வந்த வகையோர்ந்து வாரா வழிநாடிச் சிந்தனை செய்க தினம் - குணம், தருமதீபிகை 85

நேரிசை வெண்பா

எவ்வழியும் எவ்வுயிர்க்கும் யாதும் இடரின்றி
வெவ்வழி யாவும் விலகி - இவ்வழி
வந்த வகையோர்ந்து வாரா வழிநாடிச்
சிந்தனை செய்க தினம். 85

- குணம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எந்த உயிர்க்கும் எவ்வகையிலும் எவ்விதத்தும் இடர் புரியாமல் தீய வழிகள் யாவும் விலகி இவ்வுலகில் வந்துள்ள நிலையினை உணர்ந்து இனிமேல் வாராத வழியினை நாடி நாளும் நீ சிந்தனை செய்து வருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கேடு விளைக்கும் தீய நெறிகளை வெவ்வழி என்றது.

இந்த உலகத்தில் வந்து பிறந்திருக்கும் நிலையை இவ்வழி வந்த வகை என்றது. இருப்பு வகை தெளியின் எய்து நிலை வெளியாம்.

மீண்டும் வந்து பிறவாத நெறியை வாராவழி என்றது.

இந்த உடலுடன் இங்கே தோன்றியிருக்கும் நிலையை ஓர்தலாவது பிறப்பின் பெற்றியையும் அதன் மூல காரணங்களையும் ஆராய்ந்து உணர்தல். உணரின், துன்பக் கூறுகளும் வினை விளைவுகளும் தெரியும்; தெரியவே பிறவி ஒழிதற்கு ஏதுவான தவ ஞானங்களை விழைந்து பவநிலை கடக்க நேரும்.

சீவ தயையுடையனாய்த் தரும வழி ஒழுகித் தத்துவ தரிசனம் செய்து பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுக என்றதை விலகி ஓர்ந்து நாடிச் செய்க என்றது.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356 மெய்யுணர்தல், குறள்

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற் கறிவாவ(து) எண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி. 192 அறநெறிச்சாரம்

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே - சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 7 திருவெண்பா, திருவாசகம், எட்டாம் திருமுறை.

இம்மூன்று பாசுரங்களும் ஈண்டு எண்ணத் தக்கன. வாரா வழிக்கு வழிகாட்டி இவை வந்துள்ளன. அருட்பண்பும் ஆன்ம சிந்தனையும் கூறிய படியிது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-19, 10:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே