எம்மிடத்தே வந்துதான் சார்வரென பித்தமிகு செல்வர் செருக்குகின்றார் - இனநலம், தருமதீபிகை 95

நேரிசை வெண்பா

எத்தனைதாம் கற்றாலும் எம்மிடத்தே வந்துதான்
சத்த மிகுபுலவர் சார்வரெனப் - பித்தமிகு
செல்வர் செருக்குகின்றார் சேராதார் சீரழிந்து
வல்லை ஒழிதல் மறந்து. 95

- இனநலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எவ்வளவு படித்தாலும் எம்மை யடைந்துதானே புலவர்கள் நன்மை அடைகின்றார் எனப் புன்மையுடைய செல்வர் சிலர் தம்மை மறந்து வெம்மையுடன் பிதற்றுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சில இனந்தெரியா மொழிகளை நினைந்து இரங்கிய படியிது. உணர்வு நலம் கனிந்த உத்தமச் செல்வர்களும் உளராதலால் அவரினும் வேறுபாடு தெரிய பித்தம்மிகு செல்வர் என்றது. மதி மயங்கி மனக் களிப்போடு பிதற்றலால் பித்தம் என நேர்ந்தது.

கல்விமான்களைச் சேர்ந்து செல்வர்கள் சீரும் சிறப்பும் பேரும் பெறுகிறார்கள். செல்வரால் இவர் உறுவன உளவேல், ஒரு வேளை உணவும் சிறிது பொருளுமேயாம். அழிந்து ஒழிந்து போகின்ற இழிந்தன சில கொண்டு என்றும் அழியாத புகழுயிரைத் தம் கவியுருவில் மருவி இவர் இனிது அருள்கின்றார். இந்த அருட் கொடையாளருடைய அருமை பெருமைகளை ஓர்ந்து உணராமல் ஊனமாய் உரையாடல் பெரிதும் இரங்கத் தக்கதாம்.

கபிலரைச் சேர்ந்த பாரியின் சீர் பாருலகெங்கும் இன்றும் பரவி ஒளிர்கின்றது. முடி மன்னர் பலருள் முடிவில் வாழ்வினராய் படிமன்னி உள்ளவர் பாவலரைச் சார்ந்தவரே யாவர்.

திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரைச் சார்ந்து அழியா வாழ்வு பெற்றுள்ளார். சந்திரன் சுவர்க்கி, வரபதி ஆட்கொண்டான் என்பவர் முறையே புகழேந்தியாலும், வில்லியாழ்வாராலும் எங்கும் புகழ் ஏந்தி நிற்கின்றனர். பண்டும் இன்றும் புலவரைச் சார்ந்தவரே நில வரையில் நிலைத்து நிலவுகின்றார். சாராதவர் எவ்வளவோ கோடி பேர் ஈடழிந்து போயினர்.

கலைஞானம் கனிந்த கவியரசரைச் சேர்ந்தவர் இங்ஙனம் புவி புகழப் புத்தொளி பெற்று நின்றார்; சேராதவர் சீரழிந்து இருந்த இடமும் தெரியாமல் இழிந்து ஒழிந்தனர்; ஆகவே செல்வ நிலையின் உண்மையை உணர்ந்து, கல்வியாளரின் தன்மையைத் தெளிந்து நன்மையை அடைந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-19, 10:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே