மார்கழி மாதம்
மார்கழி மாதமல்லவா இது
பூஞ்சோலைக் கெல்லாம் பனி நீராட்டம்
இளங்காலைவேளையில் தெருவெல்லாம் பனிமூட்டம்
இல்லந்தோறும் வாசலுக்கு முன்னே பெண்கள்
பசுஞ்சாணம் கொண்டு மெழுகி சுத்தம் செய்து
கோலமிட்டனர் அதில் தங்கள் கற்பனை திறனையும் கூட்டி
கோலத்தின் நடுவே பசுஞ்சாணத்தின் மீது
அன்றலர்ந்த பெரும் பூசணிப்பூ வைத்தனர்
மாதத்தில் நான் மார்கழி என்று சொல்லும்
மாலவனுக்கு இப்படி கோலம்போட்டு
திருப்பாவையும், திருவெம்பாவையும்
இனிய ராகம் சேர்த்து பாடி தொழும் மங்கள கோஷம்
காதில் வந்து பாயுதே தெய்வமணம் கமழ
அங்கு அந்த கண்ணனுக்கு படைக்கும்
வெண்பொங்கலின் மணமும் சேர்ந்து
திருமால் கோவில் மணியின் ஓசையும்
இப்போது ஊருக்கே ரீங்காரம் சேர்க்க
ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பதுபோல்
ஓர் எண்ணம் தோன்றுதையா மனதில்
மார்கழி தமிழ் மாதங்களில் இப்படி
இறை மணம் சேர்த்து தனித்து நிற்க
அதில் வில்லிபுத்தூர் கோதை கருத்தில் நிற்கின்றாள்
உயரரங்கற்கே கன்னி உகந்தளித்த' விட்டுசித்தன் பெண் அவள்
'திருப்பாவையும்'தமிழ் மறைதந்த மாது.