
பூ ஒன்று
மனிதத் தவறுகளால்.

மலரும் முன்பாகவே
மொக்கும்
கருகிவிடுமோ
என அஞ்சி
துடிதுடிக்கிறது
தாயுள்ளம்.

உயிர்க்கொல்லி நோய்
வராமல் இருக்க
'விழிப்புடன் இருப்போம்,
வருமுன் தடுப்போம்'
என
அரசு மருத்துவமனையில்
தட்டி வைத்தவர்கள்
மறந்தது எதை?
தடுத்தது எதை?

கோடி கோடியாக
கொட்டிக் கொடுத்தாலும்...
அரசு பணியைக் கொடுத்தாலும்...
ஒரு தாய்மைக்கு
ஈடாகுமா
இவை யாவும்?

வறுமை சாகும்வரை
சாகாது
இத் தேய்வு நோய்.

நாடாளும்
அவைகளில்
இருபாலரும்
சரிநிகர் எண்ணிக்கையில்
அமர்ந்து வாதிடும்
நாளே
விடுதலை நாளாகும்.

பூந்தணல்
மகளிரே
நிலா நிழலில்
இளைப்பாறியது போதும்.

கதிரவனின் கற்றை
ஒவ்வொன்றிலும்
விடுதலை குரல்
எதிரொளித்து
தேசியக் கொடியை
பூவிரல்கள்
ஏற்றட்டும்.

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (28-Dec-18, 10:23 pm)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 98

மேலே