கோபம் - என் உணர்வு

எனக்கு பள்ளிக்கூடத்தில் கோபம் வந்த போது மேசையில் குத்தினேன்.
வீட்டில் கோபம் வந்த போது பாத்திரங்களை நெளியச் செய்தேன்.
கல்லூரியில் கோபம் வந்த போது பல இடங்களில் அமைதியாக பழகினேன்.
யார் மீது கோபம் வருகிறதோ அவர்களிடம் பேசுவதைத் தவிர்த்தேன்.
இன்று எனது எதிரியாக எனது கோபம் உள்ளது.
அதே வேளையில் பல இடங்களில் எனது கோபம் எனக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கிறது.
சில நேரங்களில் கோபத்தில் இரும்பி கம்பியில் குத்தி என் கைகள் வீங்கியும் இருக்கின்றன.

எனக்கு கோபம் ஏற்படும் போது வார்த்தைகள் குறைந்துவிடுகின்றன.
என்னை நானே காயப்படுத்திக் கொள்ளத் தோன்றுகிறது.
ஆனால், இதுவரை கோபத்தில் பிறரை நான் தாக்கியதில்லை.

பல இடங்களில் என் கோபம் அழுகைகளாக வெளிப்பட்டு இருக்கிறது.
அந்த அழுகை தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத பாடங்கள்.

இயல்பாக பார்த்தாலே முறைப்பாகத் தான் என் முகம் இருக்கும்.
நான் கடந்து வந்த ஒவ்வொரு சூழலும் என் மனதில் பதிந்த பாடங்கள்.

கல்லூரியில் சிரிக்க வைத்த தருணங்கள்,
என் இயலாமையை உணர்த்திய நிமிடங்கள்,
எல்லாமே பசுமரத்தாணி போல் அப்படியே உள்ளன.

இப்போது கூட சில நண்பர்கள் எனக்கு கால் செய்து அறிவுரை வழங்குகிறார்கள்.

எல்லாருடனும் சகஜமாக பழக வேண்டும் என்றும் அப்போது எனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றும் என் குடும்ப பொருளாதார நிலை மாறும் என்றும் பல அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.

அவர்கள் கூறிய வார்த்தைகளுக்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை.
சிரித்தபடி சரியென்று சொல்லிவிட்டேன்.

அந்த இடத்தில் கோபம் தேவையற்றது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
அதே நேரம் நாம் ஆற்றும் செயல் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் போன்ற வியாபாரிகளோடு என்னால் ஒருபோதும் ஒத்துப் போக இயலாது.
உடலாலும் மனதாலும் கடுமையாக உழைக்கத் தயாராகவே உள்ளேன்.

ஆனால், நான் கோபக்காரன் என்பது வெளிப்படையான உண்மை.

என்னை ஏமாற்றியவர்களிடம் எனக்கு அன்பு இருந்தாலும் அவர்களை விட்டு விலகிவிடுவேன்.
எந்த சூழ்நிலையிலும் அவர்களோடு பேச மாட்டேன்.

எனது கோபத்தோடு எனக்கு சுயமரியாதை உணர்வும் அதிகம்.
அதனால், யார் முன்பும் கைகட்டி நிற்பதோ,
காலில் விழுவதோ எனக்கு பிடிக்காது.
அதை ஒரு போது அனுமதிக்க மாட்டேன்.
அதே சமயம் அன்பிற்கு கட்டுப்படுவேன்.
என் மீது அன்பு கொண்டு கூறப்படும் கட்டளைகளை ஏற்பேன்.
அதை நிறைவேற்றுவேன்.

தேவைக்காக மட்டும் நம்மை நாடும் உலகம்,
தன் தேவை முடிந்ததும் நம்மை விட்டு ஓடும்.
இப்படி பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.
ஒருவர் உதவி கேட்பார். செய்வேன். உதவி முடிந்ததும் அவரைக் காணக் கூட முடியாது.
ஆனால் மறுமுறை உதவி தேவைப்படும் போது என்னிடம் கேட்பார்.
அங்கு நான் கோபப்படவில்லை.
அவர்க்கு மீண்டும் மீண்டும் உதவிகள் செய்திருவேன்.

என்னிடம் இல்லை என்ற சொல் அடிக்கடி வெளிப்படுவது, பணம், ஆன்ட்ராய்ட் மொபைல், மடிக்கணினி, இருசக்கர மோட்டார் சைக்கிள், ஸ்டைலான ஆடைகள் போன்றவற்றிற்காக.
இவை என்னிடம் இல்லாமையால் பல சூழல்களில் நான் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் என் கோபம் என் மீது இருந்தது உண்டு.

நண்பர்களோடு ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக விளையாட விரும்பும் எனக்கு அப்படி விளையாடுவதற்கான சூழல்கள் நான் வளர வளர குறைந்துவிட்டன.

இன்றும் நான் கோபப்படும் விடயம் எந்த பெண்ணை காதலித்ததால் ஆசிரியர்களிடம் நான் சம்பாதித்த நற்பெயர்கள் கெட்டதோ அந்த பெண் இப்போது என்னோடு இல்லை என்பதே.

" அவளுக்கென்ன? நன்றாக இருக்கிறாள்.
அகப்பட்டவன் நான்னல்லவா? ", என்று பாடல் வரிகளை மாற்றிப்பாடும் அளவிற்கு என்னுள் அந்த தாக்கம் புதைந்துள்ளது.
அந்த தாக்கமே வேறு பெண்களிடம் இருந்து என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

உலகின் மீது வெறுப்பும், கோபமும் ஏற்பட வேதாந்தத்திலும் நிலையாமை கொள்கையிலும் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

என் மனதில் எழுந்த உணர்ச்சிகளின் தாக்கங்களை என் கவிதைகளில் நன்றாக காணலாம்.
நான் சிறுவயதில் வாழ வேண்டுமென கனவு கண்ட வாழ்க்கையின் சூழல்களை எனது கதைகளில் அவ்வப்போது உணரலாம்.

நான் யார் என்பதை அறிந்து கொள்ள முற்பட்டபோது நான் மிகவும் கோபக்காரனாகவே தென்படுகிறேன்.
என் கோபம் யாரையும் தாக்கியதில்லை.
ஆனால் என் கோபம் அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.
என்னை பிரிந்து சென்றவர்களும் உண்டு.

கோபக்காரனான நான் அன்பைப் பற்றி அதிகமாக எழுதியிருக்கிறேன்.
என் மனம் கோபத்தில் கொதித்தாலும் அதன் ஆழத்தில் அன்பே இருக்கிறது.
அந்த அன்பு வெளிப்படும் போது என்னை விரும்பாதவர்களையும் விரும்ப வைக்கும்.
ஆனால், கோபம் விரும்பியவர்களையும் வெறுக்க வைக்கும்.
ஏமாற்றி வெற்றி பெறுவது தவறு என்பதில் என் கோபம் என்னுடைய இயல்பாக உள்ளது.
தவறான செயலை செய்யச் சொன்னால் அது வெளிப்படுகிறது.

என் தந்தை என் கோபத்தின் சீற்றத்தை அடிக்கடி கண்டவர்.
நான் அதிகமாக கோபப்படுபவனாக மாறக்காரணம் அந்த காதலும், அந்த பள்ளிக்கூடமும் தான்.

சமைத்த உணவை உண்பதிலே தென்படாத சாதி கள்ளம் கபடமின்றி பழகும் இருமனங்களை பிரிப்பதிலே தென்படுகிறது என்றால் இந்த உலகை வெறுப்பதில் கோபம் கொள்வதில் தவறென்ன உள்ளது?

எனது மனதில் ருத்ரதாண்டவம் ஆடிய உணர்ச்சிகள் என் எழுத்துகளில் வெளிப்பட்டன.
அதையே நான் களத்தில் இறங்கி செய்திருந்தால் இந்த உலகம் என்னை பயங்கரவாதி என்று தூக்கியிட துடிக்கும் யாரும் கட்டுபடாமல் ஆயுதம் ஏந்தி திரிந்துக் கொண்டிருப்பேன்.
ஆனால், என்னை கட்டுக்குள் வைத்திருக்க எனக்கு தெரிந்தே இருக்கிறது.

தவறு என்னால் நிகழ்ந்திருக்கு எனத் தெரிந்தால் மன்னிப்பு கேட்டுவிடுவேன்.
கொடுரமான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கிறேன்.

நான் நடிக்கிறேன் என்று என் நண்பர்களில் பல கூறிய போதிலும்,
நான் கோபக்காரனாக அன்பை நாடி அன்பைச் சரணடையும் பித்தனாக என் வாழ்வை கடத்துகிறேன்.
என் உணர்வை படித்த அனைவருக்கும் நன்றிகள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jan-19, 1:17 pm)
பார்வை : 810

சிறந்த கட்டுரைகள்

மேலே