எள்ளலுற நேரும் இழவெல்லாம் உள்ளம் படிந்த பழக்கமே - பழக்கம், தருமதீபிகை 38
நேரிசை வெண்பா
கள்ளன் கொலைஞன் கடியன் கொடியனென
எள்ளலுற நேரும் இழவெல்லாம் - உள்ளம்
படிந்த பழக்கமே; பாழாகி அங்ஙன்
முடிந்தன என்க முதிர்ந்,து. 38
- பழக்கம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தம் உள்ளம் படிந்த பழக்கமே கள்வர், கொலைஞர், கடியர், கொடியர் எனப் பொல்லா நிலைகளில் திரித்து மனிதரைப் புலையாடச் செய்கின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஆன்ம நாசமான அந்நீசம் தெரிய இழவு என்றது. அங்ஙன் - அப்படி, அவ்விதம், படிதல் - தோய்தல்.
இளமையில் நெஞ்சில் தோய்ந்த ஈனப் பழக்கங்களே நீச வழக்கங்களாய் நிலைமாறி மக்களை நாசப்படுத்துகின்றன; அகத்தே அறிவுக்கண் குருடு பட்டமையால், புறத்தே திருடர், முருடர் எனப் புருடர் புலப்படுகின்றனர். இப்பழிபட்ட நிலைகளுக்கெல்லாம் பழக்கமே மூல முளையாம்; ஆகவே அத்தீய வித்துக்கள் தூய மனத்தில் தோயாதபடி தொலைத்தொழிக்க வேண்டும்.
களவு முதலிய இழிவினைகளைத் துணிந்து செய்பவரும் அவை பிழைபாடுடையன என்று தெளிவாக உணர்வர்; ஆகையால்தான் ஒளி மறைவாய் நின்று அவ்வெய்ய செயல்களைச் செய்ய நேர்கின்றனர். ’கள்ள மனம் துள்ளும்’ என்னும் பழமொழியால் அவர் உள்ளமும் உடன்படாது துடிக்கும் என்பது புலனாம். இப்படி நெஞ்சுகடி தீமைகளை அஞ்சாது செய்து அநியாயமாய் உயிர்கள் அழிநரகடையுமாறு பழிபழக்கங்கள் பண்ணிவிடுகின்றன.
பிறர் பொருளை அயல் அறியாமல் கவர்ந்து கொள்வது களவு எனப்படும். ஈனமான இக்கள்ளம் யாண்டும் எள்ளப் படுகின்றது. களவு, கொலை, பொய் முதலிய நீசங்களை மனித சமூகம் எங்கும் என்றும் வெறுத்து நிற்கின்றது; நின்றும், சிலர் நிலை திரிந்து தலைமறைவாய் அவற்றைச் செய்து வருகின்றனர் செய்கின்ற அவர்க்கும் அவை நவை என்று தெரிந்திருந்தும் பழக்க வாசனையால் உள்ளம் மழுங்கி, உணர்ச்சி குன்றி, உஞற்றி இழிகின்றார்.
பழக்கத்தின் கொடுமையும், மனிதவருக்கத்தை அது கெடுத்துவரும் கேடும் இதனால் இனிது புலனாம்.
இனிய மனிதரை இன்னாதாராக்கிக் குடிகேடு செய்யும் கொடிய பழக்கங்களை அடியோடு நீக்கிப் புனிதம் அடைக என்பது கருத்து.
நல்ல வுயிரை நவையாக்கும் புன்பிழைகள்
ஒல்லை ஒழிக உணர்ந்து. - அரும்பொருளமுதம்