பொங்கல் கேள்வி பதில்

பொங்கல் கேள்வி பதில்
------------------------

ஆசீவக தமிழ் செட்டியார்:: மேலுள்ள காணொளியில் விளக்குபவர் முனைவர் பாண்டியன் ஐயா அவர்கள். அவர் சொல்லும் கருத்துக்களில் பிழைகளை சுட்டிக்காட்டும் நீங்கள், அவரின் நேயர்களான எங்களுக்கு இருக்கும் ஐயங்களுக்கு உங்களின் பதில்களை அளித்து தெளிவு படுத்த வேண்டுகிறேன்...!


கேள்வி 1. சிவன் யார்? எங்கு வாழ்ந்தவர்?

பழனிராஜன் பதில் ::
நான் தமிழ் நாட்டில் பிறந்தவன். மேலும் பரம்பரைப் பரம்பரையாக மதம் மாறாமல் இந்துவாவாக இருக்கும் குடும்பத்தில் பிறந்தவன். இந்தியாவைத் தவிற பிறநாட்டில் பல மதங்கள் உள்ளன என்பதையும் அறிவேன். படையெடுப்பால் பிறநாட்டவர் இங்கு வந்து சாம, பேத தான, தண்டங்களால் பிற நாட்டின் மதங்களை இங்கும் பரப்பிவிட்டார்கள். கலிகால விளைவே இது. அதிலிருந்து தப்பி எனது இந்து மதத்திலே இருக்கிறேன் என்பது முன்வினைப் பயனோ என்னவோ. அதுவும் வியப்பே. பிற மதத்தார்கள் இங்கு வந்து போதனை செய்தும், நம் மதத்தை இழிவானது எனும் பேதத்தை கற்பித்தும் , தானமாக நிலங்கள், வீடுகள், கோதுமை, பால் பவுடர், மாமிசம், துணிமணிகள் கடன்கள் கொடுத்தும், அதிலும் மசியாவிட்டால் தண்டம் எனும் துன்புறுத்தலால் எமது இந்துக்களை மதம் மாற்றியுள்ளார்கள்.

மதம் மாறியவர்களின் வாரிசுகள் அவர்கள் தங்களின் முன்னோர்கள் இந்துக்களாக இருந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மதம் மாறியுள்ளார்கள் என்பதை மறந்து இந்துக்களின் மீது மோசமான விரோதம் பாராட்டுகிறார்கள். இருக்கும் இந்துக்களோ இந்துக்கடவுள் புத்தகங்களைப் படிக்காது ராகவேந்தரா, சாயி பாபா, பூண்டி மகான், சங்கராச்சாரியார், இராமலிங்கனார், இமயமலை பாபா எனும் மனிதர்களை சாமியாக்கிவிட்டார்கள். இலங்கைத் தமிழன் சுந்தரம் பிள்ளை தமிழ்த் தாய் வாழ்த்தை எத்தினான். கம்பனும் வள்ளுவனும் வணங்கிய தமிழ் கல்விக் கடவுள் சரஸ்வதியை மறந்தான்.

அருவமான ஐயன் நூறு நூறு நூற்றின் கோடி சூரிய ஒளி கொண்ட பரம்பொருளேக் கடவுள். இவரே பஞ்ச பூதம் கொண்டவர். "அகத்தியர் பரிபூரணம் -1200" எனும் நூலில் பரம்பொருள் தனது முதல் அம்சமாக சதாசிவத்தைப் படைத்து பஞ்சபூத சக்திகளில் ஒன்றான, அண்டங்கள் கிரகக்கோள்கள் மிதக்கும் வளிமண்டலங்கள் எனும் விசும்பாம் வானத்தினை படைத்து ஒப்புவிக்கிறார். ( நம்புவர் நம்பட்டும் ) நான் அகத்தியனை நம்புபவன். ஆகையால் நம்புகிறேன். பின் வாயு பூதம் எனும் காற்றை மகேஸ்வரனிடம் ஒப்புவிக்கிறார். அதன் பின் தேயுவான தீ எனும் பூதத்தை ருத்ரன் எனும் சிவனிடம் ஒப்புவிக்கிறார். இந்த சதாசிவம், மகேஸ்வரன், ருத்ரன் ஆகியோர் சிவனின் அம்சங்கள் என்கிறார்.

சிவன் அம்சமில்லாத திருமாலையும் பிரம்மாவையும் படைத்து முறையே நீரையும், மண்ணையும் ஒப்புவிக்கிறார். எல்லாப் பொருள்களிலும் இந்த பஞ்சபூதங்கள் கலந்திருக்கும். ஆனால் விகிதாச்சாரங்கள் வெவ்வேறாகி அந்தந்தப் பொருள்களாகி, உருவாகி நிற்கிறது. ஆக சிவம் ஒவ்வொரு பொருளிலும் இருக்கிறார் என்பது நம் தத்துவம். அவனின்றி (சிவம்) ஒரு அணுவும் அசையாது என்பது இதுதான். தூணிலும் இருப்பன் துரும்பிலும் இருப்பன் முன் சொன்ன சொல்லிலும் உளன் என்றார்கள் அறிஞர்கள். எங்கும் இருப்பவனே இறைவன் !! அவனை இஸ்ரவேலன், இந்தியன், இங்கிலாந்துக்காரன் என்று அழைக்க முடியாது. அங்கிங்கென்றெனாது எங்கும் நிறைந்த பொருளாம் பரம் எனும் சிவம்.




கேள்வி 2. ஏன் அவர் பிரபலமானார்? அவரை ஏன் அனைவரும் வணங்குகின்றனர்?

பழனிராஜன் பதில் ::
மேற்கூறியக் கருத்துக்களை பதினெண் சித்தர்களே ரிஷி முனிகள் என்றழைக்கப் பட்டார்கள். கடவுளுக்கொத்த இவர்களே பாமர மக்களுக்கு கடவுளின் அற்புதத்தையும் விஞ்ஞான அறிவியலையும் விளக்கினார்கள். விஞ்ஞானத்தைப் பேசாதவன் சித்தரோ பக்தியாளனோ கிடையாது. கடவுள் வந்து தன்னை வணங்கும்படி சித்தர்களிடமோ மக்களிடமோ ஒருபோதும் கேட்டதில்லை. காரணம் காட்ட விஞ்ஞானத்தை அன்று போதித்தே பக்தியை வளர்த்தார்கள். சிவ பக்தி வளர்ந்தது.



கேள்வி 3. சிவனை ஏன் ஆதி யோகி, ஆதி குரு, ஆதி நாதன், தட்சிணாமூர்த்தி , நடராஜ, என்று 1000 துக்கும் மேற்பட்ட பட்டங்களை சுட்டி அழைக்கின்றோம்?

பழனிராஜன் பதில் ::
அவனவன் சிவனை எதுவாகக் கண்டானோ அதன் பெயராலேயே அவரை அழைத்து வணங்கினான். சிவன் வழியில் நாம் நடப்பதால் அவரை நாம் சிவகுரு என்கிறோம். அவரைக் காணவே நாம் யோகத்தை செய்கிறோம். அதுவே அவரைக் காண ஒரே வழி . சித்தர் நூல்களை படித்தால் யோகம் கற்கலாம். யோகம் கற்க சந்தாக் கட்டுபவனெல்லாம் யோகி ஆக முடியாது. யோகத்தை கற்பிக்கும் தகுதி எவனுக்கும் இங்குயில்லை. சித்தர்கள் தான் யோகம் கற்பிப்பார்கள். இங்கு இப்போது எவனும் சித்தனில்லை. அவனவன் சித்தனென்று சொல்லி ஏமாற்றி வருகிறான். உடலழியாதிருக்க காய கற்பம் செய்து வெற்றி கண்டவனே சித்தன். இந்த காயகற்ப மருந்து இருப்பதைத் தெரிந்தவனே சித்த மருத்துவன். தட்ஷணத்திலிருக்கும் தமிழர்களின் முதற் கடவுள் ஆதி சிவன் என்பதைத் தெரிந்து அவரைத் தட்ஷிணா மூர்த்தி என்றார்கள் என்பதுதான் உண்மை.



கேள்வி 4. சிவனுக்கும் சிவலிங்க வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பு என்ன? பெரும்பாலான சிவன் கோவில்களில் சிவலிங்க ரூபத்தில் சிவனை வழிபட காரணம் என்ன?

பழனிராஜன் பதில் ::
அகர அண்டம் உகரப் பிண்டம்
அகர விந்து உகர நாதமாம்
உகரநா தமதில் விந்திணைய உயிராம்
அண்டநா தமதில் பிண்டவிந் துசேரவும்
அண்ட வுலகில் பெருகும் பிண்டஉயிர்
ஆண்பெண் சேர்க்கை எண்ணிக் கைஇலாக்
கண்கா ணாத்தொழில் உலகின் பெருந்தொழில்
அண்டபூ மியிலித் தொழிலேப் பிரதானம்
ஆண்டவனே லிங்கமாய்த் தோன்றிச் சொன்னார்
உலகின் உற்பத்தியே லிங்கம்
ஆண்பெண் சேர்ந்த உருவாவு டை யப்பனே

வெண்பா
உருவ இறைச்சி வசக்தி உருவ
அருவமாம் ஆவுடை யப்பன் --- அருவம்
உருவம் தெரியாப் பொருளைக் குறிக்கும்
பருவம் புரியும் உரு

லிங்கம் அருவமெனின் லிங்கம் உருவமே
லிங்கம் அருவ உருவமாம் --- லிங்கம்
உடைகொண்ட அப்பன் உடைஆயிப் பீடம்
உடையுடைய ஆவுடையப் பன்

லிங்கம் சிவனாம் அகரசக்தி லிங்கபீடம்
பங்குபோட்ட ஆவுடை அப்பனாம் --- பங்கும்
சரிபாதி கொண்ட சபாபதி ருத்ரன்
சரியாவு டையப்ப னும்

1.சிவசக்தி உருவம் கொண்டவை. உருவம் இருந்தும் புரியாதிருப்பது அருவ உருவமாம்
2. லிங்கம் புரியாதது போலிருப்பதால் அருவமாகா. ஏனெனின் அதற்கு உருவம் உள்ளது. ஆதலால் அது அருவ உருவமாம். லிங்கத்தின் அடிப்பீடம் ஆ-எனும் சக்தி லிங்கத்தைச் சுற்றிச் சூழ்ந்துள்ளது. அதுவே லிங்கத்திற்கு உடையாக அமைந்துள்ளது. ஆ-வெனும் உடையைக் கொண்ட அப்பன் ஆதலால் ஆவுடை அப்பன்.

சித்தர்களின் லிங்க விளக்கம் இன்னும் விலாவரியாக இருக்கும். அது உமக்குத் தேவைபடாது.



கேள்வி 5. சிவன் குண்டலினி யோகத்தை கண்டேக்குவில்லை என்றால், அந்த யோகா பயிற்ச்சியை முதன்முதலில் கண்டெடுத்து சித்தர்களுக்கு கற்றுக்கொடுத்தவர் யார்? எந்த சித்தர்? அது எந்த குறிப்பில் உள்ளது?

பழனிராஜன் பதில் ::
சிவனைக்காண வேண்டியே குண்டலினிப் பயிற்சியை 18 சித்தர்கள்தான் சொன்னார்கள். 18 சித்தர்களும் தங்களுக்கு எம்பெருமான் முருகவேள் சொன்னார் என்று அகத்தியர் சொல் கிறார்கள். அகத்தியன் குருவே முருகன் எனும் கந்தவேள். கந்தவேளோ ஞானத்திற்கு அதிபதி. முருகனைப் படைத்தவனோ சிவன்தான். முருகனையே நாம் ஞான குருவென்கிறோம்.


கேள்வி 6. அப்படியென்றால் சித்தர்களுக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம்?

பழனிராஜன் பதில் ::
கடவுளை சிவனெனக் கண்டவர்கள் சித்தர்கள். அப்படி சிவனை அறிந்த சித்தர்கள் தாங்களும் சிவனாகவேண்டியும் தகுதிகளை அடையவேண்டியும் தவமிருப்பவர்களே சித்தர்கள்.



கேள்வி 7. சிவன் நெற்றிக்கண்ணோடு சித்தரிக்கப்படுவது ஏன்? ஏன் வேறு எந்த கடவுளுக்கோ, சித்தர்களுக்கோ நெற்றி கண் வரைய படவில்லை?

பழனிராஜன் பதில் ::
நெற்றிக்கண் அல்லது ஞானக்கண் என்பது உலகைபடைத்த இறைவன் உலகிலும் மற்றும் உலகின் ஜீவராசிகளை கண்காணிக்கிறார் என்பதை பாமர மக்களுக்கு விளக்கவே ஞானக்கண் சிருஷ்டிக்கப்பட்டது. கடவுளை நீ எப்படி நினைக்கிறாயோ அப்படித்தான் உன் நினைவுக்கும் தெரியும் விளங்கும். கனவிலும் தோன்றும். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட நாயனார் புத்தகத்தில் படித்ததைச் சொல்கிறேன். ஒரு ஜீவராசி நினைப்பதை மற்ற ஜீவராசி அறிந்துகொள்ளாமலிருக்கும்படிதான் கடவுள் ஜீவன்களைப் படைத்துள்ளார். சித்தர்களால் சிலரின் மனதை வேண்டுமானால் படிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஜீவராசிகளும் என்ன நினைக்கிறது என்பதை அறியும் வல்லமை படைத்தவரே நாம் சிவனென அழைக்கப்படும் கடவுள். அவுருக்கு அந்த அளவுக்கு ஞான திருஷ்டியுள்ளது என்பதை விளக்கவே ஞானக்கண் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.


8. சிவனுக்கும், சிவலிங்கத்துக்கும், நந்திக்கும், பிரதோஷத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் பிரதோஷ சமயத்தில் நந்திக்கு சிறப்பு வழிபாடு?


பழனிராஜன் பதில் ::
லிங்கம் சிவனாம் அகரசக்தி லிங்கபீடம்
பங்குபோட்ட ஆவுடை அப்பனாம் --- பங்கும்
சரிபாதி கொண்ட சபாபதி ருத்ரன்
சரியாவு டையப்ப னும்

பிரதோஷ சமயத்தில் நந்திக்கு சிறப்பு வழிபாடு மனிதர்கள் எற்படுத்திகொண்ட சம்பிரதாயம். கட்டாயமில்லை. நந்தி சிவனருகில் இருக்கும் ஒரு சித்தரே. அகத்தியனேத் தமிழை முருகன் கட்டளைக்கிணங்க உண்டாக்கித் தமிழர்க்கு கொடுத்தான். எத்தனை தமிழர்க்கு அகத்தியனைத்தெரியும். எத்தனை தமிழர் அகத்தியனை வணங்குகிறார்கள். எல்லாம் பகல் வேஷம். தமிழன் ஒவொருவனும் அகத்தியனையும் முருகனையுமே முதலில் கட்டாயமாக வணங்க வேண்டியவர்கள். தமிழுக்கு கொடுக்கும் மரியாதை அகத்தியனுக்கு ஏன் கொடுக்க மறந்தார். அகத்தியரே மாபெரும் சித்தத் தலைவர். அவர் ஒருவரே சாகமலி ருக்கும் காய கற்ப மருந்தை உலகுக்கு ரகசியமாக சொல்லியுள்ளார். ஆகவே சித்தர் வாகடங்களைப் படியுங்கள்.


9. இப்போது உள்ள ஓலை சுவடிகள், நாடி குறிப்புகள், சங்க கால நூல்கள், சித்தர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அனைத்துமே பல பல படையெடுப்புகள் நடந்தும், நெடுங்காலமாக அப்படியே எந்த பாதிப்பும் இல்லாமல் அழியாமல் சிதையாமல் இருக்கின்றன என்று உறுதி அளிக்கமுடியுமா?


பழனிராஜன் பதில் ::
அழிந்தது போக மீதி இருக்கிறது. செல்லரிப்பில் போனவற்றை ஏன் கணக்கில் கொள்ளவில்லை? எவையெல்லாம் மக்கள் நடைமுறை பழக்க வழக்கிலிருக்கிறதோ அவைகளே அழியாமலிருக்கிறது.


10. திருக்குறள் தவிர எந்த ஒரு பழங்கால தொகுப்பும் தொலைந்த பகுதிகள் ஏதும் இல்லாமல் அப்படியே நவீன மனிதர்களான நமக்கு கிடைத்திருக்கின்றனவா?

பழனிராஜன் பதில் ::
கிடைத்தவைகளையே முழுமையாகப் படித்தவன் ஒருவனுமில்லை. கிடைத்தவைகளின் பட்டியல் இலக்கியத் தமிழ் வரலாறில் உள்ளது. திருவள்ளுவரும் பெரிய சித்தர் . இவரும் சாகா மருந்தைக் கண்டவரே. இவர் எழுதிய நூல்கள் வைத்திய சிந்தாமணி 500 கற்பங்கள் 300
ஏனிஎற்றம், பஞ்ச ரெத்தினம் 500 திரு வள்ளுவர் சோதிடம் போன்றவையாம்.

11.நான் எந்த சித்தரின் குறிப்பையும் படித்ததில்லை. ஹிந்து புராணங்கள் சொல்லும் சிவனின் கதைகளை என்னால் முழுவதுமாக ஏற்று கொள்ளமுடியவில்ல. அதனால் இந்த ஐயங்களுக்கு தயவு செய்து பதிலளித்து தெளிவுபடுத்தவும்..

பழனிராஜன் பதில் ::
சித்தர்களை யாராலும் சாகடிக்க முடியாது . களப்பிரர் காலத்தில் எந்த சித்தனை எவன் கொன்றது சொல்லமுடியுமா? பொதுவாக சரித்திரத்தில் களப்பிரர் காலம் சரித்திரத்தின் இருண்ட காலம் என்றே சரித்திர வல்லுனர்கள் சொல்லுவார்கள். அந்த இருண்ட காலத்தில் சித்தர்களை கொன்றார்கள் என்பதெல்ல்லாம் அண்டப்புளுகாம். காணொளியில் விளக்குபரெல்லாம் தங்களுக்குத் துணைக் கும்பலைத் தேடுபவர்களே.

தங்களுக்கு மக்கள் செல்வாக்கு வேண்டுமென்றால் மக்களிடம் உண்மையைச் சொல்லி அவர்கள் மனதை சீரழிகாமல் கும்பல் சேர்த்துக்கொள்ளுங்கள். எதையும் அறியாத வெகுளிகள் தமிழரினத்திலுண்டு. உங்களைப் பாராட்டுபவரெல்லாம் அவர்களே. அவர்களை மூளைச் சலவை செய்யாதீர். உண்மையை படித்து போதியுங்கள். பொதுவான காணொளியில் தவறையும் பொய்யையும் சொன்னால் விடமுடியாது. எமது தமிழனை பார்ப்பனனை திட்டியே அழித்தான் ஒருவன். இப்போது யூதா பார்ப்பனன் என்று மறுபடியும் தமிழனை கெடுக்கக் நினைக்காதீர். இதை சொல்ல எந்த தமிழனுக்கும் உரிமையுண்டு.

எழுதியவர் : பழனி ராஜன் (15-Jan-19, 1:15 pm)
Tanglish : pongal kelvi pathil
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே