அவனும் நானும்-அத்தியாயம்-20

....அவனும் நானும்....

அத்தியாயம் : 20

அன்று கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்தே அவளின் மனம் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது...ஒரு பக்கம் அவன் அவளைச் சீண்டியிருந்தானென்றால்,இன்னொரு பக்கம் ப்ரீத்தி அன்று முழுவதுமே அவனினதும் அவளினதும் சிறுவயதுப் புராணத்தினை மட்டுமாகவே பாடி அவளின் கோபத்தினை இன்னுமாய் மிகைப்படுத்தியிருந்தாள்...

அதிலும் அவள் நொடிக்கொரு முறை அவனை அத்தான் அத்தானென்றே விளித்துக் கொண்டிருந்ததில் அவளின் சினம் எல்லையைக் கடந்திருந்தது...இறுதியில் அவள் தன் கல்லூரிப் படிப்பினை முடித்ததுமே அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகிவிட வேண்டியதுதான் என்று சொன்னது வேறு அவளின் உள்ளத்தை பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருந்தது...

மனமெங்கும் பரவிக்கிடந்த சினத்தில் கண்ணாடிக்கு முன் நின்று அவனையும்,ப்ரீத்தீயையும் ஆத்திரம் தீரும் வரையில் திட்டித் தீர்த்துக் கொண்டவள்,லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த கண்ணீரோடு கட்டிலில் வந்து விழுந்தாள்...அப்போது அவளின் மனநிலையை அறிந்திராத அவளின் தொலைபேசி அவள் முதல் நாளில் அவனை நினைத்து வைத்த பாடல் வரிகளோடு ஒலித்தது...

"...மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்...
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்..."

எரிச்சலோடு வந்த அழைப்பினைப் பார்க்காமலேயே கட் செய்தவள்,மனதிற்குள் மீண்டுமாய் சிணுங்கிக் கொண்டாள்...

"ஆமா இப்போ அவனுக்காக இந்தப் பாட்டு ஒன்னைத்தான் நீ வைக்காத குறை...இவனைப் போய் கடுவன் பூனைன்னு நினைச்சியே கீர்த்து...அவன் சரியான காதல் மன்னனா ல இருப்பான் போல..."

"நாம கிருஷ் கூடப் பேசினால் மட்டும் அப்படியே தூர நின்னுக்கிட்டே கண்ணாலேயே மற்றவங்களோட மனசை பொசுக்க வேண்டியது...ஆனால் தான் மட்டும் யார்கூட வேணும்னாலும் சிரிச்சு சிரிச்சு பேசலாம்...இது எந்த ஊர் நியாயமோ..??.."

அவன் பேசியது யார் கூடவோயில்லை அவனது சொந்த முறைப் பெண்ணுடன்தான் என்பதை அவளின் ஒருபக்க மனம் அழுத்தமாய் கூறினாலும் கூட அவன் மீதான அர்ச்சனையை அவள் நிற்பாட்டுவதாகவுமில்லை...

"முறைப் பொண்ணுன்னா அவளையே முறைச்சு முறைச்சு பார்த்திருக்க வேண்டியதுதானே...எதுக்குடா தேவையில்லாமல் என்னோட மனசுக்குள்ள வந்து தொலைச்ச..??.."என்றவாறே அருகில் தன்பாட்டிற்கென அமைதியாக இருந்த தலையணையை அவனாகப் பாவித்து தன் ஆத்திரம் குறையும் வரையிலும் அடித்துத் தீர்த்தவள்,மீண்டுமாய் போன் ரிங் பண்ணவும் எரிச்சலுடன் அதனை அழுத்திக் காதில் வைத்தாள்...

