பிறந்தநாள் வாழ்த்து மகளுக்கு அம்மா

மகளிர் தினத்தில்
பிறந்த மகள் நீ
என் உடல் உயிரின்
நகல் நீ

என் கருவறை இருளில்
விளக்காய் வந்த அகல் நீ
இருண்ட என் வாழ்வில்
விடியலாய் வந்த பகல் நீ

தேவதையிடமிருந்து
தெறித்தத் துகள் நீ
தென்னையிடம் தோன்றாது
இந்த
அன்னையிடம் தோன்றிய
கள் நீ

கள் என்றால் நீ
போதையை ஊட்டியவள் அல்ல
இந்தப் பேதை வாழ்வில்
புதிய பாதையை காட்டியவள் நீ

பனி உறங்கும் பூ நீ
கனி உறங்கும் மா நீ
பண்ணுறங்கும் பா நீ
அன்பே
கொஞ்சம் கண்ணுறங்க வா நீ

கலைக்கு நீ வாணி
படித்துக்கொண்டே
களைக்காமல் வா நீ
நீயே நாளை நாடாளும் ராணி

யானையில் தாலாட்டு பெறாது
கலைவாணியின் வீணையில்
தாலாட்டு பெற்றவளே

அன்னமாய் இருந்த
என்னை அன்னையாகப்
பெற்றவளே

என் பாலை நெஞ்சில்
பாலை வார்த்தவள் நீ
பாலைக் கொஞ்சமும்
வள்ளுவரின்
முப்பாலை நெஞ்சமும்
ஏற்றவள் நீ

இனிய மகளுக்கு
மகளிர்தின பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : (8-Mar-19, 7:24 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 701

புதிய படைப்புகள்

மேலே