சூடா மலர்
செடியில் மலர்ந்த
எல்லா மலர்களும்
சூடப்படுவதில்லை!
காதலை சொல்லும் காதலரின் கையில் வசீகரமாய் வீற்றிருந்திருக்கலாமே,
மணமாலையின் ஓரத்தில், ஒட்டிக் கொண்டிருந்திருக்கலாமே,
அலங்கார கட்டிலில் அசைந்து கொண்டிருந்திருக்கலாமே,
அரசியல்வாதியின் கிரீடத்தில் சகித்துக் கொண்டிருந்திருக்கலாமே,
மலர்வளையத்தின் மத்தியில் மரியாதைக்காகவாவது இருந்திருக்கலாமே,
இடுகாட்டு பயணத்தில் தூவப்பட்டு, மிதிபட்டு இறந்திருக்கலாமே,
இப்படியாய்
கருகி சருகாகிப்
போகும் மலர்களுக்கு
என்னென்ன ஏக்கமிருந்ததோ!
-லி.முஹம்மது அலி