அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்

தந்தை பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும், ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய அண்ணாதுரை, புத்தகங்கள் வாசிப்பதிலும், கதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவராக திகழ்ந்தார்.

அண்ணாதுரையின் பேச்சாற்றலை, பெரியாரே பலமுறை பாராட்டியுள்ளார்; கேட்டு வியந்துள்ளார். அந்த அளவு பேச்சாற்றல் உடைய அண்ணா, பெரியாருடன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால், திராவிடர் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பை துவங்கினார்.

அந்த கட்சி, தேர்தல் அரசியலில் ஈடுபட்டது. அண்ணா பேசும் பொதுக்கூட்டத்தி, மக்கள் அலைகடலென திரள்வது வழக்கமாகி போனது. அப்போது, ஒரு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, மற்றொரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் அண்ணா.

அவரின் பேச்சை கேட்பதற்காக, பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். ஆனால், அவர் அங்கு சென்றடையவே, இரவு10:30 ஆகிவிட்டது. இதற்கு மேல் நெடுநேரம் பேச முடியாத சூழல் ஏற்பட்டது. இதை புரிந்து கொண்ட அண்ணா, ‛‛மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை’’ என 5 விநாடிகள் மட்டுமே பேசி அங்கிருந்து விடைபெற்றார்.

அண்ணாவின் சுருக்கமான அதே சமயம், பொருள் பொதிந்த வார்த்தை ஜால விளையாட்டை கேட்ட கூட்டத்தினர், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகும் கூட, நெடு நேரம் கைத்தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அண்ணா மிகக்குறைந்த நேரம் பேசிய பொதுக்கூட்டம் இதுதான்.

தன் ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதிலேயே மூழ்கியிருப்பார் அண்ணா. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹிக்கின் போத்தம்ஸ் புத்தக விற்பனை நிறுவனத்தில்,மைசூரு ராஜாவுக்கு நிகராக, புத்தகங்கள் வாங்கிய ஒரே நபர் அறிஞர் அண்ணாதான் என அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி ஆங்கில மொழியிலும் ஆழமான அறிவுடையவராய் திகழ்ந்தார் அவர். ஒரு தமிழருக்கு எந்த அளவு ஆங்கில அறிவு இருந்துவிடப் போகிறது என நினைத்த ஆங்கிலேயர்கள் சிலர், அண்ணாவின் ஆங்கில புலமையை சாேதித்து, அவரை கிண்டல் செய்ய திட்டமிட்டனர்.

அப்போது, ‛பிகாஸ்’ என்ற ஆங்கில வார்த்தை, மூன்று முறை வரும்படி ஒரு வாக்கியத்தை அமைக்கும் படி கூறினர். அதற்கு, சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்த அண்ணா, ‛நோ சென்டன்ஸ் வில் என்ட் வித் பிகாஸ், பிகாஸ் பிகாஸ் இஸ் ய கன்ஜக்சன்’ (No Sentence ends with Because; Because, 'Because is a conjunction') எனக் கூறினார். இதை கேட்ட ஆங்கிலேயர்கள், வாயடைத்துப் போயினர்.

இவ்வாறு, புத்தகங்கள் பல படிப்பதிலும், அதன் மூலம் பெற்ற அறிவால், வார்த்தை ஜாலங்களில், எதிரில் உள்ளவர்களை கட்டிப்போடும் திறமையும், அண்ணாவுக்கு இருந்தது.

எழுதியவர் : உமாபாரதி (2-Feb-19, 10:36 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 779

மேலே