"ஹலோ..."என்றவாறே அவள் பதிலிற்கு காத்திருக்க,மறுமுனையோ எந்த சத்தமுமின்றி அமைதியாகவே இருந்தது...யாரென்று அறிய திரையினை நோக்கியவள்,புதிய இலக்கமாக இருக்கவும் மீண்டுமாய் குரலெழுப்பிப் பார்த்தாள்...ஆனாலும் மறு பக்கத்திலிருந்து அவளிற்கு பதில்தான் வருவாதகவில்லை...அதில் மேலுமாய் அவளின் கோபம் அதிகரிக்க,

"ஹலோ...யாருங்க..??...லைன்ல இருக்கீங்களா இல்லையா..??.."என்றவளின் குரல் உச்சஸ்தாதியில் ஒலித்தது..

இதுவே வேறொரு நேரமாய் இருந்திருந்தால் பதில் வராமலிருக்கவே அழைப்பினைத் துண்டித்திருப்பாள்...ஆனால் அன்று அவளின் கோபத்தை எங்கு காட்டுவதென்று தெரியாது தனியாகத் தவித்துக் கொண்டிருந்தவளிற்கு அந்த அழைப்பு ஓர் வாய்ப்பாகிப் போகவும்,மொத்தக் கோபத்தையும் அதிலேயே காட்டிக் கொண்டிருந்தாள்...

அவளின் அந்தக் கோபம் எதிரில் அழைத்துவிட்டு அமைதியாக இருந்தவனிற்கு பிடித்திருக்க வேண்டும் போல்,அதனால் அவளை இன்னுமாய் சினம் கொள்ளச் செய்து மௌனமாகவே ரசித்துக் கொண்டிருந்தவன்,சிறிது நேரம் கழிந்த பின்னரே தன் இதழ்களைத் திறந்து கொண்டான்...

"நாங்க எல்லாம் லைன்லதான் இருக்கோம்...ஆனால் மேடம்தான் என்னோட லைனுக்கு வரவே மாட்டேங்குறீங்களே...ம்ம்..??..."என்றவாறே ஓர் மாயச் சிரிப்பினையும் அலைபேசி வழியாக அவளிடத்தில் அனுப்பி வைத்தான் அவன்..

அவனின் குரலொலித்த மறு விநாடியே அழைத்திருப்பது அவன்தான் என்பதை அறிந்து கொண்டவள்,அவனின் அந்த மாயச் சிரிப்பினில் தன்னை மறந்து அவனிடத்தில் சில நொடிகளிற்கு மயங்கி நின்றாள்...ஆனால் தன்னிலை உணர்ந்ததும் அவளுள் ஏற்கனவே புதைந்து கிடந்த கோபம் தலைதூக்க,

"யாருன்னே தெரியாத ஒருத்தரோட லைனுக்கு நாங்க ஏன் சேர் வரனும்...??.."

அவளின் போலியான கோபத்தினை உள்ளூர ரசித்துச் சிரித்தவன்,

"நான் உனக்கு யாருமேயில்லையா...??.."என்று ரகசியக் குரலினில் கேட்டான்...

அவனின் அந்தக் குரல் அவள் மனதை ஏதோ செய்ய அதற்கு மேலும் அவனைத் தள்ளி வைத்திட முடியாதவளாய், அதுவரையிலும் அவன் அணிந்திருந்த மௌனத்திரையினை சத்தமின்றியே களவாடிக் கொண்டாள் அவள்...ஆனால் அவளின் அந்த மௌனமோ அவன் மனதினுள் வேறுவிதமான சிந்தனை அலைகளைத் தோற்றுவிக்க,

"என்னாச்சு...ஏன் அமைதியாகிட்ட..??..பதில் சொல்றதில விருப்பமில்லையா..??..இல்லை பதிலைத் தெரிஞ்சுக்குற அளவிற்கு கூட நான் உனக்கு முக்கியமானவனில்லையா...??..."

அவனின் அடுத்தடுத்த கேள்விகளில் அவனின் கோபம் அவள் மனதினை வாட்டமடையச் செய்தாலும்,அவளால் எந்தவொரு பதிலையும் இதழ் திறந்து அவனிடத்தில் கூறிட முடியாதவளாய் உதடுகள் துடிக்க அதே அமைதியோடு நின்று கொண்டிருந்தாள்...

