நேரசை அல்லது நிரையசை மட்டுமே வெண்பாவில் ஈற்றுச்சீர் ஆதல்

நேரசை மட்டுமே சீர் ஆதல்:

1. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். 38 அறன் வலியுறுத்தல்

2. தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ? 1159 பிரிவாற்றாமை

3. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14 வான் சிறப்பு

இந்த மூன்று குறள்களின் ஈற்றுச்சீரினைப் (ஏழாவது சீரினை) பாருங்கள். இவை தனிக்குறில் ஒற்று, தனிநெடில், தனிநெடில் ஒற்று எனவந்த நேரசைகள். இவை நாள் என்னும் வாய்பாட்டைப் பெறும் ஓரசைச்சீர்களாம்.

தனிக்குறில் ஒன்றுமே ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’எனும் வாய்பாட்டில் இயங்கும் நேரசையைக் காண்பது அரிது.

*அரிது என்றிருப்பதால் வரக்கூடாது என்று பொருளல்ல! ஏனென்றால், குறிலாவது, நெடிலாவது தனித்தோ, ஒற்றடுத்தோ வருவது நேரசை எனப்படும்.

நிரையசை மட்டுமே சீர் ஆதல்:

‘நேர்’ என்னும் ஓரசையே வெண்பாவின் ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’ என்னும் வாய்பாட்டைப் பெற்றது போல, நிரை என்னும் ஓரசையும் வெண்பாவின் ஈற்றுச்சீராய் நின்று ‘மலர்’என்னும் வாய்பாட்டைப் பெறும்.

குறிலிணை அல்லது குறில் நெடில் தனித்தோ, ஒற்றடுத்தோ வருவது நிரையசை எனப்படும்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4 கடவுள் வாழ்த்து

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். 430 அறிவுடைமை

அஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. 366 அவா அறுத்தல்

ஏவியது மாற்றும் இளங்கிளையும், காவாது
வைதுஎள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும், இம்மூவர்
இம்மைக்(கு) உறுதி இலார். 49 திரிகடுகம்

மேற்கண்ட பாடல்களின் இறுதிச் சீர் இல, இலர், அவா, இலார் என்பவை. இவை அனைத்தும் முறையே குறில்இணை, குறில்இணை ஒற்று, குறில்நெடில், குறில்நெடில் ஒற்று என்றவாறு இணைந்து நிரையசை ஆயின. அதே நேரத்தில் ஓரசைச்சீரும் ஆயின; மலர் என்னும் வாய்பாட்டின ஆயின.

தனிக்குறில் மட்டுமே ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’எனும் வாய்பாட்டில் இயங்கும் நேரசையைக் கொண்ட பாடல்கள்:

கல்லடி வேலுப்பிள்ளை இயற்றிய பிரிவுத் துயர்

நெஞ்சம் பதைக்குதே நீடுடல்சோர் வேறுதே
வஞ்சக்கண் ணானீர் வழியுதே – செஞ்சொற்
குலைந்துதடு மாறுதே கோமளமே யென்னை
உலைந்திடநீ வைத்ததையுன் னி. 1

செம்மங் குடிபாட்டும் ஜாக்சன் நடனமும்
அம்மையுடன் கேள்,அழா து! 1 - எசேக்கியல்

கேளான் எவர்சொல்லும் கீழிறங்க; தாத்தாவின்
தோளே குதிரமுது கு! 2 – எசேக்கியல்

கஞ்சியும் கூழும் குடிக்கவும் ஆசைதான்
மிஞ்சியே போனப ழையகறி - பஞ்சிபோல
ஆனாலும் ஏழைக்கே ஆக்கமான வேறவழி
தோனாம போச்சேசா மி! 2 - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)

Ref: வலைத்தளம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-19, 10:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 240

சிறந்த கட்டுரைகள்

மேலே