கருணாநிதி 1
தி மு க வை
திரு மு கருணாநிதி
என மாற்றியவர் நீர்
ஏனோ
ஐந்து முறை
ஆட்சி செய்தும்
காவிரியிலிருந்து
கொண்டுவரவில்லை நீர்
யார் சொன்னது
நீ கள்ளுக்கடை
திறந்து வைத்தவர் என்று
நான் சொல்கிறேன்
நீ கவிஞர்களுக்கு
சொல்லுக்கடை
திறந்து வைத்தவர் என்று
யாருக்கும்
அஞ்சாத அஞ்சுகத்தின்
புதல்வன் நீ
இலங்கைத் தமிழர்
கொன்று குவிக்கப்பட்டபோது
உண்ணாவிரதம்
இருந்த உன்னத
முதல்வர் நீ
நீ செய்த
உதவிக்கு யாரிடமும்
தட்சணை வாங்காத
தட்சணாமூர்த்தி
இந்தியர்கள்
அனைவரும்
இந்தி பேசும்போது
தமிழர்களை
இந்தி பேசாது
விழிக்க வைத்தவர் நீ
இந்தியா சிறந்தது
என்றவரும் நீ
இந்தி யா சிறந்தது
என்றவரும் நீ
கலை கற்றதால்
நீ கலைஞர் அல்ல
சாதி மத பேதங்களை
கலைந்ததால்
நீ கலைஞர்
நீ
இந்த மண்மீது
பற்று அதீத கொண்டவர்
அதற்காக
பூந்துறை கிராமத்தில்
மண் அள்ளலாம்
பூந்துறை கிராமத்தையேவா
அள்ளுவது
ஏழைகளுக்கு
இலவச வீடு கட்டிக்
கொடுத்தவர் நீ
ஓடாத சிமெண்ட்
ஆலையை ஓடவைத்தவர் நீ
நீ
எது செய்தாலும்
செங்கோட்டைக்கே சென்றாய்
எதிரிகள்
எது செய்தாலும்
பாலையங்கோட்டைக்கே
அனுப்பிவைத்தாய்
எம்மொழியை
செம்மொழி ஆக்கியவரும் நீயே
கனிமொழியை கவி மொழி
ஆக்கியவரும் நீயே
உன் நா
செந் நா
அது என்றும்
உச்சரித்து அண்ணா
இரு மொழி வேண்டும்
என்று எச்சரித்தது அந் நா
கலைஞர் ஒருவரே
கவிஞர்களை வளர்த்தவர்
இதை சொல்லித்தான்
ஆக வேண்டும்
கலைஞரே
நீ கவிஞர் என்பதால்
நானும் உன் தாசனே
நீ
ஐந்தடியே
ஆனாலும் தமிழை
வானுயர வளர்த்தவர்
விண்ணிலும்
நீ தமிழ் வளர்ப்பாய்
வாழ்க உன் புகழ்