சிறிது நேரத்திற்கு இரு மனங்களுமே இருவேறுபட்ட மனநிலைப் போராட்டத்தோடு நிசப்தமாகியிருக்க,முதலில் அந்த அமைதியினைக் கலைத்து வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டான் அவன்...ஆனாலும் அவள் மனம்தான் எதை எங்கே கோர்த்து அவனிடத்தில் அவளின் மனதை எப்படித் திறந்து காட்டுவதென அறியாது முழித்துக் கொண்டிருந்தது...

ஆனால் அவனின் மனதோ அப்போதுதான் ஓர் தெளிவிற்கே வந்திருந்தது...அவளின் மனப் போராட்டத்தினை உணர்ந்து கொண்டவனாய் பேச ஆரம்பித்தான்...முதலில் அவளின் மௌனத்தை தவறாகப் புரிந்து கொண்டு கோபம் கொண்டவன்,பின் அவளின் உணர்வுப் போராட்டத்தினை புரிந்து கொண்டவனாய் பேச ஆரம்பித்தான்...

"சரி இப்போ நீ எங்கேயிருந்து என்கூட கதைச்சிட்டிருக்க..??.."

அவன் என்ன சொல்லப்போகிறானோ என்ற குழப்பத்தில் உதடுகளைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தவள்,அவன் திடீரென அவ்வாறு கேட்கவும்,அதை அவள் உள்வாங்கிக் கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது...

"என்னோட ரூம்ல இருந்துதான்..."என்று பதிலளித்தவளிற்கு, சம்பந்தமேயில்லாமல் இவன் எதற்கு இப்போது இதைக் கேட்கின்றான் என்ற கேள்வியும் மனதினுள் எழாமலில்லை...

"ம்ம் உன் ரூமோட சேர்ந்த மாதிரி ஒரு பல்கனி இருக்கில்ல..அங்க வா..."

அவன் பல்கனிக்கு வரச் சொன்னதுமே அவளிற்கு ஒன்றுமே புரியவில்லை...ஆனாலும் அவன் சொன்னது போலவே கதவைத் திறந்து கொண்டு அறையின் வெளியே வந்தாள் அவள்...ஒருவேளை அவன் வெளியேதான் எங்கேயும் நிற்கிறானோ என்ற எதிர்பார்ப்போடே வந்தவள்,வந்ததுமே சுற்றும் முற்றுமாய் அவனை விழிகளால் தேட ஆரம்பித்தாள்...ஆனால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை அவனின் உருவம்தான் அவளிற்கு அகப்படுவதாயில்லை...அவள் தேடிக் களைத்திருந்த வேளையில் எதிர் முனையில் இருந்து அலைபேசி வழியே அவனின் பலத்த சிரிப்புச் சத்தம் அவளின் காதினைத் தீண்டியது...

"என்ன மேடம் அக்கம் பக்கம் எல்லாம் என்னைத் தேடி முடிச்சாச்சா..ம்ம்...??.."

அவளை அவன் கண்டுகொண்டதில் நாணப்பூ அவளின் முகம் முழுவதிலும் படர அவனை மீண்டுமாய் கண்களால் தேடியவாறே பதிலளித்தாள்...

"நான் எதுக்கு சேர் உங்களைத் தேடப் போறேன்...?நீங்கதான் வெளிய வான்னு சொன்னீங்க...அதான் எங்க இருக்கீங்கன்னு சும்மா பார்த்தேன்..."

"ஏன் நான் எங்கே இருக்கேன்னு உனக்குத் தெரியாதா..??.."என்று மீண்டுமாய் ரகசியக் குரலினில் வினாவினான் அவன்...

