புத்தாண்டே வருக

திரியனையில் ஏறிய
ஒளிபோல்
நாட்கள் எனும் அரியணையில்
ஏறி எங்கள் வாழ்வில்
ஒளி வீச வருக

புத்தாண்டே
உன் மாதப் பிள்ளையை
எனக்கு மனம் முடித்து
என்னை மாப்பிள்ளை ஆக்கு

உன் 365 நாட்பிள்ளைகளையும்
எனக்கு நன்மை பயக்கச்சொல்லி
என்னை மா பிள்ளை ஆக்கு

ச்சீ என்று வெறுக்காது
மகிழ்ச்சியை என்றும் கொடு
முயற்சியை என்னுள் நடு
அயர்ச்சியை உன்னுள் எடு

உன் கருவறைக்குள்
என்னை மகனாக்கு
நான் தெருவரைக்கு
வரும்போது மகானாக்கு

இவ்வாண்டில்
வீட்டிற்குள் ஒளியாது
பாரதி கண்ட கனவை
ஒலிக்க வைக்கும் பெண் மக நாக்கு
ஏனெனில் மகா கவியின்
நாக்கு பலிக்க வைக்கும் பண் மாகா நாக்கு

புத்தாண்டே
இவ்வாண்டில் என்
தடைகளை நீக்கு
படைகளை ஆக்கு
குறைகளைப் போக்கு
நிறைகளைத் தூக்கு

புத்தாண்டே
புயல் வந்து விளையாடிய
நிலத்தில் முயல் வந்து
விளையாட வை

உடல் சோர உழைப்பவன்
மகிழ
கடல் சேரும் நதிநீரை
விதையின் உடல் சேர வை

உன் நாட் பூக்களில்
நல்ல நட்புக்களை
அதிகம் பூக்கவை

புன்னகை கருவிற்கு
மட்டும் உன் கர்பத்தில்
இடம் கொடு

மார்கழியில்
என் துன்பங்களை
களையாய் கழி

உழைப்புக்களை
என் தோட்டத்தில்
பூக்களாய் பூக்கச் செய்

இனிய புத்தாண்டே வருக
இன்பத்தை மட்டும் தருக

எழுதியவர் : குமார் (31-Dec-18, 10:23 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : puthaande varuka
பார்வை : 932

மேலே