பூக்கள் தானேஉதிர்ந்தன அவள்முந்தானையில்
தென்றல் வீசியது குளிராக
தேன்மலர் விரிந்தது அழகாக
காலை புலர்ந்தது எழிலாக
கவிதை மலர்ந்தது தமிழாக !
வண்டுகள் பாடின இனிதாக
வசந்தம் வந்தது அமுதாக
தோட்டம் மலர்ந்தது பூவாக
தொல்காப்பியன் சிரித்தான் தமிழாக !
பனித்துளிகள் விடை பகர்ந்தன கதிரொளியில்
பறவைகள் பாடின அருள்மொழியில்
செங்கதிர் சிவந்தது கீழ்வானில்
சிந்தை மலர்ந்தது தமிழ் மொழியில் !
பூவை வந்தாள் புன்னகையில்
பூக்களிடம் பேசினாள் மென்மொழியில்
பூக்களை ஏந்தினாள் விரலிடையில்
பூக்கள் தானேஉதிர்ந்தன அவள்முந்தானையில் !
குவிந்த மலர்களை எடுத்து வந்தாள்
எடுத்த மலர்களை சரமாய் தொடுத்தாள்
சூடினாள் தொடுத்தாமலரைக் கூந்தலில்
சூடும்அழகை நான்பாடினேன் தமிழில் !