பசுமையை கொய்யாதீர்

அங்கம் சிலிர்க்கும், நல்ல
அதிகாலைப் பொழுதில்
அல்லி இதழ்விரிக்கும், பின்
அசைந்தாடி மணம்பரப்பும்
அசுணம் கண்விழிக்கும், அங்கு
கின்னரம் பண்பாடும்

தேகம் மயங்க, இளைய
தென்றல் வீசிடும்
தாழை தலையசைக்கும், அழகு
தாமரை தான்சிரிக்கும்
தேன்போல இனித்திருக்கும், மனம்
தெவிட்டாத இவ்வழகு

வாசமலர் மணம்கண்டு, சின்ன
வண்டுகள் பறந்துவரும்
வண்ணமலர் நிறம்கண்டு, அந்த
வானவில்லும் மனம் மயங்கும்
வாழ்கை இதுதானென்று, உடல்
வாடும்வரை மலர் சிரிக்கும்

போகும் இடமெல்லாம், எழில்
பொன்வண்ண மகரந்தம்
காணும் இடமெல்லாம், பொழில்
கவின்மிகு மலரங்கம்
கண்கொண்டு பார்த்தாலோ, எனக்கு
காலநேரம் போதவில்லை

துள்ளித்திரியும் மான்குட்டி, அதை
துரத்திப்போகும் மறுகுட்டி
குட்டிமான் பயந்தோட, கூட்டம்
கூட்டமாய் விரைந்தோட
எட்டிநின்று பார்த்தாலே, நமக்கு
ஏனென்று விடைபுரியும்

வில்லேந்திய வேடனொருவன், அங்கு
விரைந்துவரும் காட்சிகண்டு
புல்மேயும் மான்கூட்டம், முட்
புதருக்குள் மறைந்தோடும்
வாழ்கை வாழவேண்டி, அவைகள்
வாஞ்சையுடன் போராடும்

அந்திசாயும் நேரம்வரை, பொழில்
அங்குமிங்கும் ஓடிஓடி
மந்தி விளையாடும், பற்பல
மரத்துக்கு மரம் தாவும்
துன்பம் இன்னதென்று, சிந்தை
துளிகூட அறியாமல்

இன்பம் வாழ்க்கையென, அழகாய்
இனம் சேர்ந்து விளையாடும்
மந்திக்கு பிறந்தஅறிவு, இங்கே
மானிடர்க்கு ஏனில்லை
மதிகெட்ட மந்தியென்றோம், பாரில்
மாக்களாய் நாமிருந்தோம்

மழைவரும் என்றுணர்ந்து, பல
மாதக்கணக்கில் காத்திருந்த
மயில்கூட்டம் நடமாடும், பின்
மழையோடு உறவாடும்
மண்குளிர மழைபொழிய, நல்ல
மானினமோ அதில் நனைய

கண்குளிர இதைக்கண்டு, மரத்தில்
கவிபாடும் குயிலொன்று
தண்ணிறைந்து காட்சிதரும், மழையால்
தடாகம் வழிந்தோடும்
மண்மணம் எங்கும் வீசும், அழகு
மழலை போல் தத்தைபேசும்

உதிர்ந்த இலைசருகில், நன்றாய்
ஊர்ந்தொடும் பாம்பு கண்டு
கிளையமர்ந்த குயில் பறக்கும்
கிள்ளையும் உடன் பறக்கும்
இதையறியா எலி மட்டும், காய்ந்த
இலையிடுக்கில் படுத்துறங்கும்

திட்டமிட்டப் பாம்பொன்று, அங்கே
திடீரென உட்புகுந்து
திடங்கொண்டோன் மெலியாரை, நிதம்
திண்று பிழைப்பது போல்
வலிகொண்ட பாம்பு, எலியை
வளைத்து விழுங்கி விடும்

நஞ்சுகொண்ட பாம்பு கண்டு, பெரும்
படையும் நடுங்கும் என்பார்
என்ன உலகமடா? இப்படி
ஏறுக்குமாறாய் சொல்லுதடா
நஞ்சை விடக் கொடியதன்றோ, நானிலத்தில்
நாம் செய்யும் செயலெல்லாம்

பாவம்பல நாம் செய்து, இந்த
பட்சிகளை விரட்டுகின்றோம்
படைத்தவன் இருந்துமென்ன, இப்படி
பாவச்செயல் நடக்குதடா
பாவிகளே ! இனியேனும் காடழிக்கும்
பாதகத்தை செய்யாதீர்


காடுகளை அழிப்பதனால், என்றும்
கவலைகள் உனக்குத்தான்
இயற்கை அன்னை இறப்பதனால்,இங்கே
இழப்பெல்லாம் நமக்குத்தான்
இப்படியோர் கொடுஞ்செயலை, இனியேனும்
செய்யாதீர் ! பசுமையை கொய்யாதீர் !

எழுதியவர் : வேத்தகன் (19-Jan-19, 5:30 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 557

மேலே