இரவு
பெண்ணை இரவு பொருளாய்
பார்க்கும் மயான வாழ்
மக்காள்.
கசடர்கள் கசக்கிய
குங்குமப் பூக்களின்
கதை கேளீர்
சைலஜா
முகத்தில் மணநாளிரவில் காயம்
மோகத்திலா... இல்லை கோபத்தில்
உதடு வீங்கியது,
உன்மத்தமா....இல்லை வன்மத்தால்
வீக்கம் காமத்திலா இல்லை கயமையில்
முகத்தில் வரிகள் .... அகத்தில் வலிகள்
ஆணானவத்தின் முகவரிகள்
பெண்ணுறுப்புக்கள் தாக்கப்படுகிறது
அவள் வலிகள் உடலில் ஆரம்பித்து
மனதில் பரவுகிறது.
பூவையின் பூங்கனவை
புதைத்தான் புதுக்கணவன்
எல்லாமென நம்பியவளின்
கல்லான மனம், புழுத்த குணம்.
ஆசிபா
கடத்தி, மூர்ச்சையாக்கி, துன்புறுத்தி,
வன்புணர்ந்து, கழுத்து நெறிப்பட்டு
உடல் சிதைந்து காட்டில் வீசப்பட்டது
ஒரு மிருகமல்ல, 8 வயது சிறுமி.
இக்கொடுமையாயின் மேடை ஒரு கோயில்
சிறுமியின் கதறல்கள் காற்றில் கரைய
அங்கே
கடவுள் படைத்த மனிதர்களுமில்லை
மனிதன் படைத்த கடவுளர்களுமில்லை
ராஜலட்சுமி
தாயின் எதிரில் தலையை இழந்தாள்.
ஜாதியின் அர்த்தமும், நீட்சியும்
தெரிந்தால் இல்லை.
அவள் ஜாதி அவளை தின்று விட்டது
ஒரு தாயின் கையில் மகளின் தலை
நம் நாகரீகத்தை உரித்தது.
நமக்து ஒருநாள் செய்தியானது.
ஸ்நோலின்
உயிரழித்தல் போரில் நேருக்கு நேரே
துப்பாக்கி குண்டு அவள் பின் தலையில்
ஓட்டுரிமை வயது எட்டும் முன்னே
தன நாட்டுரிமைக்கு போராடினாள்
17 வயது சரித்திரம் அவள்
இறந்தது அவளில்லை, ஜனநாயகம்.
பூக்கள் கிழியும் முன்
அவர் வாழ்வும் இயல்பானதே
கிழிந்த பின் .....
உடைந்த தந்தம் அவர் வாழ்வு
உடைந்தாலும் தந்தமே.
இச்சூழலை ஆபரணமாய்
அணிந்த சமூகத்தின் அங்கம் நாம்.
அறியாமையில் அமைதி வாழ்வு
வாழ்வதாய் ஒரு மயக்கம்.
மயக்கம் இருளானது
இருளென்ற இரவானது
யார் தந்தமும் உடையலாம்.
மாறவில்லை இது
மாறாது
மாற்ற முடியாது
தயாராவோம்
எதிர்க்க இல்லையெனினும்
ஏற்க.....
புண்ணான புன்னகையுடன்
இரவாக இருக்கும்
பெண்நிலை விடியும் வரை.