குற்றத்தின் நேர்மைகள்

இரவு கொஞ்சம் கொஞ்சமாய் இருளில் ஒடுங்கி கொண்டிருந்த நடு இரவில் நான் எனக்கு துணையற்று  விழித்து கொண்டுதான் இருந்தேன்.

சாபத்தின் நாவு தீண்டிய நாள் இதுதான் என்பது போலவும் இந்த இருளிலும் மீதி இருந்த வெளிச்சம் சினத்துடன் என்னை பார்ப்பது போலும் உணர்ந்தேன்.

காலை முதலே நான் திக்கற்றவனை பின் பற்றும் ஒரு பரிதாபமானவனை போலவே என்னை உணர முடிந்தது.

வெகு வேகமாக செயல் புரியும் மந்த நிலைக்கு ஈடு கொடுக்க முடியாது வீழ்ந்த பொழுதில்தான் சக்கரமாய் சுற்றிக்கொண்டு மதியம் வெள்ளை தீயைப்போன்று அகன்ற விழிகளுடன் என்னை பார்த்த கணம் முதல் நான் சுருண்டு விழுந்தேன்.

அந்தியும் முன்னிரவும் என் மனதை பறித்துக்கொண்டன. யாரிடமும் எதுவும் பேசவில்லை.

நெடுநாட்களாக எல்லோரும் எப்போதும் பேசுவதெல்லாம் ஒன்றைப்பற்றியோ அல்லது அதைப்பற்றியோ மட்டுமே. வேறொன்றில் சொற்களும் அர்த்தங்களும் இல்லையா அல்லது மறந்து போய் விட்டனரா?

மறந்து போகவும் நினைக்கவும் என்னால் முடியாது. என் மனம் மட்டும் அதை திறம்பட செய்கிறது. நான் மனதை எரிக்க எரிக்க அது பஞ்சபூதத்தின் விதை போல் என்னிடமே வாரிச்சுருட்டி விளைகிறது.

அனைத்தும் இருக்கின்றபோதுதான் எதுவோ இல்லை. யாவரும் சூழ்ந்திருக்கையில் எவரோ இல்லை. இப்படித்தானே மனம் சூல் கொள்கிறது?

இதோ இரவை என் மனம் விழுங்கி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
உதித்து உதித்து மடியும் சிந்தனைகளில் அவளும் அதுவும் அஃதும் நெளிகிறது. நான் கண்களை மூடிக்கொள்கிறேன்.

இது பிரார்த்தனையா வேண்டுகோளா.? எதுவாயினும் என்ன...மனம் நீங்க வேண்டும். அதனுள் நிறைந்து கரைந்து தடுமாறும் நூறு மனங்களும் கூட.

நீங்குதல் எனும்போதுதான் நான் துளைக்கப்படுகிறேன். நாளும் ஒளியும் என்னை விதியின் மயக்கத்தில் கொண்டு சேர்க்கிறது. என்னை தாண்டி செல்வோர் அனைவருமே எனக்குள் ஊடுருவிய பின் புதைந்தும் போகின்றனர். என் மனம் ஒரு கிடங்கை போல் இந்த உலகையும் உன்னையும் உள்வாங்கி கொள்கிறது.

இந்த நள்ளிரவில் நான் அமைதியின் பெரும் சோகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அது பிழிந்து விடப்பட்ட ஒரு காட்சியில் உருகி வழிகிறது.

"இரவு கூட்டம் கூட்டமாக திரிகிறது. அதன் ஆயிரமாயிர மனங்களிலும் என் மனதும் உன் மனதும் நேற்று வரையிலான பகலை கவ்விக்கொண்டும் குதறிக்கொண்டும் இருப்பதை காண்கையில் எதற்கெல்லாமோ நகைப்பை சூடும் உனக்குள் வெட்கம் மூளாதா" என்று அவள் கேட்டதன் கொடும் உண்மை இப்பொழுதில் சுட்டு வதக்குகிறது.

என்ன செய்ய முடியும்? சதா நான் என்னோடு அலைகிறேன். என்னுள் நானே முயங்குகிறேன். ஒரு தீவென கற்பனை உன்மத்தத்தில் முழு கடலையும் சுமை அறியாது தூக்கி கொள்கிறேன்.

இதுவரையில் பார்த்திருந்த மரணங்கள் ஒவ்வொன்றிலும் நானோர் உறவென உருக்கொண்டவன்தான்.
அம் மரணங்கட்கு அவ்விடத்தில் அத்தினத்தில் நான் அழுதூறியது இல்லை என்றாலும் மனம் தீப்பிடித்து குதித்ததை மறக்க இயலவில்லை.

காட்டின் மொழி எதுவோ அது மனதின் பாடல் ஆகிறது. விழிப்பின் பிராண்டலில் அது தன்னையே உரித்து என்னை பிளக்கிறது.

மனதை மனம் விட்டு வைப்பதில்லை. இரக்கமற்ற விலங்கு ஆடிய வேட்டையின் வெறி மிகுந்த கடைசி துடிப்பின் சாட்சி.


அதில் எந்த நொடியெல்லாம் விழிப்பு கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் அவள் தெரிகிறாள்.

அந்த நாளெல்லாம் பட்டு உதிரும் நொடிகளில் எல்லாம் அவள் மட்டுமே.
சாட்டையின் தாகம் உதிரத்தில் குளிர்வது போலவே என் மனமெங்கும் குற்றத்தின் நேர்மைகள் அவளோடு புணர நாசி புடைக்க இருள் என்னை எழுப்பி விடும்.

நான் விழிப்பது போன்றுதான் மனம் விழிக்கிறது. அவள் அழித்து போய் இருந்தது யாரோ வரைந்து வைத்த ஒன்றையா? அல்லது என்னிடம் இருந்த அவளையா?

மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இரவும் பகலுமாகிய இரண்டு முள்ளும் காலத்தை நகர்த்தி என் மனதில் பாய்கிறது.

எங்கெங்கோ சென்று தொலையும் மனதை சிக்கனமான சேதத்துடன் காப்பாற்றிக்கொண்டே இருக்கும் காலம்...என்னை மட்டும் பார்க்கும்போது தனக்கு தானே சிரிக்கிறது.

எழுதியவர் : ஸ்பரிசன் (3-Jun-19, 11:51 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 152

மேலே