அவன்தான் என்றோ அவளது இருதய சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து கொண்டு அவளை மொத்தமாகவே ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டானே...அப்படியிருக்கையில் அவள் மனதிற்குள்ளாகவே குடியிருப்பவனை அவள் எப்படி அறியாமலிருப்பாள்...அவன் கேள்விகளைப் தொடுப்பதில் சரியான கெட்டிக்காரன்தான் என்று மனதிற்குள் மட்டுமாகவே அவனை மெச்சிக் கொண்டவள்...வெளியில்,

"நீங்க என்ன கடவுளா..??..தூணிலையும் இருப்பீங்க துரும்பிலையும் இருப்பீங்கன்னு சொல்றதுக்கு...??.."

அவளது பதிலைக் கேட்டு பெரிதாகவே புன்னகையினைச் சிந்திக் கொண்டவன்,

"ம்ம் நான் தூணிலையும் துரும்பிலையும் வேணும்னா இல்லாமல் இருக்கலாம் மேடம்...ஆனால் உன்னோட மனசிலதான் நான் என்னைக்கோ வந்து சமத்துப்பிள்ளையாய் உட்கார்ந்திட்டனே.."என்றவனின் புன்னகை இப்போது இன்னும் பெரிதாக விரிந்தது...

அவளின் காதலைக் கண்டுபிடித்துவிட்ட அந்தக் கள்வனின் மேல் அவளுக்கு இன்னும் இன்னுமாய் காதல் அதிகரிக்க,முகம் முழுவதுமாய் நாணப்பூக்கள் மீண்டுமாய் வந்து ஒட்டிக் கொண்டன...

அவளின் அந்த நாணச் சிவப்பினை அவளின் வீட்டிற்கு எதிர் முனையிலிருந்த அவனின் நண்பனின் வீட்டு பல்கனியில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ அவளை அப்படியே தன்னிரு கைகளிலும் அள்ளிக் கொள்ள வேண்டும் போலிருந்தது...அவனைத் தேடும் அவளின் விழிகளுக்குள் கைதாகிக் கொள்ள அவனின் மனம் துடித்துக் கொண்டிருந்தாலும்...அவளுடனான கண்ணாம்மூச்சி ஆட்டம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால்,மறைந்திருந்தே அவளின் ஒவ்வொரு அசைவுகளினையும் ரசித்துக் கொண்டிருந்தான் அவன்...

இதுவரையிலும் விழிப் பார்வைகளில் மட்டுமாகவே தங்களின் நேசச் சாரல்களை ஒருவரிடத்தில் ஒருவராக பரிமாறிக் கொண்டிருந்தவர்கள்,அன்றுதான் தங்களின் வார்த்தைகளிற்கு புதுப்புது அர்த்தங்களை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள்...அதிலும் அவனோ
இரகசியமான மொழிகளில் தன் காதலை அவளிடத்தில் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்...

அவனின் அந்த இரகசியக் குறிப்புக்களை அவளின் மனம் புரிந்து கொண்டாலும்,அவனிடத்தில் எதையும் வெளிக்காட்டிடாதவாறே தன் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அவனிடத்தில் அலைபேசி வழியாக அனுப்பிக் கொண்டிருந்தாள் அவள்...இப்படியாக அவர்களின் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில்,அதைக் கலைக்கும் விதமாக அவளின் அறைக்கதவின் வெளியே பார்வதியின் குரல் அவளை அழைத்தது...

"கீர்த்து...கதவைத்திறம்மா...காலேஜ்ஜால வந்து எவ்வளவு நேரம்...இன்னும் சாப்பிட வராமல் ரூம்ல என்ன பண்ணிட்டிருக்க...??..."

"இதோ வரேன்மா..."என்று அன்னைக்கு பதிலினைக் கூறியவாறே,அவனிடத்திலிருந்தும் விடைபெற்றுக் கொண்டாள் அவள்..

