உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல் – நாலடியார் 80

நேரிசை வெண்பா

தான்கெடினும் தக்கார்கே(டு) எண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்(து) உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல். 80

- பொறையுடைமை, நாலடியார்

பொருளுரை:

ஒருவன் தான் கெடுவதாயிருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாதிருக்கக் கடவன்;

தனதுடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் நுகரத்தகாதவரது பொருளை நுகராமலிருக்க வேண்டும்;

வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாய் இருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாமல் இருப்பானாக.

கருத்து:

மேலோர் கெடுதலை நினைதலும், தகாதவர் பொருளை நுகர்தலும், பொய்யுரை மொழிதலும் ஒருவனுக்கு ஆகாது.

விளக்கம்:

கைத்து - பொருள்; "கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்"1 என முன்னும் வந்தது. தான் கெடுதலும் பெறுதலும் பொருளல்ல; தக்க உணர்வுகளை ஓம்புதலே பொருளாவது என்பது இச் செய்யுளால் உணர்த்தப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-19, 11:09 am)
பார்வை : 42

மேலே