பருத்தி எடுக்கையிலே

வித்தெடுத்து விதை விதைத்து,
விவசாயி, அவன் துயர் அறிந்து,
ஏக்கத்தோடு காத்திருந்தோம்
துளிர்விடும் நாள் எந்நாளோ?
"மண்ணிற் புதைந்து துவண்டாயோ?"
என்றெண்ணிச் சோர்ந்திருக்க,
துணிச்சலோடு எழுந்ததுபார்,
தாவரமே! இருவித்திலைத் தாவரமே!
தாவி வந்த புயலிலே,
தேங்கிய தண்ணீர் வயலிலே!
தேறிவிடுமோ? அழுகிவிடுமோ?
ஆயிரமாயிரம் கவலைகள் நொடிப்பொழுதினிலே,
உழைப்பொன்றையே முதலீடிட்ட நெஞ்சங்களிலே!
பார்த்துப் பார்த்துப் பாதுகாத்து,
பக்குவமாய் களையெடுத்து,
பூப்பூத்துக் காய் காய்த்ததும்,
பூரிப்படைந்தோம், மகிழ்ச்சி பொங்க!
புழு வேட்டைக்குச் சென்றிடுவோம்;
புழுக்கள் வேண்டாமென வேண்டிடுவோம்,
வயலிலே, எங்கள் வயலிலே!
நாட்கள் நகர, நாடோடிகளாய்த்
தேர்வுப் பம்பரத்தின் பிடியில்!
நித்தம் நினைக்காவிடினும்,
நினைவுகளைச் சுமந்திருந்தோம்!
நெடுந்தொலைவு கடந்து,
சிறகு முளைத்த வெண்புறாக்களாய்ச்
சிறகடித்துப் பறந்தோம்,
வெந்நிற பந்துகள் பூத்துக் குலுங்கியது கண்டு!
எங்கோ தொலைவில் எவரோ ஒருவர்
ஏதோ ஓர் நாள்
அணிவர் உன்னை ஆடையாய்..!
சற்று மாறுதலாய்.....
ஆயிரமாயிரம் எண்ணங்கள் இப்பொழுது
நொடிப்பொழுதினிலே!
விவசாயி என்று பெருமிதம் கொண்டோம்,
பருத்தி எடுக்கையிலே......
-இப்படிக்கு,
ஓர் வேளாண் மாணவி

எழுதியவர் : கலைப்ரியா சோமசுந்தரம் (2-Feb-19, 11:39 am)
சேர்த்தது : கலைப்ரியா
பார்வை : 1019

மேலே