காதலெனும் நதியினிலே

கால நதியினிலே.....!

அன்பே......
என்றேனும் எப்போதேனும்
இன்பமான அந்தத் தருணத்தை
நீயும் தனிமையில் நினைவு கூர்ந்ததுண்டா ......?

அன்று அந்த பௌர்ணமி பரிபூரண ஒளியில்...
நீயும் நானும் ஈரடி தொலைவில்
பட்டும் படாமலும் ஒட்டி உரசாமலும்
உருமட்டும் வேறாய் அமர்ந்திருக்க....
என்னிருவிழிகள் உன்னை வடம்பிடித்து ஈர்க்க
உன்னிருவிழிகள் என்னைப் படம்பிடிக்கத் தாக்க
இரு இதயங்கள் ஆரத்தழுவிக் கொண்டிருந்தது.....
மௌனமொழி மட்டுமே நடைமுறையில் இருக்க.....
ஓரங்க நாடகத்தின் ஒத்திகை அன்று அரங்கேறியது

பிரிந்து செல்கையில் ....
உன் கரம்பட்ட இடையோ கன்னிப்போக
உன் இதழ் பட்ட கன்னம் காய்ப்புகளாய் மாற
திறனற்று என்னை உன்னிடம் ஒப்படைக்க
விதிமீறிய உன் அன்றைய கையாடலை
வரமாய் இன்றும் நான் இரசிக்கின்றேன்....

கால நதியை கடந்து தனித்தே என் இதயம் பயணிக்கிறது.....
காட்சிகள் வெவ்வேறு நிகழ்வுகளை திரையிட்டாலும்
விழித்திரைக்குள் உன் பிம்பங்கள் மட்டுமே நிழலாடுகிறது....
உன்மத்தமாய் என்நினைவுகள் விடாது
உனையே சுற்றி கிரிவலம் வருகிறது....

உன்னுரு ஒத்தோரை எவரேனையும் விழி கண்டால்
பறிகொடுத்த உப்புக்கண்டத்தை சுத்தசைவன் தேடுவதாய்
எவரும் அறியாத வண்ணம் இதயம் தேடலில் இழைகிறது
இருவிழியோரம் கசிந்து கனவுகளில் காலம் கரைகிறது....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Mar-19, 12:20 pm)
பார்வை : 87

மேலே