அருமையான நகைச்சுவையாச்சு
ஈறாறு ஆண்டுகள் முயன்று படித்து
ஓரைந்து ஆண்டுகளில் முதுகலை முடித்து
எண்ணிய வேலையில் அமர
ஏதேதோ திறமைகளை வளர்த்து
திண்ணிய மனதோடு அரசுத் தேர்வெழுதி
கண்ணியத்தோடே காலணா ஈட்ட - மேலதிகாரிடம்
கணக்கற்ற வசவை வாங்கி
கணக்கராய் பணியில் சேர்ந்தது முதல்
சுணக்கமின்றியே சென்றது சுத்த அரசு வேலை
சூழ பணிபுரிவோர் எல்லாம் சூத்திரம்
கற்றோர் போலே உபத்திரம் செய்ததாலே
சுதந்திரம் போயே போச்சு ஆத்திரம் பெருகலாச்சு
அனைவருக்கும் சேவை என்ற ஆழம் குறையலாச்சு
அனைத்துக்கும் பணமே என்ற ஆலமரம் செழிக்கலாச்சு
அரசியலமைப்பின் கோட்பாடு இங்கே அருமையான நகைச்சுவையாச்சு.
--- நன்னாடன்.