நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி

பொதிகையிலே புறப்பட்டுப் பொருநை யாற்றில்
***புரண்டுவந்து தேகத்தைத் தழுவுந் தென்றல் !
மதிமயக்கி நாளெல்லாம் தானும் சேர்ந்து
***மலர்களுடன் புதுராகம் பாடுந் தென்றல் !
அதியழகு மலையினின்று துள்ளி வீழும்
***அருவியிலே தான்நனைந்து குளிருந் தென்றல் !
புதியதொரு சுகந்தந்து சிலிர்க்க வைத்துப்
***பொலிவான பசுங்கொடியை அசைக்குந் தென்றல் !!

இருள்சூழ்ந்த வேளையிலும் அமைதி கொஞ்ச
***இதயத்தை இதமாக வருடுந் தென்றல் !
உருவத்தைக் காட்டாமல் மறைத்த வாறே
***உள்ளத்தைக் கனிவாக உரசுந் தென்றல் !
தருக்களொடு வாஞ்சையுடன் கதைகள் பேசித்
***தலைகோதித் தாலாட்டி மகிழுந் தென்றல் !
வரும்வழியில் இசைமழையைச் சுருட்டி வந்து
***மனம்நிறைத்துத் தாளமிட வைக்குந் தென்றல் !

கடலலையில் காதலுடன் கலந்தெ ழுந்து
***கன்னியரின் உடைகலைக்க உலவுந் தென்றல் !
குடகுமலைச் சாரலொடு மிதந்து வந்து
***குற்றால அருவியிலே குளிக்குந் தென்றல் !
நடைபழகி மெதுவாகச் சுற்றி வந்து
***நகரத்தார் மனம்கொள்ளை கொண்ட தென்றல் !
அடடடடா என்னசுக மென்றே பாட
***அணைத்துவிட்டுச் சொல்லாமல் அகலுந் தென்றல் !!

மல்லிகையின் மொட்டுடைத்து மாலை வேளை
***மணந்திருடித் தன்னோடு கொண்டு செல்லும் !
புல்நுனியில் பனித்துளியை ஆட விட்டுப்
***புன்னகைத்துத் தன்முகத்தைப் பார்த்துச் செல்லும் !
நெல்மணிகள் நிலம்நோக்கித் தாழ்ந்தி ருக்க
***நிமிர்த்திவிட முட்டிவிட்டு முன்னே செல்லும் !
முல்லைவண்ண முகில்மீது மோகங் கொண்டு
***முத்தமிட்டே உறவாடுந் தென்றல் காற்றே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Jun-19, 2:01 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 58

மேலே