பொய்யாமை 1 - கலி விருத்தம் - வளையாபதி 32
கலி விருத்தம்
மா கூவிளம் கூவிளம் கூவிளம்
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்(டு)
ஐய மின்றி யறநெறி யாற்றுமின்
வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக்
கௌவை யில்லுல(கு) எய்துதல் கண்டதே. 32 வளையாபதி
பொருளுரை:
பொய் கூறுவதினின்றும் அகன்று விட்டுவிடுங்கள்;
பொய்யாமை என்னும் அணிகலனை எப்பொழுதும் அணிந்துகொண்டு நாடோறும் நன்னெறியிலே நின்று நல்லறங்களை முடிந்த அளவில் செய்யக் கடவீர்;
இவ்வாறு அறஞ்செய்து வாழுபவர் தம் வாழ்நாளில் தமக்கு எந்தவொரு துன்பமேனும் வருதலின்றி இம்மையினும் இனிது வாழ்ந்து மறுமையினும் துன்பமில்லாத நல்லுலகமாகிய சுவர்க்கத்தை அடைதல் உறுதி.
இவ் உண்மை சந்தேகத்திற்கிடமின்றி திறவோர் கண்ட மெய்க் காட்சியாகும்.
விளக்கம்:
பொய்யின் நீங்குமின் என்று சொல்வது மட்டுமின்றி, பொய் சொல்லா ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள் என்பவர் மீண்டும் பொய்யின்மை பூண்டு கொண்டு என்கிறார். பொய்யின்மை பூண்டு கொண்டு என்றதனால், அதனை அணிகலனாக உருவகித்திருக்கிறார். பொய்யின்மை எனினும் வாய்மை எனினும் ஒன்றாகும்.
பொய்யாமை அறங்களுள் சிறந்தது என்பதனை,
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. குறள், 300 வாய்மை
பொருளுரை:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மையை விட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
எனவும்,
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. குறள், 299 வாய்மை
பொருளுரை:
புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
எனவும்,
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. குறள், 297 வாய்மை
பொருளுரை:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால், பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட அவனுக்கு நல்லதாகிவிடும்.
எனவும்,
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும். குறள், 296 வாய்மை
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.
எனவும் வரும் அருமைத் திருக்குறள்களால் உணரவேண்டும்.