வீட்டுத் தலைவனென நாட்டுக்குள் உன்னை உயர்த்தி ஒளிசெய்தது - மனை மாட்சி, தருமதீபிகை 55
நேரிசை வெண்பா
வீட்டுத் தலைவனென, மேதக்க தந்தையெனப்
பாட்டுத் தலைவனெனப் பாராட்ட - நாட்டுக்குள்
உன்னை உயர்த்தி ஒளிசெய்த(து) உன்மனையோ
அன்னையோ அப்பனோ ஆய். 55
- மனை மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நிலையில் தாழ்ந்து கிடந்த உனக்கு உன்றன் வீட்டுக்குத் தலைவன் என்னும் பதவியைத் தந்து, உன் பிள்ளைகளுக்குத் தந்தையெனவும், இவ்வுலக வாழ்வில் உயர்ந்த நிலைமையில் உன்னை வைத்தது உனது மனைவியா, அன்னையா அல்லது தந்தையா என்ற உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஒளி – கீர்த்தி, மனை என்றது மனையாளை.
முன்னம் தாயோடு ஒப்பு நோக்கினோம்; பின்னர் அதனினும் ஓர் உயர்வு கண்டோம்; இதில் தந்தையையும் சேர்த்து வைத்து மனைவியின் தகவு காண்கின்றோம்.
ஒரு மனிதனுக்குத் தாயினும் த்ந்தையினும் சிறந்த உரிமையாளர் இலர்; அந்த அருமையாளரினும் மனைவி அவனுக்குப் பெருமை அருளி உயர்வு தந்துள்ளாள் என இஃது உணர்த்தியுள்ளது. உயர்ச்சி நிலை உல்லாச நிலையில் உய்த்துணர வந்தது.
தாய், தந்தையரால் ‘அடே பையா!’ என்றழைக்கப்பட்டு சிறுவனாய் இருந்த உன்னைத் திருமணம் செய்து பல பிள்ளைகளுக்குத் தகப்பனாக்கி, உன் சிறுமையை ஒதுக்கி, தந்தை என்ற உயர் பதவியைத் தந்து, தலைவன், நாயகன் என பெரியவனாக ஆக்கி வைத்தது உனது மனைவியே! அதனை நினைவில் வைத்துக் கொள் எனப்படுகிறது.
எவ்வழியும் உன்னை மேம்படுத்தி உலகில் உயர்த்தியுள்ளது மனைவியாதலால் அவளை யாண்டும் மதித்துப் பேண வேண்டும் எனப்பட்டது.

