பூமணி –---------------------ஆளுமை, சிறுகதை, வாசகர் கடிதம்
ஜெ
இன்று பூமணியின் தகனம் கதை வாசித்தேன்ங்க. நான் இலக்கியத்தில் வாழும் வயதானவர்களில் ஒரு கனிவான தந்தையைக் கண்டு கொண்டேன். அதில் வெள்ளத்தாயின்னு ஒரு பொண்ணு வருவா சார், வீட்டில் வேலை செய்தவரின் மகள், ஒரு உறவும் இல்லாவிட்டாலும் தன் மகள் போல அவளை நேசிக்கிறார் ஏட்டையா. கதையின் முடிவில் அந்தப்பெண் சாதிக் கலவரத்தால் இறந்து விடுவாள். இந்தக் கதை சாதிக்கலவரத்தின் தீங்கினைப் பற்றி. ஆனா ஒரு இடத்திலும் எங்கும் வெறுப்பு இல்லை. இந்த மாதிரி நபர்கள்தான் சமூகக் கட்டுரை எழுத வேண்டும். உண்மையான சமூக அக்கறை என்பது இதுதான். அன்பின் வழி நின்று எழுதும் பூமணி போன்றவர்களை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவரைக் கவுரவப்படுத்தும் உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் சார்.
ராதாகிருஷ்ணன்
கோவை
அன்புள்ள ராதாகிருஷ்ணன்,
நன்றி.
பூமணியின் கலையின் இயல்பே அதுதான். அவர் எதையும் மிகைப்படுத்திச் சொல்வதில்லை. அவர் சொல்பவை சமூகச் சித்திரங்கள். புறவயமான உலகம். புறவயமான உலகைச் சொல்லும் இலக்கியம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு மதிப்பதிகம். எந்த அளவுக்கு அது மென்மையாக சமநிலையுடன் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
ஜெ