"ஓகே கண்ணா....அம்மா கூப்பிடுறாங்க...அப்புறமாய் பேசலாம்..பாய்..."என்றவள்,அவனின் பதிலிற்கு காத்திருக்காமலேயே அழைப்பினைத் துண்டித்துக் கொண்டாள்...உடனேயே வந்து அறையின் கதவினைத் திறந்து கொண்டவளிற்கு,தான் இன்னும் உடையினைக் கூட மாற்றவில்லையென்பது அப்போதுதான் உறைத்தது...

"இன்னும் நீ டிரெஸ் கூட மாத்தலையா...அப்போ இவ்வளவு நேரமாய் ரூம்ல என்னதான் பண்ணிட்டிருந்த...??.."என்ற பார்வதியின் குரல் ஓர்வித கண்டிப்புடன் ஒலித்தது...

"...அது...அது...வந்து..சௌமி கோல் பண்ணியிருந்தாள் மா...அவ கூடத்தான் இவ்வளவு நேரமாய் கதைச்சிட்டிருந்தேன்.."என்று அன்னையின் முகத்திற்கு நேராய் பொய்யுரைக்க முடியாதவளாய் பார்வையினை எங்கெங்கோ பதித்தவாறே கூறி முடித்தாள்...

அவளின் அந்தத் தடுமாற்றித்தினை அவளின் அன்னை கண்டுகொண்டாலும் அப்போதைக்கு அவரொன்றும் அவளிடத்தில் கேட்டுக் கொள்ளவில்லை...

"சரி சரி...சீக்கிரமாய் போய் ப்ரெஷாகிட்டு வா...சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.."

"ம்ம் சரி மா..."என்றவள் அன்னை செல்வதையே சிறிது நேரத்திற்கு குற்றவுணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...அவள் இதுவரையிலுமே அவளின் அன்னையிடத்திலிருந்து எதையுமே மறைத்ததில்லை...ஆனால் என்று அவளின் உள்ளத்திற்குள் காதல் புகுந்து கொண்டதோ,அன்றே அவளிடத்தில் கள்ளமும் இணைந்தே புகுந்து கொண்டதையும் உணர்ந்துதான் இருந்தாள்...அதையே நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தவள்,அலைபேசியி வழியே வந்த குறுஞ்செய்தியின் சத்தத்தில் விழித்துக் கொண்டாள்...

அவனிடத்திலிருந்துதான் அந்தக் குறுஞ்செய்தி வந்திருந்தது...

"...அன்னை மடியினில்
கிருஷ்ணனானேன்..
உந்தன் மடியினில்
உன் உள்ளம் கவர்ந்த
கண்ணனாய்,
இன்று மட்டுமா...??
இல்லை என்றும் தொடருமா..??.."...என்று வார்த்தைகளை அழகாய் இணைத்து அவளிடத்தினில் வினா எழுப்பியிருந்தான் அவன்...

அதுவரையிலும் மனதிற்குள் மட்டுமாகவே அவனைக் கண்ணனென்று அழைத்துப் பழகியிருந்தவள்,அப்போது அன்னை அழைத்த அவசரத்தில் தன்னை மறந்து அவனைக் கண்ணாவென தான் விளித்ததையே அவனின் வரிகளைப் படித்த பின்னர்தான் புரிந்து கொண்டாள்...அவனின் வினாவிற்கான விடையினை அவன் வழியிலேயே அனுப்பி வைத்தவள்,அதற்கு மேலும் தாமதிக்காது உடையினை மாற்றிவிட்டுக் கீழே சென்றாள்...

..."...என் கனவுகளையும்
என்னிரு கண்களினையும்
சத்தமின்றியே
களவாடிக் கொண்ட கள்வனே
என் இருதயத்தினில்
இன்றுமட்டமல்ல..
என் இறுதிமூச்சு நின்ற பின்பும்
நீயிருப்பாய்,
கிருஷ்ணனாகவல்ல...
என்றென்றும் என் உள்ளம்
இசைக்கும் கண்ணனாக!.."....

தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (20-Jan-19, 1:14 pm)
பார்வை : 1214

மேலே