ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ் 420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040

ஹைக்கூ 500 ...
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் மதிப்புரை : “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்.
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 132, விலை : ரூ. 100


******
எப்போதும் கவிதையாய் வலம் வந்து கொண்டிருக்கிற கவிஞர் இரா.இரவியின் பெயரைச் சொன்னதுமே ‘ஹைக்கூ திலகம்’ தானே என்று கேட்குமளவு தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்து வைத்திருக்கிற புகழுக்குரியவர் அவர். பக்கம் பக்கமாய எழுதிக்கூடப் புலப்படுத்த முடியாத செய்திகளைப் பளிச்சென்று உணர்த்திப் போய்விடுகிற பேராற்றல் ஹைக்கூ வடிவத்திற்கு உண்டு. அதிகமாக எழுதாமல் அளவாக மூன்று வரிகளில் அசத்தியிருக்கிற அசாத்திய திறமை கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு உண்டு என்பதை மீண்டும் புலப்படுத்துகிறது ஹைக்கூ 500 என்பதும் இப்புதிய நூல்,

விவசாயிகளைக் கொண்டாட நாம் மறந்து விட்டாலும், கவிஞர் இரவி மறக்கவில்லை. “நாட்டின் முதுகெலும்பு முறிவது முறையோ உழவன் தற்கொலை” என்ற ஹைக்கூவும், “இருக்கலாம் சேலையில் அழுக்கு, இல்லை மனத்தில் அழுக்கு, நாற்று நடும் பெண்கள்” என்ற ஹைக்கூவும், “நீங்கள் குனிந்து நட்டதால் விளைந்தன கதிர்கள் நிமிர்ந்தது நாடு” என்ற ஹைக்கூவும் இன்னும் சிலவற்றோடு விவசாயிகளைக் கொண்டாடுகின்றன.

உழைப்பை மதிக்க வேண்டும் என்கிற உன்னத கருத்தை பல இடங்களில் புலப்படுத்தியுள்ளார் கவிஞர் இரா.இரவி. “கடவுளுக்காக இல்லாவிடினும், இவருக்காக வாங்குங்கள் மண் விளக்கு” என்று வளர்ந்துள்ள வரிகள் குயவர்களின் விற்பனை வளர் உதவும் வரிகளாக விளங்குகின்றன.

புதுமைப் பெண்களுக்கு இரவி அவர்கள் மூன்றே வரிகளில் ஒரு முழக்கம் தந்துள்ளார். “அடுப்பறையில் முடங்கியது போதும், அகிலம் காண வா” எனும் வரிகள் அற்புதம். விழித்திரு அணிலே என்றாலேயே போதும், கூடவே தமிழர்களையும் உசுப்பேத்துகிற ஒரு பாடல் தமிழன் போலவே ஜல்லிக்கட்டு தொடர்பாக எத்தனையோ சிறந்த வரிகளில் தமது படைப்பும் பங்கேற்கும் வகையில், “காளைகளுக்குக் கிடைத்தது விடுதலை, மாணவக் காளைகளால்” என்ற வரிகளைத் தந்துள்ளார் கவிஞர் இரா. இரவி. விலங்குகளுக்காகப் பல கவிதைகளில் வாதாடியிருக்கிறார் .
கவிஞர் இரா. இரவி. மனித நேயம் என்பது போல விலங்கு நேயம் என்று வித்தியாசமாகவும் சிந்திந்துள்ளார். “மழை வெள்ளத்திலும் மெய்ப்பித்தார் விலங்கு நேயம்” என்று நல்லுள்ளம் ஒன்றை நெஞ்சாரப் பாராட்டியிருக்கிறார். “யாராக இருந்தாலும் தலைவணங்க வேண்டும், ஏழையின் குடிசை” நல்ல அங்கதம். எல்லாக் கவிதைகளிலுமே சமூகம் இருக்கிறது. சிறந்த சிந்தனையும் இருக்கிறது. எனவே படிக்கத் தக்கதாய் பாராட்டிற்குரியதாய் மிளிர்கிறது இந்நூல்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (13-Feb-19, 11:10 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே