மெய்ச்சொல் பேசக் கொடுத்த நாவைப் நாசப் படுத்தல் நவை - கொடுஞ்சொல், தருமதீபிகை 157

நேரிசை வெண்பா

பொய்ச்சொல் புறஞ்சொல் புலையான புன்சொல்,வாய்
வைத்தால் வசைமேல் வளருமே! - மெய்ச்சொல்லே
பேசக் கொடுத்த பெருநாவைப் பேணாமல்
நாசப் படுத்தல் நவை. 157

- கொடுஞ்சொல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொய் பேசல், புறங்கூறல், இழி மொழி பகர்தல் ஆகிய இவற்றால் பழிகள் வளருகின்றன; உண்மையே பேசும்படி கிடைத்த அருமை நாவை உரிமையுடன் பேணாமல் நீசப்படுத்தி வருதல் நாசமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நாவை நன்கு காத்து வருக என்கின்றது.

ஈனமான இழிமொழிகளை புலையான புன்சொல் என்றது. கேட்பவர் உள்ளம் துடிக்கும்படியான கெட்ட வார்த்தைகளால் கொலை பாதகங்கள் விளையுமாதலால் அந்நிலைமை உணரப் புலையும் புன்மையம் அடைகளாய் வந்தன.

சொற்களின் நீச வகைகளைத் தொகையாக நினைந்து விலக்க பொய் முதலாகத் தனித்தனியே பெயர் குறித்துக் கூறியது;

வாய் வைத்தால் வசை வளருமே! என்றது ஈனவார்த்தைகளைப் பேசுகின்றவர் ஈனராய் இழிபழியடைவர் ஆகலான் அந்த அழிவு நிலை அறியவந்தது.

வசை – பழி, மனிதன் பழியுற விரும்பான்; என்றும் புகழையே விழைகின்றான்; இயல்பாகவே உயர்விழைவுடைய அவன் மயலுழந்து செயலழிந்து இழிவுரையாடி அழிவுற நேர்கின்றான். அந்த அழிவைக் குறித்துக் காட்டி விழுமிய நிலையில் ஒழுகிவர வழி உணர்த்திய வகையாய் இது வந்துள்ளது.

மிருகப் பிறவியினும் வேறாக்கி மனிதப் பிறவியைப் பெருமைப்படுத்தியுள்ள அதன் அருமை கருதி பெருநா என்றது. கொடுத்த என்னும் குறிப்பால் அது தெய்வக்கொடையாய் வாய்த்துள்ளமையை ஓர்ந்து கொள்க

பேணுதலாவது பொய் புன்சொற்கள் யாதும் புகாமல் பாதுகாத்து மெய் இன்சொற்களுக்கே இடமாக இனிது போற்றுதல்.

நாவில் நீசமொழிகள் ஆடின் அது நிலைகுறுகி நாசப்படும். நவை - குற்றம்; நாவை நவை ஆக்காதே என்பதாம்.

யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127 அடக்கமுடைமை

என்பது வள்ளுவர் வாக்கு.

நெடிய புகழ், புண்ணியங்களை விளைத்து உயிரை உயர்த்துகின்ற இனிய நாவைக் கொடியன பேசி இழிவுபடுத்தல் மனித வாழ்வை அழிவுபடுத்திய படியாம். பூவைப் போல் நாவைப் புனிதமாகப் போற்றி வாழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-19, 8:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே