என் கவிதை
உணர்வுக்காக மட்டுமல்லாமல்
என் உரிமையாகவும்
தொடங்கினேன் உன்னை
ஒவ்வொரு முறையும் உன் மொழியும்
அழகும்...
சிந்தனை சிற்பங்களாய்
என் கைகளில்..
ஏனோ யாரிடமும் சொல்லவில்லை
இன்றுவரை
என் முதல் காதல் நீதான் என்று
என் வேகத்திலும் நாணத்திலும்
நானே வேண்டாம்
என சொல்லும் கோபத்திலும்
ஓவ்வொரு முறையும் உன் கைப்பிடிக்கும் போது உணர்கிறேன்
நீ கடலென்று
பகல் பொழுதில் எப்பப்போதோ .. இரவின் அருகிலிருந்து என்னை பார்க்கும்போதோ....
கள்வனாய் காதல் செய்து
களவு கற்பிப்பதிலும்
என் உடைகளின் நுனியில்
உன் வாசம் மறைப்பதிலும்
என் கன்னத்தில்
முதல் முத்தம் பதித்தாய்
என் கைவிரல் பிடித்து
அமுதம் படைத்தாய்
கனவுகளை பறித்து
தொல்லை கொடுத்தாய்
காலைகளில் கனவிற்க்கான
ஏக்கம் தெளித்தாய்
கட்டித்தழுவி கார்மேகம்
காட்டினாய்
காணும் போதெல்லாம்
வாரணமாயிரம் பூட்டினாய்
வேண்டாம் எனும்போது
வேள்வி நடத்துகிறாய்
அருகில் இருந்தோ
எனை கேலி செய்கிறாய்
என் கண் காட்சியை
கண்காட்சியாக்கினாய்
நான் காண காட்சிகளை
கனவாக்கினாய்
என் கார்குழலில்
கையிட்டு
கருவிழி நிறைந்து விட்டாய்
உன் ஒவ்வொரு தீண்டலும்
புது ஜனனம் தான் எனக்கு
என் தவம் கலைந்து
பிரசவித்தேன்... உனை
மீண்டும் ஒருமுறை
சுகமாய்....
மறைபொருளாய் என்னுள் மறைந்த
என்
மனக் கவிதையே....

