தீண்டல்

தீண்டல்

இழைந்தது
வாழ்க்கை என்றாலும்
தழைத்தது
இயற்கை மட்டுமே.

நகர வீதிகளில்
நசுங்கிப் போனவர்களுக்குத்
தெரியும்
தூசுகள் பறந்தாலும்
கிராமத்தின்
மண்ணின் மணம்
பெண்ணின் தீண்டலைவிட
மென்மையானது என்று.

மாடமாளிகைகளில்
தொங்கும்
அலங்கார விளக்குகளுக்குத்
தெரியாது
இல்லத்திற்குள்ளும்
மனிதர்கள்
எரிந்து கொண்டிருக்கிறார்கள்
என்று.

விளக்கே
இல்லாத
குடிசைகளுக்குத்
தெரியும்
உள்ளே
உலா வருபவை
அணையா விளக்குகள்
என்று.

அங்கே
புன்னகையில்
பூச்சுகள்
வீசும்.
இங்கே
இழப்பதற்கு ஒன்றும்
இல்லாவிட்டாலும்
புன்னகைப் பூக்கள்
பூக்கும்.

அவர்கள்
வெள்ளம்
சூழும்போது
மட்டும்
உள்ளம்
இரங்கும்.

வெள்ளம்
வந்தாலும் வராவிட்டாலும்
எப்பொழுதும்
இவர்களின்
கரங்கள்
நீண்டே
இருக்கும்.

ஆண்டுகள்
பத்தானாலும்
அக்கம் பக்கத்தினரோடு
ஒட்டுமில்லை
உறவில்லை.

பழகியோர்
பழகாதோர்
வேறுபாடின்றி
நொடிப்பொதில்
இதயத்தில்
அமர்வர்.

சுற்றுச்சூழல் பாதிப்பால்
நகரங்கள்
நரகங்கள்
ஆகலாம்.

இயற்கையின்
வரத்தால்
கிராமங்கள்
மகரந்தங்களை
மட்டும்
வீசிக்கொண்டே இருக்கும்.

- சாமி எழிலன்.

எழுதியவர் : சாமி எழிலன் (19-Jan-19, 11:49 am)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : theendal
பார்வை : 145

மேலே