கருமிகளே

கருமிகளே!!
“எண்”களை எப்போதும்
எண்ணிக்கொண்டிருக்கும் யந்திரங்களே...
சிக்கன கோட்டின் எல்லை தாண்டும்
சிகாமணிகளே...
சேமிப்பின் வாசம் தெரிந்த உங்களுக்கு
சந்தோஷத்தின் சுவாசம் தெரியவில்லையே...
கருமிகளே!!
விலை பார்த்து வாங்குவதில் கெட்டியாக இருக்கிறீர்கள்...
வீட்டு பொருட்கள் ஓட்டையாய் கிடக்கிறதே....
விரல்களின் கட்டுப்பாட்டில் பணப்பை வைத்திருக்கிறீர்கள்...
வீட்டு பெண்களின் முகங்கள் வாட்டமாய் இருக்கிறதே...
வரவை மட்டுமே எதிர்நோக்கி இருக்கிறீர்கள்... உங்கள்
உறவுகள் உதறி விலகி போகிறதே...
கருமிகளே!!
உங்கள் சந்ததிகள் அமரப்போகும்
நாளைய சிம்மாசனத்திற்கு
உட்கார கூட நேரமின்றி
உழைக்கிறீர்கள்...சேமிக்கிறீர்கள்...
தெரியுமா?
தேனீ சேமிக்கும் தேன்கூடு தேனீக்கில்லை..
நீரை குட்டையில் தேக்கினால் நீரில் குணமில்லை..
நீங்கள்
உயிரற்று போய் வெறும் உடலான பின் சந்ததிகள் கேட்கும்...
உங்கள் கல்லறையை பெரியதாய் கட்டவா ?
சிறியதாய் கட்டவா?