திருநாகேஸ்வரம் கோவில்

ராகு பகவான் தனிக்கோவிலில் அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரம் கோவில்.
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுபகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
ராஜ வம்சத்து மன்னன் ஒருவருக்கும் அசுரகுல பெண்ணுக்கும் மகனாக பிறந்தார் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க, தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆனது. ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்கு கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மனை நாக அரசனான தக்கன் தீண்டியது. இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, தன் மகனை தீண்டிய தக்கன் பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சாபம் கொடுத்தார். இந்த சாபம் நீங்க காசிப முனிவரின் ஆலோசனைப்படி பூமிக்கு வந்து திருநாகேஸ்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது மனைவியருடன் வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் அருளாசி வழங்கி வருகிறார்.
தல வரலாறு :
கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.

எழுதியவர் : உமாபாரதி (18-Jan-19, 6:49 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 97

மேலே