பெற்று வளர்த்துவந்து மாதா பிதாவை வணங்கி வழிபடுக - பெற்றாரைப் பேணல், தருமதீபிகை 45
நேரிசை வெண்பா
பெற்று வளர்த்துவந்து பேணிக் கலைபயிற்றிப்
பற்று மிகச்செய்து பாராட்டி - உற்றுகின்ற
மாதா பிதாவை வணங்கி வழிபடுக
வேதா வணங்கி விடும். 45
- பெற்றாரைப் பேணல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அருமையாகப் பெற்று வளர்த்துப் பேணி அருளியுள்ள மாதா பிதாக்களை உரிமை கூர்ந்து மக்கள் போற்றிவரின் பிரமா அவரைப் பிறவியிலிருந்து நீக்கிவிடுவன்.
பெற்று என்றது பிள்ளைப்பேறு கருதி உள்ளம் உருகி அருந்தவம் கிடந்து வருந்திப் பெறுகின்ற அந்நிலை தெரிய வந்தது.
பெறுதல், வளர்த்தல், பேணல், கலை பயிற்றல், கருதியுருகல், அன்பு பாராட்டல் என்னும் அருமைப் பாடுகளை அவர்தம் உரிமையும் உழைப்பும் உணர்ந்து உருக எடுத்துக் காட்டியது.
பற்று - உள்ளப் பாசம். பிள்ளை மேல் பெற்றோர் கொண்டிருக்கும் பாசம் எவரும் பேச முடியாத பெருநிலை யுடையது. அத்தகைய உருக்கமும், இரக்கமும் இயற்கையாக வாய்ந்த உரிமையாளர் என அவர்தம் உயிர்க் கிழமை உணர வந்தது.
உணவு முதலியவற்றால் உடம்பைப் பேணியும், கல்வி போதனைகளால் உயிரை ஒளிபெறச் செய்தும் அளிபுரிந்து போற்றி வந்துள்ள அருட்பெருந்தகையாளரைக் கெழுதகைமையோடு நாளும் வழிபாடு செய்ய வேண்டும்.
வேதா = பிரமன்.
அவர் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவர் என்ற கருத்தில் மாதா பிதாவை வழிபடுவானை வேதா வணங்கி விடும் எனப்பட்டது,.

