குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- ----------எஸ்சுரேஷ்

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.



இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் எஸ்.சுரேஷ் எழுதிய பாகேஸ்ரீ என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து விஷால்ராஜா பேசுகிறார்.
=============================================================================================================
எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’
=====================
ரா. கிரிதரன்

பாகேஶ்ரீ ராகம் மென்சோகம் நிரம்பியது; சுயபச்சாதாபம் நிரம்பியது எனும் குறிப்போடு தொடங்கும் கதையில் அதே உணர்வுகளோடு பலவிதமான பாடல்களும் அவற்றின் ரசனையும் சுட்டப்படுகின்றன. கதைசொல்லியின் பழைய நினைவுகளாகக் கதை தொடங்குகிறது. நிஜாம் பகுதியில் நடப்பது போலச் சொல்லப்பட்ட கதை பழைய ஹைதராபாத்தின் சாயா கடைகளில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருப்பது கதையை நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகிறது. டீக்கடை என்றாலே அரட்டை என ஆகிவிட்ட காலத்தில் ரம்மியமான இசையனுபவமும் கலை விவாதங்களும் நடக்கும் பொது அரங்குகளாகவும் அவை இருந்த காலத்தை நினைவூட்டியதில் பாகேஶ்ரீ ராகம் போல ஒரு வித ஏக்கம் நமக்கும் தோன்றியது. நிஜாம் சாம்ராஜ்ஜியத்தின் எச்சங்களாக எஞ்சிய சிலவற்றுள் ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கான இடமும், கலாரசனையும் இருந்தாலும் அவையும் இன்று காணாமல் போய்விட்டதில் மனித மனநிலையின் இறக்கத்தை அசைபோடுகிறது கதையின் பின்புலம்.

பொதுவாக ராகங்களுக்கு என இருக்கும் இயல்புகளில் எனக்கு அதிக ஈர்ப்பு கிடையாது. சிலவகை ராகங்கள் காலையில் பாட உகந்தவை, சில இரவு நேர ராகங்கள் எனப் பிரித்திருப்பதே ஒருவித வசதிக்காக மட்டுமே தவிர அவை எழுப்பும் உணர்வுகளுக்கும் அந்த நேரங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் முழுவதாக நம்பவில்லை. இது ஒரு தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இசையின் இயல்பு அகவயமானதுதான். ஆனால், ராகம் என்பது ஒரு உணர்வுநிலை. அதனால், சில குறிப்பிட்ட வகை மன இயல்புகளோடு இயைந்து போகும் தன்மை கொண்டது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இரவு நேரத்தில் கவிழும் அமைதியில், உலகமே தூங்கும்போது பரமாத்மாவைப்போல சாட்சியாக விழித்துப்பார்க்கும் நிலையில் பாடல்களின் உணர்வுகள் நமது மன இயல்புடன் இணைந்துகொள்ளும். அப்படி இரவின் இயல்பைக் கூட்டும் ராகங்கள் இருக்கலாம். பாடப்பாட ஒருமித்த மன நிலை கூடும்.

பழைய நிஜாம் அரசாட்சியின் மிச்சங்கள் கலாச்சார அடையாளங்களாகவும், கலப்பு மொழியாகவும் எஞ்சி நிற்கும் ஒரு பின்னணியில் நடப்பது கதைக்குப் பெரிய பலத்தைத் தருகிறது. தெலுங்கு, உருது மொழிகளும் கலந்திருப்பது கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ரெண்டாவதாக, கதையின் கட்டமைப்பு மிகக் கட்டுக்கோப்பான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது ரசனை சமநிலையைப் பூர்த்தி செய்கிறது. கதையில் எவ்விதமான உணர்ச்சிகளும் தனித்துத் தெரியவில்லை. ஹ, ஹ ஹ என விரக்தியாகத் தெரியும் சிரிப்பு கான் சாகிப் சத்தியம் கேட்டபோதும் கதைசொல்லியின் மனதில் ஒலித்திருக்கலாம். அதே போல, கரானாவுக்கு வாரிசாகத் தனது மகன் உருவாக வேண்டும் எனும் வெறி உருவாவதும் ஒரு அரக்கத்தனமாகத் தெரியாமல் மிக இயல்பான ஒன்றாக ஆசிரியர் காட்டியிருப்பது உணர்ச்சியற்ற கூறல்முறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டைக்காட்டுகிறது. இதுவே கதையை ஒரு சமநிலையில் பார்க்க உதவுகிறது. சிறுகதையில் அதீத உணர்வு பாவனைகள் சமநிலையைக் குலைத்துவிடக்கூடும். கற்பூர டப்பாவில் பாதுகாத்த பண வாசனை போல கதையின் இயல்பை மாற்றிவிடும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட சிறப்பியல்புகளே கதை அடுத்த கட்டத்துக்குச் செல்ல தடையாக இருக்கின்றன. உணர்ச்சியற்ற நடையில் கூறப்படும் பெரும்பாலான கதைகளுக்கு நேரும் அவலம்தான் என்றாலும் பல இலக்கியவாதிகள் இக்கட்டத்தை வேறொரு வழியில் தாண்டிவிடுகிறார்கள். வாழ்வின் அபத்த நிகழ்வாகவோ, உச்சகட்ட முரண்பாட்டுக் களமாகவோ நிகழ்வுகளைத் தொகுக்கும்போது உணர்ச்சியைக் காட்டாத கதைக்கும் ஆழம் கூடிவிடுவதைப் பார்க்கலாம். “எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது”, எனத் தொடங்கும் ‘மரப்பசு’ நாவல் நாயகியின் உணர்ச்சிகள் வேகக்கார் போட்டி போல உச்சகட்ட தீவிரத்தையே தக்கவைத்திருந்தாலும் கதையை நாடகத்தனமாக மாற்றாமலிருக்க அம்மணியின் இயல்புக்கு மாறான காதலைப் புகுத்தி முரண்பாட்டை அதிகப்படுத்துகிறார் தி.ஜா. இரவு தாமதமாக வருவதால் வெளி கேட்டைத் திறக்காமல் போகும் வீட்டுக்காரம்மாவின் கோபத்தை எதிர்கொள்ளும் அபத்தத்தை விவரிப்பதில் கோபி கிருஷ்ணன் உணர்ச்சியைக் காட்டாது கதையை வாசகர்க்கு கடத்த முடிவதோடு கதாபாத்திரங்களின் ஆழத்துக்கும் புக வழி ஏற்படுத்த முடிகிறது.

பாகேஶ்ரீ கதையில் ஏகலைவன் போல சத்தியம் கொடுத்துவிடும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தில் தொடங்கும் கதை அவனது மனதின் ஆழத்தில் உறங்கும் சோகத்தைக் காட்ட எவ்விதமான முயற்சியையும் எடுக்கவில்லை. ஹ,.. ஹ… ஹ… எனச் சிரிக்கும் வகையில் ஒருவித விட்டேத்தியான மனநிலையைக் காட்டுவதாக எடுத்துக் கொண்டாலும் அது தீவிரமாகச் சொல்லப்படாதது அவனுடன் ஒன்றிவிடமுடியாதபடி தள்ளிவைக்கிறது. கலையின் உச்சகட்டத் தீவிரத்தைக் கைகொள்ளும் ஒருவன் அதன் வெளிப்பாட்டுக்குத் தடைவரும்போது முட்டிப்பார்க்கவோ, உடைந்து நொறுங்கிப்போவதோ, தீவிரமான கழிவிரக்கத்தில் புகுந்துகொள்வதோ இயல்பானது. அவன் பாட முடியாமல் முணுமுணுப்பதாக கதையின் தொடக்கத்தில் வந்தாலும் அந்த சத்தியம் அவனது இயல்பை எப்படி மாற்றியது எனச் சொல்லிவிட்டு பின்கதையில் அதே இசை அவனுடைய குதூகலத்தை ஊட்டியது எப்படி எனச்சொல்லியிருந்தால் பாடல்களில் காட்டப்பட்ட மென்சோகம் சொல்லாமலேயே நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். இந்த மாற்றம் நடக்காததால் கதையில் சுட்டிக்காட்டப்படும் பாடல்களுக்கும் கதைசொல்லியின் உணர்ச்சிக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதுவே கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் ஆசிரியரே பாடலின் உணர்வுகளைச் சொல்வது போல அமைந்துவிடுகிறது. ஆசிரியரே பாடலை மென்சோகம் எனச் சொல்லும் தேவையும் ஏற்படுகிறது.

நுண்கலைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் வரும் கதையில் அக உணர்வுகளுக்கு எந்தளவு மதிப்பு தரவேண்டும்? நுண்கலையின் வெளிப்பாடு எதற்குப் பயன்படவேண்டும் என கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையலாம். திசைகாட்டியைப் போல கதையில் வரும் புறக்காட்சிகள் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், கதைக்கு மேலதிக பொருளை அளிப்பதற்காகவும் பயன்படும். தமிழுக்கு கூடுதலாக அகப்புற சித்தரிப்புகள் ஆடிப்பிம்பமாகப் பார்க்கும் மரபை கதைகளுக்குப் போட்டுப்பார்த்து வளர்த்தெடுத்தும் வழிமுறை கைவசம் உண்டு. அக உணர்வுகளும் புறக்காட்சிகளும் உண்மையில் ஆடிப்பிம்பமாகச் செயல்படும் விதத்தில் ஒருங்கிணையும்போது நம்பகத்தன்மையும் கதைக்கு மேலதிக பொருளையும் அவை கொண்டுகூட்டி அளிக்கும். இக்கதையில் பாடல்களின் தன்மையும் அதன் உணர்வுநிலைகளையும் கதாபாத்திரங்கள் மீது சுமத்திப்பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை ஆசிரியர் அதிகம் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

சத்தியம் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாடகீய ஆட்டம் மூலமாகவோ, கதைசொல்லியின் தீவிரத்தன்மையைக் கூட்டும் அகச்சித்தரிப்புகள் மூலமாகவோ, வாழ்வின் முரணைக் காட்டும் விதத்தில் விட்டேத்தியான மனநிலை மூலமாகவோ, அபத்தத்தின் வெளிப்பாடாகவோ இந்த இடைவெளியை அவர் நிரப்பியிருந்தால் பாகேஶ்ரீ மிகச்சிறந்த கதையாக மாறியிருக்கும்.

-------------

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (4-Jun-19, 5:59 am)
பார்வை : 46

மேலே