தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு---------------மார்ச் 18, 2001
2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு. முழுமையான நாவல்கள் கிடைக்காத நிலையில் என் வாசிப்பு பற்றிய தன்னம்பிக்கை இலங்கைப் படைப்புகள் விஷயத்தில் உறுதிப்படவில்லை. எனவே அவை பற்றிய பட்டியல் தவிர்க்கப் பட்டுள்ளது. ஒரு சிறந்த இலங்கை விமரிசகர் அப்பட்டியலை தயாரிக்க வேண்டும்.நாவல் என்பதை வரையறுத்து நான் ஒரு நூல் எழுதியுள்ளேன் ‘நாவல் ‘ (1992), அவ்வரையறையை ஏற்கும், படைப்பூக்கத்துடன் மீறும் படைப்புகளே இங்கு பரிசீலிக்கப் பட்டுள்ளன.
இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை. இதில் நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி, வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம். இவ்வடிப்படையிலேயே இங்கு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொழித் திறனும் வடிவ ஒழுங்கும் இருந்தாலும் கூட வாழ்வு குறித்த சுயமான தேடல் இன்றி வாசகனை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட படைப்புகள் பொழுது போக்கு எழுத்தாக கருதப் பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொரு நூலைப் பற்றியும் தேவை ஏற்படின் ஒரு புத்தகம் அளவுக்கு என்னால் விவாதித்து நிறுவ முடியும் என்பதையே இப்பட்டியலின் ஆதார வலிமை என்று கூறுவேன்; இவை வாசகனின் சிபாரிசுகளல்ல, விமரிசகனின் சிபாரிசுகள்.
–ஜெயமோகன்
முதற்பத்து
தர அடிப்படையில்
1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.
3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.
4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி
5) மோகமுள் – தி.ஜானகிராமன்.
6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.
8) தலைமுறைகள் – நீல பத்மநாபன்.
9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.
10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.
அ. விமரிசகனின் சிபாரிசு.
சிறந்த தமிழ் நாவல்கள்.
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
இது முதல் தமிழ் நாவல் எனப் படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ்’ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்க வில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விமர்சனங்கள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல கூறுகிறது.
1879ல் பிரசுரமாயிற்று.
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.
இளம் வயதில் (24) இறந்துபோன இந்த வேதாந்தி பாரதம் இதழின் ஆசிரியராக இருந்தவர், விவேகானந்தரின் சீடர். முழுமை பெறாத கலைத்திறனும் முழுமைபெறாத வேதாந்தத் தேடலும் உடையதாயினும் ஆழ்ந்த கவனத்திற்குரிய முதல் நாவல். கதாநாயகனின் பாலிய விவாகத்தின் போது அவனது மறைமுகக் காமக் குமுறல்களை நளினமாகச் சுட்டியிருக்கும் இடம் ஆசிரியரின் நுண்ணுணர்வுக்கு ஆதாரம். ஆரு சாப்பட்டி அம்மையப்ப பிள்ளையின் சித்தரிப்பு அவரது நகைச்சுவையுணர்வுக்கும்.
1896ல் வெளிவந்தது.
3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.
தமிழின் சமூக சீர்திருத்த நாவல்களின் முன்னோடி. இதிகாச வேர் உள்ள பெண்ணின் சோக வரலாறு. பத்மாவதியை கணவன் ஐயப்படும் இடங்களை இன்று படிக்கையில் நூறு வருடம் கழித்துக் கூட தமிழ்ச் சமூகச் சூழலும், ஆணின் மனநிலையும் மாற வில்லை என்று தெரிய வரலாம்.
1898ல் பிரசுரமாயிற்று.
4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.
தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப் பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதா பாத்திரத்தின் முழு வாழ்க்கையை முன் வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறு காலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபார சத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.
1946ல் பிரமாயிற்று.
5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.
குறுநாவல் என்று கூறலாம். மேஜர் மூர்த்தி என்ற முன்னாள் ராணுவ வீரன் உலகம் முழுக்க சுற்றி விட்டு நூற்றாண்டுகளாக மாறாமல் இருக்கும் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்திற்கு வந்து ஒரு நாளை கழிக்கிறான். விதவைகளும், வம்பு கிழவர்களும் கூரிய அவதானிப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். உலகம் சுற்றிய ஆண், அடுக்களை விட்டு வெளியேறாத பெண்ணுக்கு (மங்களம்) வாழ்நாள் முழுக்க கட்டுப்படப் போகிறான் என்ற நுட்பமான உட்குறிப்புடன் முடியும் இந்நூல் இத்தகைய குறிப்புணர்த்தல்கள் மூலமே பெரும் படைப்பாக ஆகிறது.
1950ல் பிரசுரமாயிற்று.
6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.
உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப் பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக் காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ‘ என்ற அசரீரிக் குரல் தமிழ மரபு மனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.
1959ல் பிரசுரமாயிற்று.
7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.
அடிப்படையில் அழகிய கதை. நாவலுக்கான விரிவும் தீவிர அக ஆராய்ச்சியும் இல்லை. ஆனால் சொகுசான நடை, தளுக்கான உரையாடல்கள், உள்ளே இறங்கி உலவி வரச் செய்யும் காட்சிச் சித்தரிப்புகள், மறக்க முடியாதபடி மனதில் பதியும் கதாபாத்திரம் சித்தரிப்புகள் ஆகியவற்றுடன் தமிழ் மனதை கொள்ளை கொண்ட படைப்பு. இசையனுபவம் மொழியை சந்திக்குமிடங்கள் இந்நாவலின் உச்சங்கள். யமுனா என்ற (தி.ஜானகிராமன் முடிவின்றி காதலித்த இலட்சிய பெண்ணுருவான) மராட்டிய பேரிளம் பெண்ணை ஒரு தலையாக காதலிக்கும் பாபு என்ற இசைக் கலைஞனின் புரிந்து கொள்ள முடியாத (அவனால்) தாகத்தின் கதை.
1956ல் பிரசுரமாயிற்று.
8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.
மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறி தவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை, வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் ‘காமம் கனிந்த’ அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.
1967ல் பிரசுரமாயிற்று.
9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.
தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. சுவாரஸியமான நடையில் அழகிய சித்தரிப்புகளுடன் அபூர்வமான சம்பவங்களுடன் ஒரு நகரத்து தெருச் சந்திப்பில் நிற்கும் புளிய மரமொன்றின் வாழ்வையும் வீழ்ச்சியையும் கூறும் இந்நாவல் குறியீட்டு ரீதியான வாசிப்பில் இந்திய வரலாற்றில் இலட்சியவாதத்தின் யுகம் ஒன்றின் முடிவைக் குறிக்கிறது. காற்றாடித் தோப்பு தோட்டக் கலையாளனால் பூந்தோட்டமாக ‘ஒழுங்கு’ பண்ணப் படுவதைப் பார்த்தால் நேரு யுகத்தின் யத்தனம் புரியக் கூடும் இன்றளவும் தொடரும் இந்திய சமூக அரசியல் தரப்புகளின் கச்சிதமான பிரதி விஷயங்களை இந்நாவலில் காணலாம்.
1966ல் பிரசுரமாயிற்று.
10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.
மேற்கத்திய இருத்தலியத்தையும் மேற்கத்திய எழுத்தாளனையும், மையமாக்கிய இலக்கிய வடிவத்தையும் பிரதியெடுத்து தமிழில் செய்யபட்ட முயற்சி. சலிப்பூட்டுமளவு அந்நியத் தன்மை கொண்டது, முன்னுதாரணங்களை படிக்கப் படிக்க இச்சலிப்பு ஏறுகிறது. அதேசமயம் அழகிய மொழியின் நுட்பமும், ஜாலமும், அபூர்வமான கவித்துவ வேகமும் இதை தவிர்க்க முடியாத படைப்பாக ஆக்குகிறது. ஜெ.ஜெயின் பிரச்சினைகள் ஃபிரான்ஸில் மட்டும் செல்லுபடியாகக் கூடியவை அவனது நடையோ தமிழின் சொத்து வடிவ அளவில் நாவலின் சாத்தியங்களை மிகவும் பயன்படுத்திய, கலை ரீதியான விவாதம் என்று வர்ணிக்கத் தக்க படைப்பு.
1978ல் பிரசுரமாயிற்று.
11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.
விக்ரமார்க்கன் கதை முதலிய கிராமிய சாயல் கொண்ட கதைக் கொத்துகளின் பாணியில் கரிசலின் பரிணாம வரலாற்றை உதிரிக் கதைகளின் தொகுப்பாக கூறும் நாவல். தொகுப்பம்சமாக இருப்பது ஆசிரியரின் கதை நாக்கு மட்டுமே. கிராமியம் சித்தரிப்புகளில் பெரும் கலைஞனுக்குரிய ‘கைமணம்’ உண்டு. விவசாய சமூகம் ஒன்று ‘உருவாகித் திரண்டு’ வருவதன் சித்திரம் அபூர்வமானது.
1976ல் பிரசுரமாயிற்று.
12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்
தமிழ் இயல்புவாத (நாச்சுரலிச) நாவல்களுக்கு முன்னோடியான (குறு)நாவல். நாகம்மாள் ‘கெட்டிஎலும்புள்ள’ கிராமத்து விதவை. அவளுடைய காதல் கொலையில் முடிகிறது. கிராமத்து ‘இட்டேறிகளை’, கானல் பறக்கும் கரிசல் மண்ணை, ராகம் போடும் கொங்கு மொழியை ஆசிரியர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை விட சிறப்பாகவே அளித்திருக்கிறார்.
1942ல் பிரசுரமாயிற்று.
13. பிறகு —— பூமணி
தமிழ் தலித் நாவல்களின் முன்னோடி. ஆனால் பிரச்சார நெடியற்ற தகவல் செறிந்த, அதனாலேயே உத்வேகம் குறைவான, யதார்த்த நாவல். சுதந்திரத்திற்கு பிறகு என்ற தொனி வரும் கதை. ‘பிறகும்….. ‘ என்ற பொருள் படுகிறது.
1976 ல் பிரசுரமாயிற்று.
14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.
பதற்றமில்லாத நடையில் தமிழன் பார்க்க மறுக்கும் அவல இருள்களை கூறிய, பரபரப்பூட்டிய நாவல். பரபரப்பு மங்கி விட்டதற்கு இன்று தகவல்சார் இதழியல் இதைவிட அதிர்ச்சி தர ஆரம்பித்திருப்பதே காரணம். தமிழ் சமூகத்தின் எல்லா முகங்களும் இதழ்கள், முதல் மருத்துவம் வரை முகம் காட்டி எள்ளி நகையாடப் படுவதனாலேயே இன்று இப்படைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கந்தன் என்ற ‘ரவுடி’யின் ஒரு நாளில் நமது சமூக கட்டுமானமே அவனை எதிர் கொள்கிறது. ஒளிவிடும் முகப்புகள் கொண்ட அழகிய ‘இல்ல ‘ வீடுகளைப் பார்த்தபடி தெருவில் ஏங்கி நடக்கும் கந்தனை சித்தரிக்குமிடத்தில் மட்டும் ஆசிரியர் தன் பார்வையை தானே தாண்டிச் செல்கிறார்.
15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.
எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பார்ப் பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது.
1964ல் பிரசுரமாயிற்று.
16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.
கதை சொல்லியே வட்டார வழக்கில் நேரடியாக பேசியதனால் கவனம் பெற்று பரபரப்பூட்டிய நாவல். இன்று இதன் முக்கியத்துவம் உறவுகளின் வலையில் ஒரு கண்ணியாக மட்டுமே இருத்தல் சாத்தியமான அன்றைய வாழ்வின் முழுச்சித்தரிப்பையும், இது தருகிறது என்பது தான். தெரிந்ததை மட்டும் எழுதுவது நீல.பத்மநாபனின் பலம். தெரியாத இடங்களுக்குப் போக கற்பனையால் முயலாதது பலவீனம்.
1968ல் பிரசுரமாயிற்று.
17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.
மனைவியை மேலாளனுக்கு தாரை வார்க்க நேர்ந்த அனந்தன் நாயரின் உள்ளக் குமுறல்களை கொட்டி ஒரு வகையில் ஆழமான மன பாதிப்பை உருவாக்கும் படைப்பு இது. சூடாறாத மனதுடன் நாயர் சுற்றிச் சுற்றி வரும் திருவனந்தபுரம் அவரது மனதின் புறத் தோற்றமேயாக மாறி குறியீடாக விரிகிறது.
1971ல் பிரசுரமாயிற்று.
18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.
திருவனந்தபுரம் காலை பஜாரில் கடை வைத்திருக்கும் ஆ.மாதவன் நாற்பது வருடங்களாக திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே எழுதுபவர். தெருவில் வாழும் ‘உயிர் வாழ்தல் போட்டி’ அதன் ஆழத்து இருள் சலனங்கள். இந்நாவலும் அதுவே. இந்நாவலில் வரும் சாமியார் தன் வீட்டில் மாட்டியுள்ள நிர்வாணப் பெண்ணின் படத்திலிருந்து நாவலை மீண்டும் புதிதாகப் படிக்கலாம். ஆ.மாதவனின் சாதனை என்றால் இப்படைப்புதான்.
19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.
நகர்சார் வாழ்வை ‘எண்ணி எடுத்து வைக்கப்பட்ட’ சொற்களில் கூறும் அசோகமித்திரன் படைப்புகளில் முக்கியமானது இது. நகரம் வகுப்பு வாதத்தால், அதிகாரப் போட்டியால், உள்ளூர கொதிக்கும் போது கதை சொல்லியான சிறுவன் கிரிக்கெட் விளையாடுகிறான்; சினிமா பார்க்கிறான். இரு இணைகோடுகளாக நகரும் இவ்விரு விஷயங்களும் இறுதியில் தொட்டுக் கொள்கின்றன. பையன் ‘முதிர்ச்சி’ அடைகிறான். அசோகமித்திரனின் அழகிய ‘செகன்ட்ராபாத்’ ‘லான்சர்பாரக் ‘ சுயசரிதைச் சிறுகதைகளுடன் இணைத்து வாசிக்கையில் மேலும் விரியும் பிரகாசமும் பெறும் படைப்பு.
1978ல் பிரசுரமாயிற்று.
20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்
‘மாலதி ‘ ‘மாறுதல்’ முதலிய குறுநாவல்களுடன் மானசீகமான தொடர்பு உடைய நாவல் இது. நகரத்துக் குடிநீர்ப் பஞ்சம். கூடவே ஜமுனாவின் பாலியல் ரீதியாக சுரண்டப் பட்ட அவல வாழ்வு. குடிநீர் குழாயில் சாக்கடை வரும் இடத்தில் இரு விஷயங்களும் பரஸ்பரம் தொட்டுக் கொள்ள தண்ணீர் விரிவடைகிறது. ஆழமான குறியீடாக ஆகிறது.
1973ல் பிரசுரமாயிற்று.
21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.
சமத்காரம் மிக்க கதை சொல்லியான நாஞ்சில் நாடனின் கூரிய அவதானிப்பு கதாபாத்திரங்களையும் சூழலையும் கண் முன் நிறுத்த, அங்கதம் அதில் ஊடுருவிச் செல்லும் படைப்பு இது. வேளாள வாழ்வின் பெருமிதமும், சரிவும், செழிப்பும், அற்பத்தனமும் மாறி மாறித் தெரிந்து நமது புதையுண்ட ஞாபகப் பதிவுகளை கிளர்த்துகின்றன. தங்கைகளை கரையேற்ற பணக்கார வீட்டில் பெண்ணெடுத்த சிவதாணு வீட்டோடு மாப்பிள்ளையாகி படும் அவமானங்களில் நாஞ்சில்நாடனின் பாசத்திற்குரிய கருவாகிய, ’வறுமையின் அவமானம்’ கூர்மை கொள்கிறது.
22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.
மீரான் கி.ரா வகையிலான ஆர்ப்பாட்டமான கிராமியக் கதை சொல்லி. அவருடைய கூரிய பார்வையில் வரும் கிராமத்தின் அகமானது புறச்சித்தரிப்புகளுக்கு அகப்படாதது. அறியாமையும், அடிமைத்தனமும், சுரண்டலும் ஒரு பக்கம் சுயமரியாதைக்கான போராட்டம், களங்கமற்ற ஆர்வம், பிரியம் நிரம்பிய உறவுகள் என்று இன்னொரு பக்கம். இவற்றுக்கு இடையேயான ஓயாத போராட்டம்— மீரானின் கிராமம் இதுதான். அவருடைய எல்லா நாவல்களும் கடலோர கிராமத்தின் கதைகளே.
1989ல் பிரசுரமாயிற்று.
23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.
வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப் படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரே சமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதி மானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிக மிக முக்கியமானது.
1991ல் பிரசுரமாயிற்று.
24.) காகித மலர்கள் —— ஆதவன்
நகர வாழ்வின் அலுப்பையும் அதை வெல்ல மூளையை பயன்படுத்தும் போது ஏற்படும் எண்ணவலைப் பின்னலையும் நகர்புறக் கதாபாத்திரங்களின் கோழைத்தனத்தையும், சுய மையப் போக்கையும், அழுத்தமான எள்ளலுடன் சித்தரிக்கும் ‘டெல்லி ‘ நாவல்.
25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.
அறிவு ஜீவித்தனத்திற்கும், அன்றாட வாழ்வின் அபத்தத்திற்கும் இடையேயான இடைவெளியில் முன்நுனியால் கிண்டிப் பரிசோதித்தபடி நகரும் இந்திரா பார்த்தசாரதியின் பார்வை தமிழுக்கு முன்னோடியானது. அறிவு ஜீவி அன்றாட வாழ்வை நடிக்கிறார். இல்லை அன்றாட வாழ்விலிருந்தபடி அறிவு ஜீவிதனத்தை நடிக்கிறாரா? தீர்மானிப்பது சிரமம். ‘கடைசியில வழி தவறின புருஷன் பெண்டாட்டிட்டயே திரும்பி வரான் ‘ — மாமி, ‘அதான் அவனுக்குத் தண்டனையா ? ‘ —- அறிவு ஜீவி மாமாவின் பதில் உரையாடல்களில் பாசாங்கற்ற துல்லியம் இந்திரா பார்த்தசாரதியின் பலம். பிற்பாடு வந்த நகர்சார் எழுத்தாளர்களின் இந்த ‘கையமைதி ‘ இழக்கப் பெற்றுவிட்டது. காரணம் சுஜாதாவின் ஆர்ப்பாட்டமான கூறல் முறையின் தவறான பாதிப்பு.
26.) அபிதா —- லா.ச.ரா.
நடனமாடும் நடையில் ஒரு சமகால ஐதீக கதை இது. ‘சரிக ரிகம…. சக்கு இப்போது எப்படியிருப்பாள்? ரீதி கெளளையின் ஒரு சொகுசு வளைவு ரீம் ம்… சக்கு – இப்போது — ‘ என்று தாவிச்செல்லும் நடையைத் தாண்டி செல்லாமலிருந்தால் ரசிக்கலாம்.
1970ல் பிரசுரமாயிற்று.
27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.
மதமற்ற துறவு என்ற ஓர் இலட்சிய நிலை நோக்கி ஹென்றி எனும் வெள்ளையக் கதாபாத்திரத்தை ஏவுகிறார் ஜெயகாந்தன்.
1973ல் பிரசுரமாயிற்று.
28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.
நமது பாலியல் பாவனைகளுக்குப் பலியாகும் பெண்களின் வாழ்வு பற்றிய ஆய்வு எனத் தொடங்கி, சீதையில் தொடங்கும் இந்தியப் பெண்ணின் தனிமையை காட்டி முழுமை பெறுகிறது. இந்த நாவல் தீவிரமே இதன் பலம்.
1973ல் பிரசுரமாயிற்று.
29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.
கொங்கு மண்ணின் மண்ணையும், மண்ணில் முளைத்து எழுந்த மனிதர்களையும் காட்டும் மார்க்ஸிய நாவல் கோஷமிடத் தொடங்கும் இரண்டாம் பகுதி வரை அற்புதமாக உள்ளது. வெளியூர் சென்ற விவசாயி அங்கு தூறல் விழவே தன் ஊரில் மழை பெய்ததா என்று அறியும் பரபரப்புடன் மரங்களையும், மண் மணத்தையும் கவனித்தபடி பரபரப்புடன் திரும்பிவரும் காட்சியை தமிழிலக்கியத்தின் வெற்றிகளில் ஒன்று எனலாம்.
1975ல் பிரசுரமாயிற்று.
30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.
தொழிற்சாலைக்காக ஒரு புளிய மரத் தோப்பு அழிக்கப் படுவதன் நுட்பமான விவரணை மட்டும் தான் இந்த நாவல். ஆனால் அதன் குறியீட்டு தன்மை மூலம் சமகால இந்தியாவின் ஆழமான அகச் சரிவு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. மாயவரம் பக்கமுள்ள ஒரு ஊர் சாயாவனம், நிழல் காடு அவ்வூரின் இறைவனுடன் அழிக்கப்படும் இக்காட்டை தொடர்பு படுத்தும் போது மேலும் விரிவு கொள்கிறது.
1969ல் பிரசுரமாயிற்று.
31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.
ஒரு அரசியல்வாதியின் எழுச்சி வீழ்ச்சியை புராணகால அசுரன் ஒருவரின் வளர்ச்சி வீழ்ச்சிபோல, மிகக் குறைவான விவரணைகளுடன் அடங்கிய தொனியில் கூறும் படைப்பு பெரியதோர் தார்மிக வீழ்ச்சி இத்தனை சாதாரணமாக கூறப் படுகையில் அதன் வீச்சு விரிவடைகிறது.
1978ல் பிரசுரமாயிற்று.
32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.
ஒரு குமரி மாவட்டக் கிராமத்தை பிராந்திய அடையாளங்களற்ற பெளராணிகச் சாயல் தந்து, ஆனால் நவீனத் தன்மை கெடாமல் சித்தரித்து அதன் ஒழுக்க, அற வீழ்ச்சியை ஆழ்ந்த அங்கத்துடன் கூறும் இந்நாவல் அதன் விசித்திரத் தன்மை காரணமாகவே முக்கியமானது.
1966ல் பிரசுரமாயிற்று.
33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.
இரண்டே இரண்டு நாவல்கள் மட்டும் எழுதியவர் ப.சிங்காரம். போர்க்காலத்தில் ம்லேசியாவில் வியாபாரத்திற்குச் சென்று அன்றைய வரலாற்று அலைகளால் அடித்துச் செல்லப்படும் ஒரு இளைஞனின் சாகசக் கதை இது. ஆனால் அங்கத்தின் கூர்மை நுட்பமான மனத் தருணங்களை சென்றடையும் மொழி வீச்சு ஆகியவற்றின் அடிப்படையில் இது தமிழின் மிகச்சிறந்த நாவலாக பலரால் கருதப்படுகிறது.
34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.
புயலிலே ஒரு தோணியின் இரண்டாம் பாகம் போன்ற படைப்பு. புயலிலே ஒரு தோணியில் பொங்கி எழுந்த உணர்வுகள் மெல்ல மெல்ல வடிந்து வாழ்வின் சாரமென்ன என்னும் வினா நோக்கி குவிகிறது ஆசிரியர் பார்வை. ‘எல்லாம் எண்ணுகையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும் ‘ என்ற தாயுமானவர் பாடலில் சென்று முட்டி முடிவடைகிறது இந்த சிறு (குறு?) நாவல்.
35.) நினைவுப்பாதை — நகுலன்.
நகுலனின் நினைவுப் பாதை ஒரு அந்தரங்க, ‘காமா சோமா’ டைரி. அதில் அவரே நகுலன்- நவீனன் என்று இரண்டாக பிரிகிறார். ஒருவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது. ஒருவன் சுசீலாவை எண்ணி கவிதை எழுதுகிறான். லெளகீகர்களை கிண்டல் செய்கிறான். ஒரு படைப்பு என்ற வகையில் இதை முக்கியமானதாக ஆக்குவது அவ்வப்போது மொழி கொள்ளும் அபூர்வமான கவித்துவப் பாய்ச்சல். கூரிய அங்கதம்.
1972ல் பிரசுரமாயிற்று.
36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.
கள ஆய்வு செய்து எழுதுவது ராஜம் கிருஷ்ணனின் பாணி. அவரது பல கதைகளை மேலோட்டமான தகவல்களாக ஆக்குவது இந்த அம்சம். இவ்வம்சமே மணி அம்மாள் என்ற உண்மையான புரட்சிவாதியின் வரலாற்றை புனைவாக ஆக்கும் போது பெரிதும் கை கொடுக்கிறது.
37.) சிதறல்கள் —- பாவண்ணன்.
பாண்டிச்சேரி ரோடியர் மில் பூட்டப்பட்டபோது அதை நம்பி வாழ்ந்த மக்களின் படிப்படியான சிதைவுகளும், அழிவும் சித்தரிக்கப்படும் படைப்பு இது. அம்மக்கள் தொழில் யுகத்தை விவசாயிகளின் யுகத்தில் நின்று எதிர் கொள்கிறார்கள். மில் அவர்களுக்கு தொழில் கூடம் மட்டுமல்ல; மண்ணைப் போலத் தான். அதனுடன் உணர்வு ரீதியான உறவுண்டு அவர்களுக்கு. அது நஷ்டம் வந்தால் மூடப் படுவது தொழில் யுக நியாயம். கூடவே அம்மக்களும் அழியும் விவசாய யுக நியாயத்தை அதனால் புரிந்து கொள்ள முடியாது. தமிழ்/இந்திய மனதிற்கும் நவீன யுகத்திற்கும் உள்ள உறவை அவலச் சுவையுடன் கூறும் படைப்பு இது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் நிகழும் சோக வரலாறு. எளிமையான நேரடிச் சித்தரிப்பு.
1990ல் பிரசுரமாயிற்று.
38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.
புலம் பெயர்தல் தமிழனின் அடிப்படையான இயல்பு. ஏனெனில் தமிழகத்தில் விவசாயமும், நெசவும் அவனை காப்பாற்றவில்லை. இந்தியா முழுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் பல லட்சம் அப்படி சென்று ஹைதராபாதில் கூடணைந்து அங்கு இழையவும் முடியாமல் விலகவும் முடியாமல் தன் மண் பற்றிய ஏக்கத்துடன் வாழும் ஒருவனின் எளிய நேரடியான கதை.
1991ல் பிரசுரமாயிற்று.
39.) தூர்வை —– சோ. தருமன்.
தலித் வாழ்க்கை பற்றிய நாவல்களில் ஒரு அம்சம் தூக்கலாக உண்டு அவர்களுடைய அவல் வாழ்வை தார்மிக ஆவேசத்துடன் எடுத்து நம்முன் வீசும் தோரணைதான் அது. இந்நாவல் தலித்துகளுக்கு மட்டுமேயுரிய களியாட்டங்களையும், உயர்சாதி கலாச்சார மரபுகளை எள்ளிநகையாடும் அங்கத விளையாட்டுகளையும், மரபுகளையும், சடங்குகளையும் சித்தரிக்கிறது. அத்தியாயப் பகுப்பு இல்லாத நேரடியான கூறல் முறை ஒரு தலித்திடம் மூன்று மணி நேரம் கதை கேட்ட உணர்வைத் தருகிறது.
1997ல் பிரசுரமாயிற்று.
40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.
அமெரிக்கப் பாணியில் எடிட்டர்களால் எழுத்தாளர் இயக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாவல். அதன் விளைவான கன கச்சிதத் தன்மையே நாவலின் பலம். அதுவே ஒரு வித அவநம்பிக்கையையும் உருவாக்குகிறது; இதன் யதார்த்த சித்தரிப்பு அம்சம் மேலோங்கி கதை வீச்சு சுருங்கிவிட்டது. ஆனால் இதன் ஒப்பாரிப் பகுதிகளில் தெரியும் மொழி வீச்சு கவித்துவமானது.
1996ல் பிரசுரமாயிற்று.
41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.
கலைத்துப் போடப் பட்ட வாழ்க்கைச் சித்திரங்களும் சம்பவக் குதறல்களும் நிரம்பிய இந்த ‘முதிராத ‘ நாவல் ஒரு அம்சத்தால் முக்கியமாகிறது தமிழ் மனதின் அகக் கோணலை, (பெர்வர்ஷன்) கூற முயன்றமையால்.
1997ல் பிரசுரமாயிற்று.
42.) ரப்பர் —– ஜெயமோகன்
தனித் தனி சித்தரிப்புகளை ஒரு சட்டத்தில் தொகுத்து குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாற்று, சமூக, பண்பாட்டு மாற்றத்தைச் சித்தரிக்கும் நாவல். உடனடிப் பழைய வரலாறு நினைவுகளாக, பழங்கால வரலாறு ஐதீகங்களாக, சமகால வரலாறு அதிகார ஆட்டமாக காட்டப் படுகிறது. இத்தகைய மாற்றத்தை சுட்டும் குறியீடாக குமரி மாவட்டத்திற்கு ரப்பர்ப் பயிர் வருகை தருவது எடுத்தாளப் பட்டுள்ளது. தமிழில் எண்பது தொண்ணூறுகளில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது என்று விமரிசகர் என்.எஸ்.ஜெகன்னாதன் எழுதினார்.
1991ல் பிரசுரமாயிற்று.
43.) விஷ்ணுபுரம் —–ஜெயமோகன்
ஐதீகத் தொன்மை அணுகு முறையின் வழியாக இந்திய வரலாற்றையும், தத்துவ மரபையும் ஆய்ந்து மாற்று சித்திரம் ஒன்றைத் தரும் முயற்சி. அதன் முழுமை, மொழியின் தீவிரம், குறியீட்டு கவித்துவம் காரணமாக பெரிதும் பாராட்டப் பட்டது. ‘நூறு வருடத் தமிழிலக்கியத் தளத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இலக்கிய முயற்சி’ என்று மதிப்பிட்டார் அசோகமித்திரன்.
1997ல் பிரசுரமாயிற்று.
44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.
சமகால வரலாற்றுத்தனம் வழியாக அற அடிப்படைகளின் பல்வேறு வினாக்களுக்குள் புகுந்து செல்லும் விரிவான கலவை வடிவ நாவல். சோவியத் ருஷ்யாவின் உடைவைப் பற்றியதாக இருப்பினும் இதன் அடிப்படை வினா வன்முறைக்கும், கருத்தியலுக்கும் இடையேயான உறவே. தமிழில் இதற்கிணையான அரசியல் படைப்பு ஒன்று எழுதப்பட்டதில்லை என்றார் விமர்சகரான ராஜமார்த்தாண்டன். உச்சகட்ட கவித்துவமும் அறிவுத்தள இயக்கமும் இணைவது என்றார் ஞானக்கூத்தன்.
1999ல் பிரசுரமாயிற்று.
45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.
மகாபாரதத்தை நுட்பமாக ஊடுருவி பல்வேறு கவித்துவ மறு வாசிப்பு தந்து தொகுக்கும் புதுவகை நாவல். ஏகலைவனால் அம்பு தொடுக்கப் பட்டு, நாவறுந்து குரலிழந்த நாயின், மெளனத்தால் நிறையும் காட்டை இந்நாவலில் காணலாம். அது வியாசனுக்கு தரப்படும் வலுவான அடிக்குறிப்பு. அவ்வப்போது வரும் அபூர்வமான கவித்துவம் இதன் சிறப்பென்றால் கவனமற்றதும் சோர்வூட்டும்படி செயற்கையானதுமான மொழி நடையும் உதிரிகளின் தொகுப்பாக உள்ள வடிவமும் பலவீனங்கள்.
2000த்தில் பிரசுரமாயிற்று.
இரண்டாம் பட்டியல்
[பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.]
1) பசித்தமானுடம் — கரிச்சான் குஞ்சு
2) ஜீவனாம்சம்7 — சி.சு.செல்லப்பா
3) இதயநாதம் — ர.சிதம்பர சுப்ரமணியன்
4) புத்ர — லா.ச.ரா
5) நித்ய கன்னி — எம்.வி.வெங்கட்ராம்
6) வேள்வித்தீ — எம்.வி.வெங்கட்ராம்
7) வேரோட்டம் — கு.ப.ராஜகோபாலன்(முழுமையல்ல)
8) செம்பருத்தி — தி.ஜானகிராமன்.
9) மலர் மஞ்சம் — தி.ஜானகிராமன்.
10) அன்பே ஆரமுதே — தி.ஜானகிராமன்.
11) கோபாலகிராமத்து மக்கள் — கி.ராஜநாராயணன்.
12) குழந்தைகள் ஆண்கள் பெண்கள் — சுந்தர ராமசாமி.
13) சட்டி சுட்டது — ஆர். ஷண்முக சுந்தரம்.
14) வெக்கை — பூமணி
15) குறத்தி முடுக்கு — ஜி. நாகராஜன்.
16) புனலும் மணலும் — ஆ.மாதவன்.
17) உறவுகள் — நீல பத்மநாபன்.
18) கரைந்த நிழல்கள் — அசோகமித்ரன்.
19) கடல்புரத்தில் — வண்ணநிலவன்.
20) மிதவை — நாஞ்சில்நாடன்.
21) என்பிலதனை வெயில் காயும் — நாஞ்சில்நாடன்.
22) சதுரங்க குதிரை — நாஞ்சில்நாடன்.
23) சாய்வு நாற்காலி — தோப்பில் முகமது மீரான்.
24) கூனன் தோப்பு — தோப்பில் முகமது மீரான்.
25) வானம் வசப்படும் — பிரபஞ்சன்.
26) மகாநதி — பிரபஞ்சன்.
27) என் பெயர் ராமசேஷன் — ஆதவன்.
28) தந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி.
29) சுதந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி.
30) பஞ்சும் பசியும் — ரகுநாதன்.
31) தேனீர் — டி. செல்வராஜ்.
32) மலரும் சருகும் — டி. செல்வராஜ்.
33) விசாரணை கமிஷன் — சா. கந்தசாமி.
34) அவன் ஆனது — சா. கந்தசாமி.
35) இடைவெளி — சம்பத்.
36) முப்பது வருஷம் — து.ராமமூர்த்தி.
37) நேற்றிருந்தோம் — கிருத்திகா.
38) புகைநடுவில் — கிருத்திகா.
39) தர்மஷேத்ரே — கிருத்திகா.
40) மெளனப்புயல் — வாசந்தி.
41) பிளம் மரங்கள் பூத்துவிட்டன. — வாசந்தி.
42) குருதிப்புனல் — இந்திரா பார்த்தசாரதி.
43) திக்கற்ற பார்வதி — ராஜாஜி.
44) ஆத்துக்குப் போகணும் — காவேரி.
45) நல்ல நிலம் — பாவை சந்திரன்.
46) ஈரம் கசிந்த நிலம் — சி.ஆர்.ரவீந்திரன்.
47) மானாவாரி மனிதர்கள் — சூரியகாந்தன்.
48) உப்பு வயல் — ஸ்ரீதர கணேசன்.
49) கொக்கு பூத்த வயல் — மோகனன்.
50) நிழல் முற்றம் — பெருமாள் முருகன்.
தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்களுக்கும் ஒரு பட்டியல் அவசியம். கறாரான இலக்கணப்படி இவை நாவல்கள் அல்ல. ரொமான்ஸ் எனப்படும் எழுத்துக்களே. மிகு கற்பனை அல்லது உணர்ச்சிக் கற்பனை படைப்புகள் என மொழி பெயர்க்கலாம்.
தமிழில் இவை இரண்டுவகை. வரலாற்று ஐதீகங்களின் மறு ஆக்கமாக வருபவை வரலாற்று மிகு கற்பனை படைப்புகள். (Historical Romances) பிற படைப்புகளை சமூக மிகு கற்பனை படைப்புகள் (Social Romances) என்று கூறலாம்.
வரலாற்று மிகு கற்பனைப் படைப்புகள்
1) பொன்னியின் செல்வன் — கல்கி.
2) சிவகாமியின் சபதம் — கல்கி.
3) மன்னன் மகள் — சாண்டில்யன்.
4) யவன ராணி — சாண்டில்யன்.
5) கடல்புறா — சாண்டில்யன்.
6) வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்.
7) ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்.
8) திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்.
9) வேங்கையின் மைந்தன் — அகிலன்.
10) மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி.
வரலாற்று மிகு கற்பனை படைப்புகள்
இரண்டாம் பட்டியல்
1) பார்த்திபன் கனவு — கல்கி.
2) ஜலதீபம் — சாண்டில்யன்.
3) கன்னிமாடம் — சாண்டில்யன்.
4) மூங்கில் கோட்டை — சாண்டில்யன்.
5) ராஜ முத்திரை — சாண்டில்யன்.
6) கயல்விழி — அகிலன்.
7) வெற்றித்திருநகர் — அகிலன்.
8) ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா.
9) கோபுர கலசம் — SS. தென்னரசு.
10) ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி.
11) ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி.
12) தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி.
13) பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்.
14) நந்திபுரத்து நாயகி — விக்ரமன்.
15) திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்.
சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகள்
1) தியாகபூமி — கல்கி.
2) பிரேம ஹாரம் — பி. எஸ். ராமையா.
3) அலைஓசை — கல்கி.
4) மலைக்கள்ளன் — நாமக்கல் கவிஞர்.
5) தில்லானா மோகனாம்பாள் — கொத்தமங்கலம் சுப்பு.
6) கேட்டவரம் — அனுத்தமா.
7) உயிரோவியம் — நாரணதுரைக்கண்ணன்.
8) அழகு ஆடுகிறது — கு. ராஜவேலு.
9) முள்ளும் மலரும் — உமா சந்திரன்.
10) கல்லுக்குள் ஈரம் — ர.சு. நல்ல பெருமாள்.
11) அணையா விளக்கு — ஆர்வி.
12) கள்ளோ காவியமோ — மு. வரதராசன்.
13) கண்கள் உறங்கவோ — மாயாவி.
14) சின்னம்மா — எஸ். ஏ. பி.
15) மலர்கின்ற பருவத்தில் — எஸ். ஏ. பி.
16) பிறந்த நாள் — எஸ். ஏ. பி.
17) கூந்தலிலே ஒரு மலர் — பி. வி. ஆர்.
18) ஜி. எச் — பி. வி. ஆர்.
19) குறிஞ்சித் தேன் — ராஜம் கிருஷ்ணன்.
20) வளைக்கரம் — ராஜம் கிருஷ்ணன்.
21) இன்பப் புதையல் — பி. எம். கண்ணன்.
22) படகு வீடு — ரா. கி. ரங்கராஜன்.
23) ப்ரஃபசர் மித்ரா — ரா. கி. ரங்கராஜன்.
24) ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது — புஷ்பா தங்கத்துரை.
25) குறிஞ்சி மலர் — நா. பார்த்தசாரதி.
26) பொன் விலங்கு — நா. பார்த்தசாரதி.
27) சமுதாய வீதி — நா. பார்த்தசாரதி.
28) பாவைவிளக்கு — அகிலன்.
29) சித்திரப் பாவை — அகிலன்.
30) பெண் — அகிலன்.
31) கல்லும் மண்ணும் — க. ரத்னம்.
32) பனிமலை — மகரிஷி.
33) அரக்கு மாளிகை — லட்சுமி.
34) காஞ்சனையின் கனவு — லட்சுமி.
35) தரையிறங்கும் விமானங்கள் — இந்துமதி.
36) பாலங்கள் — சிவசங்கரி.
37) ஒரு மனிதனின் கதை — சிவசங்கரி.
38) நிற்க நிழல் வேண்டும் — வாசந்தி.
39) ஜெய்ப்பூர் நெக்லஸ் — வாசந்தி.
40) வாஷிங்டனில் திருமணம் — சாவி.
41) ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் — பாக்கியம் ராமசாமி.
42) மிஸ்டர் வேதாந்தம் — தேவன்.
43) கரையெல்லாம் செண்பகப்பூ — சுஜாதா.
44) அனிதா இளம் மனைவி — சுஜாதா.
45) பிரியா — சுஜாதா.
46) மெர்க்குரிப் பூக்கள் — பாலகுமாரன்.
47) கரையோர முதலைகள் — பாலகுமாரன்.
48) பந்தயப்புறா — பாலகுமாரன்.
49) அது ஒரு நிலாக்காலம் — ஸ்டெல்லா புரூஸ்.
50) வாழ்வெனும் மகாநதி — கண்ணன் மகேஷ்.
Save
Share