படைப்பிலக்கியவாதி திருக்குமரன் அவர்கள்

திருக்குமரன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் கவிதைப் பரம்பரையில் முருகையன், செங்கை ஆழியான், ஜெயசீலன், முகுந்தன் இவர்தம் வரிசையில் வந்த ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

திருக்குமரன் கவிதைகள்(2004), விழுங்கப்பட்ட விதைகள்(முதல் பதிப்பு: 2011, இரண்டாம் பதிப்பு:2015), தனித்திருத்தல்(2014) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு) எனும் ஆய்வுநூலும்(2006) அவரது படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன. அவரது கவிதைத் தொகுப்புகள் இந்தியாவின் முன்னணிப் பதிப்பகங்களான தமிழோசை பதிப்பகம் மற்றும் உயிரெழுத்துப் பதிப்பகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது கவிதைகள் மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல், உதயன் (தமிழ்); ஜே.டி.எஸ். லங்கா (ஆங்கிலம்); ஈனீர் பருவ இதழ் (ஐரிஷ்) மற்றும் ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவரது கவிதைப் புத்தகங்கள் பல நாடுகளில் (இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து மற்றும் கனடா) இலக்கிய விழாவில்/ புத்தகத் திருவிழாவின் போது வெளியிடப்பட்டன.

இவரது படைப்புகளில் அகமும்(காதல், தனித்திருத்தல், கையறுநிலை), புறமும்(போர்/ வீரம்) கலந்திருக்கும். மரபார்ந்த ஓசை பெரிதும் பயன்படுத்தப் பட்டிருக்கும். மேலும் எனக்கு மிகப் பிடித்த அம்சம் என்னவெனில், 95 வீதமான இவரது கவிதைகள், சொற்களைக் கொண்டு ஓவியம் வரைந்தாற் போலிருப்பதே; படிப்பவர் கண்முன் காட்சி விரியும்!

இவரது படைப்புகள் குறித்து கவிஞர் அறிவுமதி அவர்கள் “எளிய பேச்சு மொழியும், இழுத்து உள்ளமுக்கும் கவித்துவச் சுழிப்பும் கைவரப் பெற்றவர்” என்கின்றார். கவிதாயினி தாமரை அவர்களோ “ திருக்குமரன் - எனக்குப் பிடித்த ஈழத்துக் கவிஞர்; போருக்கு முன்னும் பின்னும் ஏராளமான கவிஞர்கள் உருவாகினர். திருக்குமரன் பிறவிக்கவிஞர். இவரது தமிழ் நடை தனித்துவமானது. பல கற்பனைக்கெட்டா துன்புறுத்தல்களுக்குள்ளான இவரது கவிதைகளில் அதன் வலி தெரிந்தாலும் அதனை சொல்லும் அழகியலும் வார்த்தை அடுக்குகளும் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன..” என்கின்றார்.

எடுத்துக்காட்டாக, பாரதியார் பாணியில் விடுதலையைக் கண்ணம்மாவாக உருவகித்து திருக்குமரன் அவர்கள் எழுதிய படைப்பு:

கண்ணம்மா..
——————-
எந்தை நிலம் நீயெனக்கு
ஏங்கும் மனம் நானுனக்கு
வந்த வழி நீயெனக்கு
வரும் விடியல் நானுனக்கு
எந்தநிலை தோன்றிடினும்
என்னுளெழும் வீரியமே
சொந்த மண்ணின் வாழ்கனவே
சுதந்திரமே கண்ணம்மா

கண்ணின்மணி நீயெனக்கு
காட்சியடி நானுனக்கு
ஜென்மவரம் நீயெனக்கு
ஜீவிதமாய் நானுனக்கு
மண்ணின் மணம் போல எந்தன்
மார்புளெழும் வாசனையே
எண்ணங்களின் ஊற்றுயிரே
என்னிருப்பே கண்ணம்மா

விந்தினணு நீயெனக்கு
விளையும் கரு நானுனக்கு
சந்தமொழி நீயெனக்கு
சமர்ப்பரணி நானுனக்கு
முந்தையொரு நாளிலெந்தன்
முதுசமென வாழ்ந்தவளே
விந்தையொன்று ஆகிடுமா?
விடுதலையே கண்ணம்மா..
~ திருக்குமரன்.


எழுதியவர் : தமிழ்க்கிழவி (1-Mar-19, 12:00 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 441

மேலே