மாந்தர் மதிநலங்கண்டு உய்ய வருமொருநூல் - 3 நூல் வந்த நிலை, தருமதீபிகை

நேரிசை வெண்பா

பூந்திரைசூழ் ஞாலம் புனிதமுறப் போதநலம்
ஏந்திசைகொண் டெங்கும் இனிதேற - மாந்தர்
மதிநலங்கண்(டு) உய்ய வருமொருநூல் செந்தில்
அதிபதியால் கண்டேன் அகம். 3

- நூல் வந்த நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகம் புனிதம் அடையவும் ஞான நலம் மேன்மையுடன் எங்கும் பெருகி வரவும், உயிர்கள் உணர்வொளி பெற்று உய்தி யுறவும் செந்திற் பெருமான் திருவருளால் என் உள்ளே ஒரு நூலைக் கண்டு அதனை வெளியே கொண்டு வந்தேன் என்பதாம். புனிதம் உற - பாவ அழுக்கு நீங்கிப் பரிசுத்தம் அடைய;

உய்யவரும் நூல் என்றதனால் இதன் உறுதி நலன் உணரலாகும். புதுமையும், அருமையும் தெரிய ’ஒரு’ வந்தது. திருச்செந்திலம்பதியில் எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுளை செந்தில் அதிபதி என்றது. உள்ளம் கவர்ந்து உயிருருக்கி என்னைக் கொத்தடிமை கொண்டுள்ள குலதெய்வமாதலால் புத்தமிர்தனைய இந்த உத்தம நூலை என்னிடம் இனிதாய் உய்த்தருளியதென்க. உரிய அடிமையிடம் அரிய படிமையை அருளியுள்ளது.

திருவருளால் வந்துள்ளமையால் உலகமெல்லாம் நலமுற இந்நூல் என்றும் நின்று நிலவி இன்பம் அருளிவரும் என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-19, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே