மனதும் மனிதாபிமானமும்
என் மகிழ்வுந்து ஓட்டி
என் மனமின்றி விடுப்பில் செல்ல,
கடும்வாகன நெரிசல் பயத்திலும்,
நேரக்குறைபாட்டினால் நெஞ்சு படபடப்பிலும்,
அவசர முடிவெடுத்து,
அகல இருப்புப்பாதை வண்டியில் அரைமனதாய் விரைந்த பயணம்.
அறுபதைத் தாண்டிய அகவையிலும்,
அடங்காத மக்கள் நெரிசலிலும்,
குலுங்காமல், கூனலோடு கூடைதூக்கி,
அலுக்காமல் ஆப்பிள் விற்கும் ஆயா.
கூட்டத்தில் இடிபட்டு,
கூச்சத்தை இறக்கிவைத்து,
கட்டிய மல்லியும் கட்டாத பிச்சியும் விற்று
கணக்கின்றி கண்ணடிபடும் கைம்பெண்.
கண்ணின்றி படைத்த கடவுளையும்,
கனிவோடு பாடிப்புகழ்ந்து,
கருணை உள்ளவரிடம் மட்டும்
காசுவாங்கிய ஏசு மகள்.
ஊன்றுகோல் ஊன்றி வந்து,
ஒன்று பத்துக்கு கைக்குட்டை விற்கும்,
லுங்கியை அங்கியாய்க்கொண்ட
அல்லாவின் அன்புமகன்.
ஆண்மை குரலிலும் முகத்திலும் தெரிய,
பெண்மை புறமேனியில் புரிய,
பிறர்தோள்தட்டி தன்கைதட்டி காசுகேட்கும்,
பிரம்மன் படைப்பில் பிழையான படைப்பு
அடுத்தடுத்து புதுநபர்கள்.
பணம்பெற்று பொருள் தருவோரும்,
பணமீந்து புண்ணியம் பெறுவோருமாய்.
கடவுள் வஞ்சித்த பாமரரும்,
கடவுளை வஞ்சிக்கும் மாமனிதருமாய்.
பாதிப்பயணிகள் பயந்திட,
மீதிப்பயணிகள் முகம்திருப்ப,
உடலின் உயரம் குறுகி,
விரலின் நீளம் கரைந்த, அந்த
தொழுநோய்க்காரரின் துர்வாசக்கரத்தில்
தொங்கும் தூக்குச்சட்டியில்,
அதீத கவனமாய் விழுந்த பணத்தை,
அமர்ந்து அவர் எண்ணும்போது
மனது சொல்லியது நான் பாக்கியசாலி என்று.
அடுத்து வந்தது வயோதிக தம்பதி.
நடுக்கத்தில் நடையா,
நடையில் நடுக்கமா,
தெளிவாய்த்தெரியாத தேகங்கள்.
கூனலோடு குருடும் சேர்ந்த,
குடும்பம் ஒதுக்கிய சோகங்கள்.
அந்தத்தம்பதி வந்த நேரமோ,
அவர்தம்குரலில் இருந்த தயக்கமோ,
அவ்வளவாய் நிறையாத பாத்திரம்
சத்தத்தின்மூலம் சங்கடம் உணர்த்தியது.
பத்துக்குக் கீழிருந்த நாணயங்களையும்,
சக்திக்கு உள்ளிருந்த சலவைத்தாள்களையும்,
தணிக்கைசெய்து தானமளித்த என்மனதில்,
தள்ளாடும் தம்பதிக்கு பெருமதிப்புத்
தாளெடுக்க பெரிதாக மனக்கணக்கு.
அந்தநேரம்தான் அந்த அற்புதம் அரங்கேறியது.
சில்லறை எண்ணுவதை சிலநொடிகள் நிறுத்திவிட்டு,
தள்ளாடும் தம்பதியின் தகரக்குவளை வாங்கி,
தன்பங்கு தானமென்று தன்குவளை தலைசாய்த்து,
தனக்கென்று ஏதுமின்றி தானமெல்லாம்
தானமாக்க,
நல்லாயிருக்கணும் என்றவர் நாற்கரமும் உயர்த்தி வாழ்த்த
கல்லாத அந்தத் தொழுநோய் வள்ளல்,
எல்லோரையும் சோகமாக்கி,
நல்லவரையெல்லாம் நாணச்செய்து
சொல்லாமல் சொன்ன போதனையால்
பொல்லாத மனிதரும் பொசுக்கென்று உள்ளுக்குள் அழுதார்.
ச.மெய்யப்பன்